தமிழகம்

நீதிபதி கேட்ட அந்த கேள்வி.. உடனே அமலாக்கத்துறைக்கு எதிராக செந்தில் பாலாஜி வைத்த சூடான வாதம்

சென்னை: எந்த குற்றமும் செய்யாத நிலையில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தனக்கு எதிராக அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டவிரோத பணபரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.

வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவுக்காக அவரை ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தது.

குற்றச்சாட்டுக்கள் பதிவை தள்ளிவைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்த முதன்மை அமர்வு நீதிமன்றம், அவரை இன்று ஆஜர்படுத்த உத்தர்விட்டிருந்தது.

அதன்படி புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரபடுத்தப்பட்டார். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி, குளுகோஸ் ஏற்றுவதற்காக போடப்பட்ட ஊசி பொருத்திய கையுடன் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை சாட்சிய குற்றச்சாட்டுக்களை நீதிபதி அல்லி முதலில் ஆங்கிலத்திலும், பின் தமிழிலும் படித்து காட்டி, குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொள்கிறீர்களா எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, தான் நிரபராதி. எனக்கு எதிரான இந்த வழக்கு, புனையப்பட்ட வழக்கு . மேலும், அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுக்களை மறுக்கிறேன். தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை.  அரசியல் காழ்புணர்ச்சியால் காரணமாக தொடரப்பட்ட பொய் வழக்கு. சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்புகிறேன்.  நான் குற்றவாளி அல்ல..  எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை என்று கூறினார்.

இதையடுத்து, சாட்சிகள் விசாரணைக்காக வழக்கை ஆகஸ்ட் 16ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி அல்லி, அதுவரை செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலையும் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலம், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 54 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Avatar photo
Keerthana

நான் கீர்த்தனா, கடந்த 8 வருடங்களாக ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். தமிழ் மினிட்ஸ் இணையதளத்தில் சப் எடிட்டராக இருக்கிறேன். தமிழகம், அரசியல், கிரைம், ட்ராவல்/பயணம், வேலைவாய்ப்பு, பொழுதுபோக்கு, வணிகம் செய்திகள் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவள்.