உலக சக்திகளின் மொத்த உருவம் தான் வேல்..! பிரச்சனைகள் தீரணுமா… அப்படினா இதை மட்டும் செய்யுங்க..!

“வேல் வேல் வெற்றி வேல்… வெற்றி வேல் வீரவேல்… வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா… வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா…” என வேலை மையமாகக் கொண்டு நாம் முருகப்பெருமானை அவ்வப்போது போற்றி வழிபடுவோம். இந்த வேலின் சிறப்பு என்ன? என்று பார்க்கலாமா…

அருணகிரிநாதர் திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி என நிறைய தொகுப்புகள் அருளினார். இவர் நமக்கு மணி மந்திர ஒளஷதமாக 3 வகுப்புகள் தெரிவித்துள்ளார். சீர் பாத வகுப்பு – மணி, தேவேந்திர சங்க வகுப்பு – மந்திரம், வேல் வகுப்பு – ஒளஷதமாக சொல்லப்பட்டுள்ளது. ஒளஷதம் என்பது மருந்து. இது நோய்க்கும், பிறவிக்கும் உண்டு.

அந்த மருந்து தான் வேல் வகுப்பு. இதைத்தான் பின்னாளில் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் மந்திர தொகுப்பாக மாற்றுகிறார். 64 பாக்களைக் கொண்டது. 16 பாடல்கள் வேல் வகுப்பில் உண்டு. வேல் வகுப்பு தான் வேல் மாறல். இது ஆற்றல் நிறைந்த அற்புதமான பதிகம். இதைப் படித்து வந்தால் வேலின் வலிமையும், ஆற்றலும் நமக்குக் கிடைக்கும்.

வேலை மட்டுமே பிரதானமாகக் கொண்டு கோவில்களை வைத்து வழிபட்டு வருகின்றனர். இது இலங்கையிலும் உள்ளது. முருகப்பெருமானுக்கு 3 சக்திகள். இச்சா, கிரியா, ஞான சக்திகள். இச்சா சக்தியாக வள்ளியும், கிரியா சக்தியாக தெய்வானையும், ஞான சக்தியாக வேலையும் வைத்துள்ளார். ஞானமாகிய வேலுக்கு மிகப்பெரிய ஆற்றல் உண்டு.

Vel2

சிவபெருமான் முருகப்பெருமானை சூரசம்ஹாரத்துக்குப் புறப்படு என்றபோது அவர் 11 கைகளுக்கும் 11 ஆயுதங்களைக் கொடுத்தார். மொத்தம் 12 கை. ஒரு கையில் மட்டும் ஆயுதம் இல்லாமல் இருந்தது. தேவேந்திரனுக்கு பயம் வந்து விட்டது.

எங்கே இந்த ஒரு கையையும் அபயவிரதமாகக் காட்டி விட்டால் என்ன பண்ணுவது என பயந்து நடுங்கி நின்றார். சிவபெருமான் உலகில் உள்ள அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி வேல் ஒன்றை செய்து அதை அம்பாள் கையில் கொடுத்தார். இந்த வேலை நீ சக்தி வேலாக முருகப்பெருமானிடம் கொடு என்றார்.

அந்த வேலில் அம்பாளும் தன் சக்தியை சேர்த்து முருகப்பெருமானிடம் கொடுக்கிறார். அது அழிக்கும் பொருள் மட்டுமல்ல. ஆக்கும் பொருளாகவும் உள்ளது. வேல் என்பது பகைவர்களுக்கு அழிக்கும் பொருள். பக்தர்களுக்குக் காக்கும் பொருள். முருகன் என்றாலே வேல், மயில், சேவல் தான்.

அப்பேற்பட்ட அழகான வேலை நாம் பூஜையில் வைத்துக் கொள்ளலாமா என சந்தேகம் வருகிறது. நமக்கு ஏற்றவாறு சின்னதாக வேலை வைத்துக் கொள்ளலாம். வேல் கூர்மையாக இருந்தால் அதில் எலுமிச்சம்பழத்தைக் கண்டிப்பாக குத்தி வைத்துக் கொள்ள வேண்டும். வேல் என்பது ஆயுதம்.

அதைப் பயன்படுத்தும் போது தான் ஆயுதம். மற்ற நேரங்களில் அதைக் காப்பாற்றும் பொருளாக எண்ண வேண்டும். அதனால் அதில் வெற்றிக்கனியை வைக்க வேண்டும். மேருகிரி என்ற மலையை சிவபெருமான் வில்லாக வைக்கிறார். ஆனால் முருகன் அதை தனது வேலுக்கு மேல் எலுமிச்சம்பழமாக வைத்தாராம். அதைக் காட்டவே இப்படி எலுமிச்சம்பழத்தை வைக்கிறார்களாம். பால், தண்ணீர் வைத்து அபிஷேகம் செய்யலாம்.

எளிமையாக மலர் போட்டு, சந்தன, குங்குமம் வைத்து வழிபடலாம். வேல் இல்லாதவர்கள் முருகர் படத்தில் உள்ள வேலுக்கு சந்தன குங்குமம் வைங்க. பூ போடுங்க. அதன்பிறகு வேல் மாறலைப் படிங்க. ஒரு பிரச்சனையில் இருந்து வெளியே வரணும்னு நினைச்சா 48 நாள்களை எடுத்துக்கொண்டு வேல் மாறலைப் பாராயணம் பண்ணலாம்.

இதற்கான பிடிஎப் காப்பி கீழே தரப்பட்டுள்ளது. அடேங்கப்பா இவ்வளவு பெரிசா இருக்கே என மலைக்காதீர்கள். பிரச்சனையும் பெரிதாகத் தானே இருக்கிறது என்று எண்ணிப் பாருங்கள். தீரணும்னா மனம் தளராமல் படித்து வாருங்கள்.

மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.

வேல் மாறல்

Published by
Sankar

Recent Posts