இனி இது ஷ்யாம் பிரச்சனை இல்ல, என் பிரச்சனை.. மிரட்டிய தயாரிப்பாளருக்கு கேப்டன் விஜயகாந்த் கொடுத்த பதிலடி..

தமிழ் சினிமாவில் நல்ல உள்ளம் படைத்த நடிகர்களை காண்பது மிக மிக அரிதான ஒரு விஷயம் தான். அவ்வப்போது அப்படிப்பட்ட நடிகர்கள் தோன்றி இருந்தாலும் அதில் மிக முக்கியமான நடிகர் என நிச்சயம் கேப்டன் விஜயகாந்தை கைகாட்டி விடலாம். நடிகர் என்ற ஒரு தொனி இல்லாமல் அனைவரிடமும் மிக சகஜமாக பழகக் கூடிய விஜயகாந்த், சினிமாவில் உள்ளவர்களுக்கும், உதவி கேட்டு ஏங்குபவர்களுக்கும் தன்னாலான பல உதவிகளை செய்துள்ளார்.

அதே போல நடிகர் சங்க தலைவராக விஜயகாந்த் இருந்த சமயத்தில் அவரால் தமிழ் சினிமா பல நன்மைகளை பெற்றுள்ளது. நிறைய கலை நிகழ்ச்சிகள், சினிமாவில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் என பல விஷயங்களுக்கு விஜயகாந்தின் பங்கு மிகப் பெரியது. சினிமாவில் இருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே முற்றிலும் ஒதுங்கிய விஜயகாந்த், அரசியலில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது அவரது உடல்நிலையும் மோசமடைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்த விஜயகாந்திற்கு இப்படி ஒரு நிலை உருவாகி உள்ளது, பலரையும் கண் கலங்க வைத்துள்ளது. இதற்கு மத்தியில், நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த் மூலம் தனக்கு நடந்த பெரிய உதவி பற்றி பிரபல நடிகர் ஷியாம் நேர்காணல் ஒன்றில் பேசி உள்ளார்.

இயற்கை, லேசா லேசா, 12 பி, வாரிசு உள்ளிட்ட எக்கச்சக்க திரைப்படங்களில் நடித்துள்ளவர் ஷ்யாம். இவர் ஒரு முறை விஜயகாந்த் தனக்கு செய்த உதவி குறித்து பேசும் போது, “சம்பளம் முழுவதும் கொடுத்தால் தான் நான் டப்பிங் செய்வேன் என என் மீது சில புகார்கள் இருந்தது. இதனால் தயாரிப்பாளர் ஒருவர் என் வீட்டிற்கு பத்து ஆட்களை அனுப்பி மிரட்டினார். இது பற்றி நான் விஜயகாந்திடம் கூற, ‘நீ போனை ஆஃப் செய்து விட்டு தூங்கு. நான் பார்த்து கொள்கிறேன்’ என கூறினார்.

என்னை மிரட்டிய தயாரிப்பாளரை அழைத்து, ‘இனிமே அது ஷ்யாம் பிரச்சனை இல்ல. என் பிரச்சனை. இது நடிகர் சங்கத்தோட பிரச்சனை’ என கூறியதுடன் என்னையும் எங்கேயும் போக வைக்காமல் தனியாளாக எனது சிக்கல்களை சரி செய்து கொடுத்தார். என்னை பார்க்கும் போதெல்லாம் ‘மதுரை தான் நம்ம தம்பி தான்’ என அவர் மற்றவர்களிடம் கூறும் போது அவரை கட்டியணைத்து கொள்வேன்” என ஷ்யாம் நெகிழ்ந்து போய் கூறினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews