விதவை தாய் சுபநிகழ்ச்சிகளை முன் நின்று நடத்தலாமா?!



விதிவசத்தால் கணவனை இழந்த தாய், தன்னுடைய பிள்ளைகளின் சுபநிகழ்ச்சிகளில் பெற்றோர் செய்யவேண்டிய சடங்கை செய்யாம ஒதுங்கி நிற்பதை பார்த்திருக்கோம். அப்படி விதவை தாய் ஒதுங்கி நிற்கலாமா?!

கூடாது. குடியிருந்த கோயில்ன்னு தாயைத்தான் சொல்றோம். மாதா, பிதா, குரு, தெய்வம்ன்னு தாய்க்கு அடுத்தபடியாதான் தெய்வமே இருக்கின்றது. கோயிலிலோ அல்லது தெய்வத்திலோ நல்லவை கெட்டவைன்னு பார்ப்பதில்லை. அதுப்போலதான் தாயிலும் பார்க்கக்கூடாது. தாய்க்குரிய கிரகம் சந்திரன். சந்திரன்தான் மனோகாரன். புத்திக்குரியவன். எனவே தாய்க்கும், புத்திக்கும் உரியது ஒரே கிரகம்தான்.அதனால்தான் தாயை தண்ணிக் கரையில் பார்த்தால் பிள்ளையை வீட்டில் போய் பார்க்க வேண்டாம் என்று சொல்வார்கள்.தாயைப் போல பிள்ளை, நூலப் போல சேலை என்றெல்லாம் அதனால்தான் சொல்வார்கள். சந்திரன்தான் முக்கியம். ஒரு ஜாதகத்தில் சந்திரன் வலிமையாக இருந்தால் அவர்கள் தாயை மதிப்பார்கள். தாயை மதிக்க மதிக்க அவர்கள் வளமையாவார்கள்.கணவனை இழந்த அம்மாவாக இருந்தாலும், எந்த ஒரு நல்ல நிகழ்ச்சியாக இருந்தாலும் அவர்களை வைத்துத்தான் அதனைத் துவக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நிச்சயம் அந்த குடும்பத்தினர் நல்லபடியாக இருப்பார்கள்.

உலகம் உருவாக சூரியன் எப்படி காரணமோ அதுமாதிரி மனிதன் உருவாக தாய் காரணம். ஒரு பிள்ளையை சுமந்து, பெற்று, வளர்க்க ஒரு தாய் எத்தனை சிரமப்பட்டிருப்பாள்?! அப்படி கஷ்டப்பட்டவளை ஒதுக்கி வைத்து நல்ல காரியம் நடத்துவது சரியா?! அதுமில்லாமல் நன்றி மறப்பது நன்றன்று ஆச்சே! அதனால் விதவையானாலும் தாயை ஒதுக்கி வைக்காமல் சுபநிகழ்ச்சியை அவளையே முன்நின்று நடத்தச்சொல்வதே அவளுக்கு நாம் செய்யும் மரியாதை, கைமாறு எல்லாமே!

Published by
Staff

Recent Posts