சபரிமலை என்பது கேரளாவிலுள்ள மேற்கு மலைத்தொடர்களில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற பெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என அழைக்கப்படுகிறது
18 மலைகளுக்கு இடையே சபரிமலை அய்யப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் அந்த 18 மலைகளில் ஒரு மலையின் உச்சியில் உள்ளது. கடல் மட்டத்துடன் ஒப்பிடும் போது, 914 மீட்டர் உயரத்திலும், மலைகள் மற்றும் காடுகளால் சூழ்ந்துள்ள இந்த சபரிமலையை சூழ்ந்து ஒவ்வொரு மலையிலும் கோவில்கள் காணப்படுகின்றன.
நிலக்கல், காளகெட்டி, மற்றும் கரிமலை போன்ற இடங்களில் இன்றும் நாம் நடைமுறைச்சார்ந்த மற்றும் குறைபடாத கோவில்களை காணலாம். இதர மலைகளில் பழங்காலத்து கோவில்களின் எஞ்சிய பாகங்கள் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 45 முதல் 50 மில்லியன் பக்தர்கள் சபரிமலைக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சபரிமலைக்குப் புனிதப்பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பக்தரும் சாதி, மத, இன, வேறுபாடுகளை பொருட்படுத்தாமல், ஒரே மனதுடன், சுவாமியே சரணம் ஐயப்பா என்னும் ஒரே மந்திரத்தை உட்கொண்டும் சுவாமி ஐயப்பனின் திருவடிகளை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் புனிதப்பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்த கோவிலுக்கு 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. சுவாமி ஐயப்பனை சார்ந்த வரலாற்றுக் கதைகளில் வீட்டு விலக்குக்குரிய பெண்கள் இங்கு வருவதை தடை செய்துள்ளதால் பெண்கள் இந்தக் கோவிலுக்கு வருகை புரிவதில்லை என்று வழிவழியாக கூறப்படுகிறது. இதற்கான முக்கிய காரணம் சுவாமி ஐயப்பன் ஒரு பிரம்மச்சாரி என்ற ஐதீகமே. மண்டல பூசை என அறிவிக்கப்பட்ட நாட்களிலும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மட்டும் கோவில் பிரார்த்தனை செய்வதற்காக திறந்து வைக்கப்படுகிறது.