ஆண்டாளும், மாணிக்கவாசகரும் இறைவனிடம் ஒரே கருத்தை வலியுறுத்தி வேண்டிய பாடல்கள் இவைதான்..!!

நாம் எந்தத் தெய்வத்தை வழிபட்டாலும் சரி..அதை பரம்பரை பரம்பரையாக வழிபட்டு நமக்குக் கிடைக்கக்கூடிய அருள் திறனைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.

அதையே மாணிக்கவாசகர் சிவபெருமானிடமும், ஆண்டாள் கண்ணனிடமும் வலியுறுத்தி வேண்டுகின்றனர். இனி அந்த சிறப்பு வாய்ந்த திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவைப் பாடல்களைப் பார்ப்போமா..!

இன்று மார்கழி 29 (13.01.2023) மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சியின் 9வது பாடல் இது.

Markali 29
Markali 29

இந்தப் பாடலில் விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா என்று தொடங்குகிறார். இறைவனின் பெருமைகளைப் பற்றி எடுத்துச் சொல்கிறார். சுவாமி களி தரும் தேனாகவும், பழத்தின் சுவையாகவும், கரும்பாகவும் இருந்து இப்படி எல்லா வகையான இன்பங்களாகவும் இருக்கும் பெருமானே…என்று இறைவனின் அருள்சுவையைப் பற்றி மாணிக்கவாசகர் பிற சுவைகளுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார்.

அப்படி ஒப்பிட முடியாதுதான். இருந்தாலும் மாணிக்கவாசகர் ஒப்பிட்டுக் காட்டியது ஒரு வகையில் பக்தனுக்கும் விளக்க வேண்டுமே என்ற ஒரு ஆசையில் தான். அடியார்களும் இறைவனை குழந்தையை வர்ணிப்பது போல தேனே…கட்டிக்கரும்பே என வர்ணிக்கிறார்.

உன்னை வழி வழியாக வந்து வணங்குகிறோம் என்கிறார். இறைவனை வணங்குவது நம் தனிப்பட்ட செயல் மட்டுமல்ல. அது நம் பரம்பரையையும் தொடரச் செய்யும். அந்தக் கருணையை இறைவன் கொடுப்பார். அதனால் தான் உன்னை வழி வழியாக வணங்கி வருகிற கருணையை எங்களுக்குக் கொடு என்று இறைவனிடம் கேட்கிறார்.

ஒரு குலத்திற்கான வழிபாடு அவர்களோடு முடிந்து விடாமல் அமையணும்னா ஆண் வாரிசு அவசியம். கல்யாணம் ஆகின்ற வரை வணங்க வேண்டிய குலதெய்வம் பெண்களுக்குத் தன் தகப்பனாரின் குல தெய்வம் தான் வரும். கல்யாணமான பிறகு தன் கணவரின் குல தெய்வம் தான் அந்தப் பெண்ணுக்கு வரும். ஆனால் ஆண்களுக்கு அப்படி கிடையாது.

பாரம்பரியமாக அப்பா, தாத்தா வழிபட்ட தெய்வம் தான் அவருக்கும் உண்டு. எந்த வழிபாடு செய்தாலும், அதில் முதல் இடத்தைப் பிடித்து இருப்பது குலதெய்வ வழிபாடு தான். ஆனால் இஷ்ட வழிபாடு என்பது வேறு. தனக்குப் பிடித்த தெய்வத்தை வணங்குவது. ஆனால் குலதெய்வத்துக்கு அப்படி கிடையாது.

பரம்பரை பரம்பரையாக வழிவந்த தெய்வத்தைத் தான் வணங்க வேண்டும். சிவபெருமானிடமும் இந்த வரத்தைக் கேட்கலாம். வழிவழியாக சிவ வழிபாடு தொடரும்.

ஒரே வங்கியில் டெபாசிட் பண்ணினா அதிக அளவு வட்டி கிடைக்குமோ அது போல ஒரே தெய்வத்தை வழிபட வழிபட அந்தத் தெய்வத்தின் அருள் திறன் அவங்களுக்கும் அந்தக் குடும்பத்திற்கும் கிடைப்பது அதிகரித்துக் கொண்டே வரும்.

