ஹர்ஷா சாயைத் தெரியாமல் சமூக ஊடகங்களைக் கடந்து யாரும் செல்ல முடியாது. அந்த அளவிற்கு தான தர்மங்கள் செய்து மக்களிடையே பிரபலமானவர். 25 வயதான ஹர்ஷா சாய் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர். கல்லூரிக் காலங்களில் கன்டென்டுக்காக சமூக வலைதளங்கல் உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு வந்தவர் நாளடைவில் பலருக்கு உதவிகள் செய்ய ஆரம்பித்தார்.
இதனால் ஹர்ஷா சாய் புகழ் மெல்ல மெல்ல பரவியது. வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பது, விளிம்பு நிலை மக்களின் ஆசைகளை நிறைவேற்றுவது, சொகுசு ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று உணவருந்த வைப்பது, தொழிலை விரிவுபடுத்திக் கொடுப்பது என பல வகைகளில் பணத்தினை அள்ளி வழங்குவது ஹர்ஷா சாயின் வழக்கம்.
மேலும் திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்துவரும் ஹர்ஷா சாயை சமூக வலைதளங்களில் சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். இதன் மூலம் இவருக்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது. இதன் மூலம் இயலாதவர்களுக்கு உதவி செய்து வருகிறார். இவருடைய யூடியூப் சேனல்கள் 10 மொழிகளில் டப் செய்யப்பட்டு மில்லியன் கணக்கில் பார்வைகளைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், ஹர்ஷா சாய் மீது மும்பையைச் சேர்ந்த நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அதில் ஹர்ஷா சாய் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், நிர்வாணப் படங்களை எடுத்து 2 கோடிவரை மோசடி செய்ததாகவும், மேலும் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் தெரிவித்திருக்கிறார். இந்தப் புகாரை ஏற்றுக் கொண்ட காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் இதுவரை ஹர்ஷா சாய் கைது செய்யப்படவில்லை.