ஆன்மீகம்

சுமங்கலிப் பெண்கள் கட்டாயம் திருவாதிரை நாளில் விரதம் இருங்க…! குடும்பத்துக்கு ரொம்ப ரொம்ப நல்லது…!

திருவாதிரை விரத நாள், ஆதிரை நாள், ஆருத்ரா தரிசனம் என பல பெயர்களைக் கொண்டது திருவாதிரை. இந்நாள் சிவபெருமானுக்குரிய விரத நாள். கணவர் நீண்ட ஆயுளோடு, பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்கணும் என்று வேண்டும் நாள் தான் இந்தத் திருவாதிரை விரத நாள்.

பெண்கள் ஆவலாக இருக்கக்கூடிய விரத நாள் இது. வரலெட்சுமி நோன்பு மாதிரி கணவர் வியாபாரம், தொழில், ஆரோக்கியம், ஆயுள் நல்லா இருக்கணும் என்று வேண்டும் நாள். எம்பெருமான் சேந்தனாருக்கு அருள்புரிந்த அற்புதமான இந்த நாளில் களி நைவேத்தியமாக செய்யப்படுவது வழக்கம்.

நடராஜருக்கு நடைபெறும் 6 முக்கியமான அபிஷேகங்களில் ஒன்று இந்த திருவாதிரை அபிஷேகம்.

6.1.2023 அன்று வரும் வெள்ளியன்று இந்தத் திருவாதிரை நாள் வருகிறது. பௌர்ணமியும் உடன் வருவதால் அதிவிசேஷமான நாள். அன்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பது கூடுதல் விசேஷம். இந்த ஆண்டின் முதல் பெண்களுக்கான பண்டிகை.

விரதம் இருப்பது எப்படி?

சிலர் 5ம் தேதியே விரதம் இருந்து அபிஷேகத்தோடு அந்த விரதத்தைப் பூர்த்தி செய்வர். பொதுவாக 6ம் தேதி தான் இந்த விரதத்தைக் கடைபிடிப்பாங்க.

நடராஜருக்கு இரவு 2…..3 மணியில் இருந்து அபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் துவங்கப்படுகிறது. தொடர்ந்து அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை மகா அபிஷேகம் என்பது சிதம்பரத்தில் நடைபெறும்.

Thiruvathirai 3

உத்தரகோசமங்கையிலும் மிக விசேஷமானது. எல்லா நடராஜர் ஆலயத்திலும் விசேஷமானது. உலகம் முழுவதும் உள்ள எல்லா கோவில்களிலும் நடராஜருக்கு அந்த நேரத்தில் மிக சிறப்பாக அபிஷேக ஆராதனைகள் துவங்கும்.

காலையிலேயே விரதத்தைத் துவங்கலாம். அதிகாலையிலேயே எழுந்து மஞ்சள், சீகைக்காய், நல்லெண்ணை இவற்றை நடுவீட்டில் வைத்து மஞ்சள் தேய்த்துக் குளிங்க. அப்புறம் கணவர், மாமனார் என வீட்டில் யார் பெரியவங்க இருக்காங்களோ அவர்கள்கிட்ட இன்னிக்கு இந்த விரதம் சிறப்பாக இருக்கணும்னு ஆசி வாங்குங்க.

இது ஒரு பெண் தன் கணவனுக்காக இருக்கக்கூடிய விரதம். கணவருடைய வீட்டில் யார் இந்த விரதம் இருந்தாங்கன்னா கண்டிப்பா நாமும் இந்த விரதத்தை கடைபிடிக்கணும். அம்மா வீட்டில் இந்தப் பழக்கம் இருந்தர்லும் கணவரின் அனுமதி பெற்று இந்த விரதத்தை இருக்க வேண்டும். ரெண்டு வீட்டுலயும் பழக்கம் இல்லைன்னாலும் இந்த விரதம் கண்டிப்பாக இருக்கலாம்.

திருவாதிரை திருநாளில் மாங்கல்ய சரடு மாற்ற வெள்ளிக்கிழமையா இருக்கேன்னு யோசிக்கவே வேண்டாம்.

கயிறு மாற்றுபவர்கள் காலையில் ஆரம்பித்து 10.20க்குள் மாற்றி விடுங்க. ஏன்னா 10.30 – 12.00 மணி ராகு காலம். 12 மணிக்கு மேல கயிறு மாற்றுவது நல்லாருக்காது.

கணவர் இருந்தால் கணவர் மூலமாக கட்டிக் கொள்ளலாம். அல்லது நீங்களே இந்தக் கயிற்றை மாற்றிக்கொள்ளலாம். அப்புறம் அரிசியை ஊற வைச்சி அதிரசத்துக்கு மாவு சேர்த்து தயாரிச்சி வச்சிடணும்.

மாலை வழிபாட்டுக்கு அதிரசம் நைவேத்தியம் பண்ணனும். பகல் உணவைத் தவிர்த்து விடுவது தான் இந்த விரதத்துக்கு சிறப்பு. விரதம் இருக்க முடியாதவர்கள் நீராகாரம் எடுத்துக் கொள்ளலாம். மாலையில் காய்கறி எல்லாம் போட்டு சாப்பாடு செய்து நைவேத்தியம் வைக்கணும்.

21 காய் போட்டு சமைப்பது வழக்கம். சிலர் 7 காய் போட்டு சமைப்பார்கள். 21 வடை, 21 சுசியம், 21 அதிரசம் என நைவேத்தியம் பண்ணுவது அதிவிசேஷமானது. இது மாங்கல்ய நோன்பு என்பதால் தான் இந்த நைவேத்தியம். சின்ன சின்னதா அதிரசம் 21 செஞ்சா கூட போதும்.

Thiruvathirai viratham 2

அல்லது எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்தா போதும். இப்போது சுவாமிக்கு நைவேத்தியம் பண்ணியதும் அம்பாளிடம் என் கணவர் ஆரோக்கியமாகவும் பணியில் உயர்நிலையையும் அடையணும், வியாபாரம் சிறக்கணும் அப்படின்னு வேண்டிக் கொள்ளலாம்.

குடும்பத்துல மனமகிழ்ச்சி, நல்ல நிகழ்வுகள் நடைபெறணும்னு பிரார்த்தனை பண்ண வேண்டும். இந்த ஆண்டு நல்ல ஆரோக்கியமாக அமையணும் என்றும் அம்பாளிடம் வேண்டிக் கொள்ளலாம்.

கணவருக்கு உணவு கொடுத்து அவர் சாப்பிட்டதும் மனைவி சாப்பிட வேண்டும். கணவரிடம் ஆசிர்வாதம் வாங்குவது நல்லது. சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தைக் கடைபிடித்தால் குடும்பத்துக்கு நல்ல வளர்ச்சியையும், மகாலெட்சுமி கடாட்சத்தையும் பெற்றுத் தரும்.

களி நைவேத்தியம் காலையிலேயே பண்ணிடுங்க. இந்த ஆண்டில் வெள்ளிக்கிழமை இந்த விரதம் வருவதால் அம்பாளிடமும், நடராஜரிடமும் உள்ளன்போடு வேண்டிக்கொண்டு இந்த விரதத்தைக் கடைபிடித்து வாழ்க்கையில் எல்லா நலமும், வளமும் பெற வாழ்த்துகிறோம்.

 

 

 

Published by
Sankar