3 வயதில் தொடங்கிய திரை வாழ்க்கை.. சிறு வயதிலேயே தேசிய விருது.. எந்த நடிகையும் தொட முடியாத உயரத்தில் குட்டி பத்மினி!

நடிகை குட்டி பத்மினி மூன்று வயது முதல் நடிக்க தொடங்கி தற்போது 67 வயதிலும் இன்னும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்றால் அது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. தமிழ் சினிமாவில் ’அபலை அஞ்சுலம்’ என்ற படத்தில் குட்டி பத்மினி அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது வெறும் மூன்று தான். அந்த காலத்தில் பத்மினி மிகப்பெரிய நடிகை என்பதால் இவருக்கு படக்குழுவினர், குட்டி பத்மினி என பெயர் வைத்தனர். அந்த பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது.

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல் என மூன்று தலைமுறை நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார் கடந்த 1965 ஆம் ஆண்டு குழந்தையும் தெய்வமும் என்ற திரைப்படத்தின் நடித்த நிலையில் அந்த படத்திற்கு அவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற தேசிய விருதும் கிடைத்திருந்தது.

ஏராளமான படங்களில் அவர் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார். அதே போல அவர் நடித்த படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றியையும் பெற்றிருந்தது. குழந்தை நட்சத்திரமாக மட்டுமின்றி அவர் இளங்குமரியாக மாறிய பின் குணச்சித்திர கேரக்டர்களிலும் நடித்திருந்தார். எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருடன் அவர் பல படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்பட பலமொழிகளில் நடித்துள்ளார்.

திரைப்படங்களை விட அவர் சீரியல்களில் தான் இன்னும் வெகுவாக பிரபலமானார். நடிகை குட்டி பத்மினிக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் புகழ் கிடைத்தது என்றால் அது சீரியல்களில் தான் என்று சொல்லலாம். தூர்தர்ஷனில் உருவான பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். அது மட்டுமின்றி சில சீரியல்களை அவர் தயாரித்து இயக்கவும் செய்துள்ளார்.

இதே போல, கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான குருதிக்காலம் என்ற வெப்தொடரிலும் அவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். தற்போது உருவாகி வரும் இரண்டு சீரியல்களிலும் அவர் நடித்து வருகிறார். குட்டி பத்மினியின் சாதனையை பாராட்டி கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கியது. மேலும் திரை உலகில் மட்டுமின்றி அவர் அரசியலிலும் தனது பங்களிப்பை செய்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு அவர் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார். இப்போதும் அவர் பாஜகவில் தான் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குழந்தை நட்சத்திரமாய் அறிமுகமாகி அதன் பின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் பல படங்களில் நடித்து பின்னர் அம்மா, அக்கா ஆகிய கேரக்டர்களிலுல் நடித்து சின்னத்திரையிலும் தனது முத்திரையை பதித்த குட்டி பத்மினி இன்னும் தனது திரையுலக வாழ்வை தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்பது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.