80களின் கமர்ஷியல் ஹிட் இயக்குனர் – எஸ்.பி. முத்துராமன்

எஸ்.பி. முத்துராமன், கிட்டதட்ட ரஜினிகாந்த், கமலஹாசனின் அதிகபட்ச படங்களை இயக்கியவர் இவர். பிறந்தது செட்டி நாட்டு சீமையான காரைக்குடி. ஏ.வி. எம்மின் ஆஸ்தான இயக்குனர் இவர்.

பீம்சிங், ஏ.சி. திருலோகச்சந்தர் உட்பட பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக இருந்தவர் இவர்.


இவர் உதவி இயக்குனராக வேலை பார்த்த படங்களும் பெரும்பாலானவை ஏ.வி. எம்மின் படங்கள்தான். இப்போதிருக்கும் ஆக்சன் படங்கள் பலவற்றிற்க்கு இவர் படங்களே முன்னோடி.

கமலுக்கு திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்திய ‘சகலகலா வல்லவன்’ இவர் இயக்கியதே. நீண்ட நாட்கள் ஓடிய படம். இவரின் பெரும்பாலான படங்களுக்கு இசைஞானி இளையராஜாதான் இசை. தவிர்க்க முடியாத சில காரணங்களால் மனிதன், ராஜா சின்ன ரோஜா படங்களுக்கு சந்திரபோசும், உலகம் பிறந்தது எனக்காக படத்திற்க்கு ஆர்.டி. பர்மனும் இசையமைத்தார்கள்.

ரஜினி, கமல், கார்த்திக், சத்யராஜ், பிரபு, விஜயகாந்த் உள்ளிட்ட அந்த நாளைய பல முன்னணி நடிகர்களை இயக்கியுள்ளார். பிரபுவை தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன் படங்களிலும், நல்லவனுக்கு நல்லவன் படத்தில் கார்த்திக்கையும், நல்லவன் படத்தில் விஜயகாந்தையும் இயக்கியுள்ளார் இவர்.

இவரின் அனைத்து படங்களிலும் விவேக் சொல்வது போல ஒரே ஒரு மச்சம் வைத்துக்கொண்டு மாறுவேஷம் போட்டு வில்லனை ஏமாற்றுவது போன்ற காட்சிகள் கண்டிப்பாக இருக்கும்.

அப்படி ஒரே மாதிரியான காட்சிகள் இருந்தாலும் ரசிகர்கள் சலிப்பில்லாமல் படங்களை பார்த்தனர்.

இவர் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய பாண்டியன் படத்திற்க்கு பிறகு சொல்லிகொள்ளும்படி படம் இயக்கவில்லை. மார்க்கெட் இல்லாமல் இருந்த விக்ரமை வைத்து காவல் கீதம் என்ற படம் இயக்கினார். அது அவ்வளவாக வெற்றிபெறவில்லை. இளையராஜாவின் இசையில் பாடல்கள் மட்டுமே தேறுதலாக இருந்தது.

1991 -1996 காலகட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியின்போது ஏற்படுத்தப்பட்ட தொட்டில் குழந்தை திட்டத்தை மையமாக வைத்து ராம்கி நடிப்பில் தொட்டில் குழந்தை என்னும் திரைப்படத்தை இயக்கினார்.

ஒரு பக்கம் கவிதைத்தனமான மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றோரின் படங்கள் மென்மைத்தனத்தை ஏற்படுத்தினாலும், இவர் போன்ற ஆக்சன் இயக்குனர்களின் படங்களையும் மக்கள் ரசித்தனர்.

இவர் ஆக்சனில் மட்டும் கவனம் இல்லாமல் எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபது வரை உள்ளிட்ட மென்மையான கதையம்சமுள்ள படங்களையும் இயக்கியவர்.

ஆக்சன் படங்களின் வரலாற்றில் எஸ்.பி.எம்முக்கும். ஏவி.எம்முக்கும் தனி இடம் உண்டு. கமலை வைத்து இயக்கிய ‘எனக்குள் ஒருவன்’ முன் ஜென்ம தொடர்பு என வித்தியாசமான கதையம்சத்தோடு செய்த படம் .

ரஜினிகாந்தே விருப்பப்பட்டு ஆக்சன் பட இயக்குனராக இருந்த இவரை, தான் விரும்பி வணங்கும் மஹான் ராகவேந்திரரை பற்றி தான் நடிக்க இருந்த ராகவேந்திரர் படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார். மிகுந்த பொருட்செலவில் ஜெய்சங்கரை வைத்து துணிவே துணை படத்தை இயக்கினார். இவரின் முரட்டுக்காளை மிகப்பெரிய மெகா வெற்றிப்படமாகும்.

Published by
Staff

Recent Posts