வாயுத்தொல்லையை போக்கும் பூண்டு ரசம்..


தென்னிந்திய சமையலில் ரசம் முக்கிய இடம் பெறும். தக்காளி ரசம், பருப்பு ரசம், மிளகு ரசம் என ரசத்தில் பல்வேறு வகைகள் உண்டு. அதில் பூண்டு ரசமும் ஒன்று. ரசம் ஜீரண சக்தியை தூண்டி நமது சாப்பாட்டினை செரிக்க உதவுகிறது. அதிலும் பூண்டினை அதிகம் சேர்த்துக்கொண்டால், வாயுத்தொல்லை நீங்கும்.

தேவையான பொருட்கள்:

புளி – 1 சின்ன நெல்லிக்காய் அளவு

கொத்தமல்லி – சிறிது

உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…

பூண்டு பற்கள் – 6

பச்சை மிளகாய் – 1

மிளகு – 1/2 டீஸ்பூன்

சீரகம் – 1/2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 2 டீஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

வரமிளகாய் – 2

பூண்டு – 5 பற்கள்

தக்காளி – 1 (நறுக்கியது)


செய்முறை:

முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் புளியை 1 1/2 கப் தண்ணீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.

அதிலும் தக்காளியை சேர்த்த பின்னர், தக்காளியின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.

பின் அதில் புளிச்சாற்றினை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், பூண்டு ரசம் ரெடி!!!

Published by
Staff

Recent Posts