சமீபத்தில் இறந்ததாக நினைத்து ஒருவரது உடலை தகனம் செய்து அவரது இறுதிச் சடங்கு தொடர்பான நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென அவர் உயிருடன் வந்ததும் அங்கிருந்து அனைவரும் ஆடிப் போயுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை தற்போது பார்க்கலாம். குஜராத் மாநிலம் மெஹ்ஸானா என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் ப்ரிஜேஷ் சுதர் (Brijesh Suthar). இவருக்கு தற்போது 43 வயதாகும் நிலையில் ஸ்டாக் மார்க்கெட்டில் பணம் முதலீடு செய்ததன் காரணமாக சிக்கலில் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.
அது மட்டுமில்லாமல் இதன் காரணமாக ப்ரிஜேஷ் சுதருக்கு மனதளவிலும் பாதிப்பு ஏற்பட்டு கடுமையாக அவதிப்பட்டு வந்ததாக தகவல்கள் கூறுகின்றது. இதனிடையே தான் கடந்த அக்டோபர் மாத இறுதியில் அகமதாபாத்தின் நரோடா என்ற பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டில் இருந்து திடீரென ப்ரிஜேஷ் சுதர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தினர் உடனடியாக பல இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர்.
அடையாளம் தெரியாத உடல்..
ஆனால் இதற்கு எந்தவித பலனும் கிடைக்காமல் இருந்த நிலையில் உடனடியாக நரோடா பகுதியில் இருந்த போலீஸ் நிலையத்திலும் ப்ரிஜேஷ் சுதர் காணாமல் போனது தொடர்பாக புகார் ஒன்றை அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசாரும் பல பகுதிகளில் தேடி வந்த நிலையில் அதற்கும் பலன் கிடைக்காமல் இருந்து வந்துள்ளது. இதனிடையே கடந்த நவம்பர் 10ஆம் தேதியன்று சபர்மதி பாலத்திற்கு அருகே அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்து போன உடல் ஒன்று கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ப்ரிஜேஷ் சுதரின் குடும்பத்திற்கும் இது பற்றி தகவல் கொடுக்கப்பட, அப்போது அங்கே வந்த சிலர் உடலை அடையாளம் கண்டுள்ளனர். உடலமைப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் ப்ரிஜேஷ் சுதருடன் ஒத்துப்போக அது அவர்தான் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக ப்ரிஜேஷ் சுதரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் சமீபத்தில் அவரது மறைவு தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அஞ்சலி நிகழ்ச்சியில் ட்விஸ்ட்
இதனைத் தொடர்ந்து ப்ரிஜேஷ் சுதருக்கு அஞ்சலி செலுத்த அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் யாரும் எதிர்பாராத ஒரு பரபரப்பான சம்பவம் அங்கே அரங்கேறி இருந்தது. இறுதிச் சடங்கு நடத்தி அடக்கம் செய்யப்பட்ட ப்ரிஜேஷ் சுதர் திடீரென அங்கே உயிருடன் வந்ததும் அனைவரும் வாயடைத்து போனதுடன் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் இருந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தான் அவர்கள் கண்டெடுத்த உடல் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்ததால் அது ப்ரிஜேஷ் சுதர் என சில ஒற்றுமைகளை வைத்து உறுதி செய்ததாகவும் தற்போது அவர் திரும்பி வந்துவிட்டதால் அது வேறு ஒருவரின் உடல் என்பதும் தெரியவந்துள்ளது. ப்ரிஜேஷ் சுதர் தான் கிடைத்துவிட்டார் என போலீசாரும் இந்த வழக்கை முடித்திருந்த நிலையில் தற்போது அது வேறொருவரின் உடல் என்பதால் மீண்டும் ஆரம்பத்தில் இருந்தே இதன் விசாரணையை தொடங்கியுள்ளனர்.