விஜயகாந்த் படத்தின் இயக்குனராக அறிமுகம்.. நடிகராக நிறைய படங்கள்.. கடைசியில் இயக்கிய 3 படங்களும் ரிலீஸ் ஆகாத சோகம்..

நடிகரும் இயக்குனருமான பாலு ஆனந்த், தமிழ் சினிமாவில் மிக முக்கியமான கலைஞர்களில் ஒருவராவார். கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் வில்லன் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள அவர் ஒரு சில படங்களை இயக்கவும் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குனராக வலம் வந்தவர் பாலு ஆனந்த். கோவையைச் சேர்ந்த இவர் கடந்த 1985 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடித்த ‘நானே ராஜா நானே மந்திரி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். விஜயகாந்த், ராதிகா நடித்த இந்த படம் நல்ல நகைச்சுவை படமாக இருந்தது என்பதால் ரசிகர்கள் மனதை வென்றது.

இதனை அடுத்து அவர் சத்யராஜ் அம்பிகா நடித்த ‘ஒரு ரசிகன் ஒரு ரசிகை’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படமும் ஓரளவு வரவேற்பு பெற்றது. தொடர்ந்து ‘என்றாவது ஒரு நாள்’ படத்தை இயக்கியவர் சத்யராஜ், ராதா, அம்பிகா நடித்த ‘அண்ணா நகர் முதல் தெரு’ என்ற படத்தை இயக்கினார். இந்த படம் மலையாள படத்தின் ரீமேக் என்பதால் முழுக்க முழுக்க நகைச்சுவை கதை அம்சத்தை கொண்டதாக இருந்தது. மேலும் பிரபு இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த படமும் நல்ல வெற்றி பெற்றது.

இதன் பின்னர் பிரசாந்த் நடித்த ‘உனக்காக பிறந்தேன்’ என்ற படத்தை இயக்கினார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் மன்சூர் அலிகான் நடித்த கின்னஸ் சாதனை படம் ‘ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்’ என்ற படத்தை இயக்கினார். இந்த படம் படுதோல்வி அடைந்தது. மீண்டும் மன்சூர் அலிகான் நடிப்பில் உருவான ‘சிந்துபாத்’ என்ற படத்தை இயக்கினார். அதன் பிறகு  ‘சந்தித்ததும் சிந்தித்ததும்’ ‘அதிரடி’ ஆகிய படங்களை இயக்கிய நிலையில் மேற்கண்ட படங்கள் எதுவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை என்பதால் அதன் பிறகு படங்கள் இயக்குவதை கிட்டத்தட்ட நிறுத்திவிட்டார்.

bala anand

ஆனால் அதே நேரத்தில் ஒரு பக்கம் படங்கள் இயக்கிக் கொண்டு இருந்தாலும் திரைப்படங்களில் குணசித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ரஜினிகாந்த் நடித்த ‘ராஜாதி ராஜா’ என்ற திரைப்படத்தில் முதன்முதலாக அவர் லாரி டிரைவர் வேடத்தில் நடித்த நிலையில் அதன் பிறகு ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ்  உட்பட பல பிரபலங்களுடன் இணைந்து நடித்தார்.

1989 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை அவர் பல திரைப்படங்களில் நடித்தார். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான ‘மனிதன்’ என்ற திரைப்படத்தில் தான் அவர் கடைசியாக கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தான்  பாலு ஆனந்த் கடந்த 2000 ஆண்டுகளில் ‘பாபு பாபு’ என்ற படத்தையும் ‘லோ கிளாஸ் லோகநாதன்’ என்ற படத்தையும் இயக்கினார். இந்த இரண்டு படங்களுமே ஒரு சில காரணங்களால் வெளியாகவில்லை. இதனை அடுத்து அவர் மீண்டும் பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்த ‘ஆனந்த தொல்லை’ என்ற படத்தை இயக்கினார். இந்த படமும் வெளியாகவில்லை.

பாலு ஆனந்த் இயக்கத்தில் உருவான கடைசி மூன்று படங்களும் வெளியாக முடியாமல் இன்று வரை பெட்டியில் முடங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்  இயக்குனர் பாலு ஆனந்த் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது 62 ஆம் வயதில் மாரடைப்பு காரணமாக காலமானார். தமிழ் சினிமாவில் சிறந்த நகைச்சுவை மற்றும் காமெடி வில்லன் மற்றும் குணச்சித்திர கேரக்டரிலும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பாலு ஆனந்த்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...