ஒரே தீபாவளியில் ரிலீஸ் ஆன சிவாஜி, கமல், ரஜினி படங்கள்.. ஆனால் ஜெயித்தது பாக்யராஜ் தான்..!

கடந்த எண்பதுகளில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என மூன்று பிரபல நடிகர்களும் அடுத்தடுத்து வெற்றி படங்களாக கொடுத்துக் கொண்டிருந்தனர். இவர்களில் யார் வசூல் சக்கரவர்த்தி என்பதை கணிக்க முடியாத அளவுக்கு இருந்தது.

இந்த நிலையில்தான் 1981ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய மூவரின் திரைப்படங்கள் ஒரே தீபாவளிக்கு வெளியாகியது. ஆனால் அதிசயமாக இந்த மூன்று திரைப்படங்களைவிட அதே நாளில் வெளியான பாக்யராஜ் இயக்கி, நடித்த திரைப்படம்தான் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஒரு கை ஓசை: படம் முழுவதும் ஒரு வசனம் கூட பேசாமல் கே.பாக்யராஜ் நடித்த படம்..!

கடந்த 1981ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் சிவாஜி கணேசன் நடித்த ‘கீழ்வானம் சிவக்கும்’, ரஜினிகாந்த் நடித்த ‘ராணுவ வீரன்’, கமல்ஹாசன் நடித்த ‘டிக் டிக் டிக்’ ஆகிய மூன்று பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியானது. இதுபோக பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ‘தண்ணீர் தண்ணீர்’, பாக்யராஜின் ‘அந்த ஏழு நாட்கள்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.

கீழ்வானம் சிவக்கும் திரைப்படத்தில் சரிதா, சரத் பாபு, ஜெய்சங்கர் ஆகியோர் சிவாஜியுடன் இணைந்து நடித்தனர். சிவாஜியின் மகன் சரத் பாபு ஒரு பெண்ணை கெடுத்து விட அவர் இறந்து விடுவாள். தனது தங்கையின் இறப்புக்கு யார் காரணம் என்பதை பழிவாங்க துடிக்கும் பார்வையற்ற அண்ணன் கேரக்டரில் ஜெய்சங்கர் நடித்திருந்தார். அவருக்கு கண் டாக்டர்ரான சிவாஜி அறுவை சிகிச்சை செய்வார். கண் பார்வை கிடைத்தவுடன் தன் தங்கையை கொன்றவரை பழி வாங்க வேண்டும் என்று ஜெய்சங்கர் சொல்லிக் கொண்டிருப்பார். அவருக்கு சிவாஜியின் மகனும், சரிதாவின் கணவரான சரத்பாபு தான் தங்கை இறப்புக்கு காரணம் என தெரியாது. இந்த நிலையில் சிவாஜியின் மருமகள் சரிதா இக்கட்டான நிலையில் இருப்பார். மாமனாருக்கும் மருமகளுக்கும் ஏற்பட்ட மௌன யுத்தம் தான் இந்த படத்தின் கதை என்பதும் கண்பார்வை கிடைத்தவுடன் ஜெய்சங்கர் என்ன செய்தார் என்பதுதான் இந்த படத்தின் கிளைமாக்ஸ்.

சந்திரபாபுவின் கதை.. கிளைமாக்ஸ் எடுக்க மறுத்த பாரதிராஜா.. ‘அந்த 7 நாட்கள்’ படத்தின் அறியாத விவரங்கள்..!

இதே நாளில் வெளியான இன்னொரு திரைப்படம் ரஜினியின் ‘ராணுவ வீரன்’. ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, சிரஞ்சீவி உள்ளிட்டோர் நடித்திருந்தாலும் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ராணுவத்திலிருந்து ஊருக்கு வரும் ஒரு வீரனுக்கும் கொள்ளை கும்பல் தலைவனுக்கும் நடக்கிற பிரச்சனைதான் இந்த படத்தின் கதை.

இதை அடுத்து பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல்ஹாசன், மாதவி, ராதா, ஸ்வப்னா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டிக் டிக் டிக்’. இந்தப் படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ‘சிகப்பு ரோஜாக்கள்’ கொடுத்த வெற்றியின் காரணமாக மீண்டும் கமல்ஹாசனை வைத்து ஒரு திரில் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை பாரதிராஜாவுக்கு வந்ததன் விளைவு தான் இந்த படம்.

புகைப்பட கலைஞர் கமல்ஹாசன் மாடலிங் செய்யும் பெண்களை வரிசையாக சந்திப்பார். ஆனால் அந்த பெண்கள் மர்மமான முறையில் கொல்லப்படுவார்கள். அந்த கொலைகளுக்கு வைரத்தை கடத்தும் வில்லன் தான் காரணம் என்பதை கமல்ஹாசன் அறிந்து கொண்ட பின்னர் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை.

இதை அடுத்து பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ‘தண்ணீர் தண்ணீர்’ படம் விமர்சனங்களால் பாராட்டப்பட்டாலும் வசூல் அளவில் பெரிய வெற்றி பெறவில்லை.

ஆனால் அதே நேரத்தில் பாக்யராஜ் இயக்கி, நடித்த ‘அந்த ஏழு நாட்கள்’ திரைப்படம் இதே நாளில் தான் வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் திரைக்கதை ரசிகர்களை கட்டிப்போட்டது. மீண்டும் மீண்டும் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் வந்ததால் இந்த படம் சில்வர் ஜூப்ளி கொண்டாடியது.

முதல் மரியாதை: படம் ஓடாது என கைவிட்ட படம்.. ஆனால் தன்னம்பிக்கையுடன் ஜெயித்த பாரதிராஜா..!

மொத்தத்தில் 1981ஆம் ஆண்டு தீபாவளியில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருடன் மோதிய பாக்யராஜ் மிகப்பெரிய வெற்றி பெற்றார். குறிப்பாக தனது குருநாதர் பாரதிராஜாவின் படத்தையே 1981ஆம் ஆண்டு தீபாவளியில் பாக்யராஜ் பின்னுக்கு தள்ளினார்.

Published by
Bala S

Recent Posts