இப்படி எல்லாவித கருணைகளுடனும் கூடிய உன்னை தலைமுறை தலைமுறையாக வந்து வழிபட எங்களை ஆண்டு அருள்புரிய வேண்டும் என்று மாணிக்கவாசகர் இறைவனிடம் வேண்டுகிறார்.

இன்று ஆண்டாள் அருளிய திருப்பாவையின் 29வது பாடல் இது.

Thiruppavai 29
Thiruppavai 29

இந்தப் பாடலில் நாச்சியார் மிகவும் அழகான விஷயத்தைப் பதிவு செய்துள்ளார். தினமும் அதிகாலை வந்து எல்லோரையும் எழுப்பி உன்னை நாங்கள் வழிபடுகிறோமே…அதற்கு என்ன காரணம் தெரியுமா? நீ இந்த உலக மக்கள் அனைவரையும் ஆத்மாவாகிய பசுக்களாக்கி மேய்த்துக் கொண்டு இருக்கிறாய் அல்லவா…

அதனால் நாங்கள் எத்தனை பிறவிகள் வந்தாலும் உன்னையே வணங்க வேண்டும்…உனக்கே ஆட்பட்டு இருக்கணும்…உன்னுடைய வழிபாட்டைத் தவிர நாங்கள் வேறு எதையுமே எடுத்துட்டுப் போகக்கூடாது. அப்பேர்ப்பட்ட கருணையை எங்களுக்கு நீ காட்டணும் என கண்ணனிடம் கேட்கிறார்.

அதிலும் இற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும் எழும் எழும் பிறவிகள் தோறும் இந்த நலன் வேண்டும் என்கிறார். நீ இப்போ மட்டும் எனக்குக் கருணை காட்டினால் போதாது.

ஏழேழு பிறவிகளிலும் எனக்கு இத்தகைய கருணையைக் காட்ட வேண்டும் என்று கேட்பது அழகு. அதோடு நிறுத்திவிடாமல் இனி எழும் பிறவிகள் தோறும் இந்த நலனை எங்களுக்குத் தந்தருள்க என்று கேட்கிறார். இந்தப் பாடல் நமக்காகவே எழுதப்பட்டது. பிற ஆசைகள் எனக்கு தெரியாமல் ஏதாவது வந்தால் நீ தான் மாற்றி எங்களுக்கு அருள்புரிய வேண்டும் என்கிறார்.

ராமாயண காவியத்தின் நிறைவுப்பகுதியில் ராமரிடம் அனைவரும் விடைபெற்றுச் செல்கின்றனர். அப்போது அவர் அனுமனை மட்டும் இவ்வாறு அழைக்கிறார். நான் வைகுண்டம் செல்லலாம் என்று நினைக்கிறேன். நீயும் என்னுடன் வருகிறாயா என்று கேட்கிறார்.

யாருக்குக் கிடைக்கும் இந்தப் பேறு? அனுமன் ராமாயண காவியத்தின் ஆணி வேர் அல்லவா? அதனால் தான் அப்படி கேட்டார். அதற்கு அனுமன் நாம் எல்லோரும் அங்கு செல்வதற்குத் தானே இத்தகைய வழிபாடுகள் எல்லாம் பிறவி என்ற பெருங்கடலில் நடத்தி வருகிறோம்.

அதை யாராவது மறுப்பார்களா? ஆனால் அனுமன் சொல்கிறார். எனக்கு இந்தப் பூலோகத்தில் தான் ராம தரிசனம் கிடைக்கும். வைகுண்டத்தில் அந்தப் பேறு கிடைக்காது. இங்கு தான் நான் தினமும் வழிபட முடியும். அதுவே எனக்குப் போதும். அதனால் நீங்கள் மட்டும் வைகுண்டம் செல்லுங்கள். நான் இங்கேயே இருந்து விடுகிறேன் என்கிறார். அதே போல தான் ஆண்டாளும் இந்தப் பாடலில் இறைவனை வேண்டுகிறார்.

 

 

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.