சென்னை: பாளையத்து அம்மன் திரைப்படத்தில் குழந்தை தவறி உண்டியலில் விழுந்துவிட இனி அந்த குழந்தை அம்மனுக்குதான் சொந்தம் என்பார்கள். அதுபோல்சென்னையை அடுத்த திருப்போரூரில் உள்ள கந்தசாமி திருக்கோயிலில் உண்டியலில் காணிக்கை போடும் போது தவறுதலாக ஐபோன் விழுந்துவிட்டது. இனி அந்த ஐபோன் முருகனுக்கே சொந்தம் என்று கூறி கோயில் ஊழியர்கள் விபூதி அடித்துள்ளனர்.
சென்னையை அடுத்த திருப்போரூரில் உள்ள கந்தசாமி திருக்கோயில் புகழ் பெற்ற முருகன் கோயிலாகும். இங்கு தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள வருவது வழக்கம். அப்படி வருபவர்கள் கோயில் உண்டியலில் காணிக்கையாக பணம், நகை, பொருட்களை செலுத்துவார்கள். இந்நிலையில் சென்னை சி.எம்.டி.ஏ நிர்வாகத்தில் அம்பத்தூரைச் சேர்ந்த தினேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் தனது குடும்பத்தினருடன் கடந்த அக்டோபர் மாதம் முருகனை தரிசிக்கை திருப்போரூர் வந்துள்ளார்.
அப்போது காணிக்கை போடும் போது தவறுதலாக அவரது ஐபோன் உண்டியலில் விழுந்துவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோயில் ஊழியர்களிடம் கேட்டுள்ளார். கோயில் ஊழியர்கள் அவரிடம், உண்டியலை மூன்று மாதத்திற்கு ஒருமுறை திறப்பது வழக்கம். அப்படி திறக்கும் போது உங்களுக்கு தகவல் தருவோம். நீங்கள் அப்போது வந்து வாங்கி கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
வேறுவழியில்லை.. திறக்கும் போது தான் ஐபோனை தருவோம் என்று கூறிவிட்டதால் போய்விட்டார் தினேஷ். இந்நிலையில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ராஜலட்சுமி, செயல் அலுவலர் குமரவேல் ஆய்வாளர் பாஸ்கரன் முன்னிலையில் இன்று திருப்போரூர் கந்தசாமி கோயில் உண்டியல் திறக்கப்பட்டு பணம் என்னப்பட்டது. இதில் 52 லட்சம் ரூபாயும் , 289 கிராம் தங்கமும், 6920 கிராம் வெள்ளியும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
பணம் எண்ணிக் கொண்டிருந்தபோது உண்டியலில் விலை உயர்ந்த ஐபோன் இருந்தது. அந்த செல்போன் சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ்க்கு சொந்தமானது என்பதை ஏற்கனவே அறிந்திருந்த கோயில் ஊழியர்கள் அவருக்கு தகவல் அளித்தனர். அவரும் ஆசையோடு வந்து செல்போனை பெற முயன்ற போது, கோவில் நிர்வாகத்தினர் உண்டியலில் போட்ட அனைத்து பொருட்களும் முருகனுக்கே உரியது. உங்களுக்கு செல்போன் கொடுக்க முடியாது, உங்களுடைய தரவுகள் வேறு செல்போனுக்கு மாற்றிக் கொண்டு திரும்ப கொடுங்கள் என்று கூறி அதிர வைத்துள்ளனர்.
செல்போனை பெற்றுக் கொள்ளலாம் என வந்தவர் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஏற்கனவே இவர் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையில், மனு அளித்து எனது செல்போனை மீட்டுக் கொடுக்கும்படி மனு அளித்துள்ளார். அமைச்சர் சேகர்பாபு இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.