பொதுவாக பிறந்தநாள் அல்லது திருமண நாள் என ஒருவரது வாழ்வின் எந்த முக்கியமான நிகழ்வுகள் வந்தாலும் சர்ப்ரைஸ் கொடுப்பது என்பது சமீப காலமாக வழக்கமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. குழந்தைகள் தொடங்கி வயதானவர்கள் வரை தங்கள் வாழ்வின் முக்கியமான நாளை மிகுந்த உற்சாகத்துடன் வாழ்நாளின் கடைசி நாள் வரையிலும் நினைவில் இருக்கும் வகையில் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என முயற்சி செய்து வருகிறார்கள்.
நமது நண்பர்களுக்கோ அல்லது குடும்பத்தில் இருப்பவர்களுக்கோ அல்லது கணவனுக்கோ, மனைவிக்கோ என யாருக்காவது ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தால் நிச்சயமாக அவர்களை மனதையும் நெகிழ வைப்பதுடன் ஒருவித எமோஷனல் தருணத்தையும் உணர வைக்கும். எத்தனை நாட்கள் ஆனாலும் அந்த தருணத்தை நினைத்து பார்த்தாலே ஒரு வித மெய்சிலிர்ப்பு நமக்குள் உருவாகிவிடும். அந்த வகையில் சமீபத்திலும் ஒரு பெண்ணின் பிறந்த நாளுக்கு அவரது நண்பர்கள் இணைந்து கொடுத்த பரிசு ஒன்று பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இது தொடர்பாக பிரதிக்ஷா என்ற பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். பிரதிக்ஷாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நண்பர்கள் சிலர் இணைந்து ஒரு கேக்கை கொடுக்க அதற்கு நடுவே ஹாப்பி பர்த்டே என்ற ஒரு டேக் இருப்பதையும் அவர் கவனித்துள்ளார். உடனடியாக அந்த டேக்கையும் பிரதிக்ஷா இழுக்க, அதற்குள் இருந்த விஷயம் தான் அவரை மட்டும் இல்லாமல் இந்த வீடியோவை பார்க்கும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
அந்த ஹாப்பி பர்த்டே டேக்கை அவர் எடுத்ததுமே அதற்குள்ளே இருந்து 500 ரூபாய் நோட்டுகளாக வர தொடங்குகிறது. ஆச்சரியத்துடன் பிரதிக்ஷா அதனை இழுத்துக் கொண்டே இருக்க, 500 ரூபாய் நோட்டுகள் மொத்தம் 29 (14,500 ரூபாய்) அதில் இருந்ததாக தெரிகிறது. இதை பார்த்து அவர் விவரிக்க வார்த்தைகள் எதுவும் சொல்ல முடியாத அளவுக்கு வியந்து போய் நிற்க, உடன் இருக்கும் நண்பர்கள் அந்த பணத்தை மாலையை போல பிரதிக்ஷா கழுத்திலும் போட்டிருந்தனர்.
இந்த வீடியோவை பார்க்கும் பலரும் இது பணத்திற்காக நடந்தது இல்லை என்றும் உங்கள் நண்பர்களின் அன்பின் வெளிப்பாடு தான் இது என்றும் உணர்ச்சி பொங்க குறிப்பிட்டிருந்தனர். இன்னும் சிலர் என்னுடைய ஒரு மாத சம்பளம் என்றும், இது தீபாவளி போனஸ் ஆக இருக்கலாம் என்றும் இது கேக் இல்லை ஏடிஎம் என்றும் இது போன்ற கேக் எங்கே கிடைக்கும் என்றும் வேடிக்கையான கமெண்ட்களை குறிப்பிட்டு அந்த நண்பர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இவை அனைத்தையும் தாண்டி அந்த பெண் இதனை சர்ப்ரைஸ் ஆக எடுத்தது நாடகமாக இருக்கலாம் என்றும் வைரல் ஆவதற்காக இதனை வேண்டுமென்றே பிளானுடன் செய்திருக்கலாம் என்றும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.