வாழ்க்கை முறை

உணர்வுகளைப் பகிர்ந்திட மனிதர்க்கு மொழியே தேவையில்லை…! எமோஜிக்கள் போதும்… உலக எமோஜி தினம் – ஜூலை 17!

மனிதன் தன்னுடைய எண்ணங்களை, உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு உதவக்கூடிய ஒரு கருவி தான் மொழி. ஆதிகாலத்தில் மனிதன் தன் எண்ணங்களை வரைவதன் மூலம் வெளிப்படுத்தியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள் அதன் பின் மெல்ல மெல்ல எழுத்து , மொழி ஆகியவை வளர்ச்சி பெற்றன. இன்று உலகெங்கும் பல்லாயிரக்கணக்கான மொழிகள் பேசப்பட்டு வந்தாலும் இன்றைய இணையதள வாழ்க்கையில் அனைவருக்கும் பொதுவாக உள்ள ஒரு மொழி தான் எமோஜிஸ்.

தொலைத்தொடர்பு சாதனங்கள் சமூக ஊடகங்கள் இவற்றினை பயன்படுத்துபவர்கள் கட்டாயம் எமோஜியை பயன்படுத்தாமல் இருக்க மாட்டார்கள்.

மகிழ்ச்சி, கோபம், சிரிப்பு, அழுகை, வியப்பு‌, காதல் என்று உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது மட்டுமின்றி உண்ணும் உணவு, பார்க்கக் கூடிய வேலைகள், விலங்குகள், பறவைகள், பூக்கள், வானிலை, போக்குவரத்து, நாட்டின் கொடிகள் என அனைத்திற்கும் எமோஜிக்கள் வலம் வருகின்றன. செய்திகளை தட்டச்சு செய்து அனுப்பும் நேரத்தை வெகுவாக குறைத்து எமோஜிக்கள் நேரத்தை மிச்சமாக்குகிறது.

இந்த எமோஜிக்களை முதன் முதலில் கண்டுபிடித்தது ஜப்பானியர் தான். 1999ஆம் ஆண்டு ஜப்பானில் சேர்ந்த ஷிகேடகா குரிதா என்பவர் தான் இந்த எமோஜியை முதன் முதலில் வடிவமைத்தது. டொகோமோ நிறுவனத்தில் பணிபுரிந்த இவர் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக குறுஞ்செய்தியை தட்டச்சு செய்யாமல் அதற்கு இணையாக படங்களை அனுப்பலாம் என்று இந்த எமோஜிக்களை வடிவமைத்தார். ஆரம்ப காலத்தில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் 180 எமோஜிக்களை உருவாக்கினார். இன்று உலகெங்கும் 1800க்கும் மேற்பட்ட எமோஜிக்கள் பயன்பாட்டில் உள்ளன.

2014ஆம் ஆண்டிலிருந்து எமோஜிபீடியாவின் நிறுவனர் ஜர்னி பர்ஜ் ஜூலை 17ஆம் தேதியை உலக எமோஜி தினமாகக் கொண்டாட வேண்டும் என்று அறிவித்தார். இந்த ஆண்டு இது பத்தாவது உலக எமோஜி தினம் ஆகும்.

இந்த எமோஜி தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பல போட்டிகளை அறிவித்துள்ளது எமோஜிகளை வரைதல், வினாடி வினா, எமோஜிகளை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட  விடுகதைகளை தீர்த்தல் போன்ற பல போட்டிகளை அறிவித்துள்ளது.

ஒரு நாளில் நம்முடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்த பல விதமான எமோஜிக்களை நாம் பயன்படுத்துகிறோம். நண்பர்கள், உறவினர்கள், கணவன், மனைவி, காதலர்கள் என்று மட்டும் இல்லாமல் இன்று அலுவலக குரூப்பிலும் எமோஜிக்களே அதிகம் பயன்படுகிறது. உலகில் உள்ள அத்தனை மக்களுக்கும் பொதுவான மொழியாக உள்ள இந்த எமோஜி வைத்து கவிதையை உருவாக்குதல், திரைப்படங்களை உருவாக்குதல் என்று நாளுக்கு நாள் எமோஜியின் பங்கு அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. பொம்மைகள், டீ சர்ட், பர்ஸ், தலையணை, பை என நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களிலும் எமோஜிக்கள் இடம் பிடித்து விட்டன. இப்படி நம் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்ட இந்த எமோஜியின் தினத்தை நாமும் கொண்டாடி மகிழ்வோம்.

Published by
Sowmiya

Recent Posts