நடிகர் மயில்சாமியின் கடைசி ஆசை; ரஜினிகாந்த் கொடுத்த வாக்குறுதி!

நடிகர் மயில்சாமியின் கடைசி ஆசையை கட்டாயம் நிறைவேற்றுவேன் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

மகாசிவராத்திரி அன்று சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய பிரபல காமெடி நடிகர் மயில்சாமிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது.

இவரின் திடீர் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், ஏராளமான திரைப்பிரபலங்கள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மயில்சாமியின் கடைசி ஆசை குறித்து அவரது நண்பர் டிரம்ஸ் சிவமணி தெரிவித்துள்ளார்.

மயில்சாமியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற டிரம்ஸ் சிவமணி, மிகப்பெரிய அதிர்ச்சியான செய்தி.
தினமும் காலை எனக்கு செய்தி அனுப்பி விடுவார் அதேபோன்று நேற்று எனக்கு இன்று சிவராத்திரி திருவண்ணாமலை போக முடியாது என்றும் மேலக்கோட்டையூர் சிவன் கோவிலில் சந்திக்கலாம் என்றார், நானும் எப்படியாவது வந்து விடுகிறேன் என்றேன்.

கோவில் தொடர்பாக என்னை அழைத்தால் நான் உடனடியாக வந்து விடுவேன் ஏனென்றால் அவர் தான் என்னை திருவண்ணாமலையில் வாசிக்க வைத்தார். அதிகாலை 3 மணி வரையிலும் அவர் என்னோடு தான் இருந்தார். என்னோட டிரம்ஸ் வாசித்து பாடலும் பாடினார்,
ஐந்தாம் கால பூஜைக்கு நான் திருவான்மியூர் கோவில் சென்று விட்டேன் அவரும் இன்றைய நாள் நன்றாக இருந்தது என்று வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் போட்டிருந்தார்.

அதிகாலை 5.30 மணிக்கு மீண்டும் அவரிடம் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது ஆனால் அதை அவரது மகன் என்னிடம் மயில்சாமி மறைந்து விட்டதாக தெரிவித்தார்.

கடைசியாக அவர் என்னிடம் பேசிய வார்த்தை இந்த கோவிலில் நடிகர் ரஜினி அவர் கையால் சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து அதை நான் பார்க்க வேண்டும் எனக்கூறியதாக தெரிவித்தார்.

மயில்சாமியின் கடைசி ஆசை குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், டிரம்ஸ் சிவமணியிடம் பேசி மயில்சாமியின் கடைசி ஆசை குறித்து அறிந்து கொண்டு, அதனை கட்டாயம் நிறைவேற்றுவேன் என உறுதியளித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...