ஆன்மீகம்

இன்று கார்த்திகை ஐயப்பவிரதம் ஆரம்பம்- முறையான விரதம் இருந்து ஐயப்பனை வழிபடுங்கள்

ஹிந்துக்களின் புகழ்பெற்ற விரதங்களில் ஒன்று கார்த்திகை ஐயப்பன் பூஜை. 48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனை மனதார நினைத்து இந்த பூஜை செய்யப்படுகிறது. இந்த நாட்களில் மது, மாது, சூது போன்ற எதுவும் கூடாது என்பதே தாத்பர்யம். 48 நாட்கள் முடிவில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வருவதுதான் மரபு. இந்த பூஜை இன்று ஆரம்பமாகிறது.

மனிதனின் ஆசைகள் பலவாகும் எல்லாவற்றுக்கும் ஆசைப்படுவதே மனிதர்களின் இயல்பு. ஆசைகள் அதிகமாகிவிட்டால் பார்க்கும் எல்லாவற்றிலும் ஆசை வரும். மனிதனுக்கு வரும் ஆசைகளில் முக்கிய ஆசை பெண் ஆசை. இந்த பெண் ஆசையில் இருந்து மனிதனை விலக்கி பந்த பாசத்தில் இருந்து 48 நாட்கள் மனிதனை விலக்கி ஐயப்பனை நினைக்க செய்து மனிதன் ஆசைகளில் இருந்து விடுபட செய்வதும் பெண் ஆசைகளில் இருந்து விடுபட செய்வதும் ஐயப்ப விரதத்தின் முக்கிய அம்சமாகும்.

பெண் ஆசை மட்டுமல்ல  தீங்கு விளைவிக்கும் மது, புகையிலை போன்ற தேவையில்லாத போதை வஸ்துக்களை உபயோகித்து அற்ப இன்பம் காண்பவர்களுக்கும் இறைவன் ஒருவன் தான் எப்போதும் இன்பமானவன் இதெல்லாம் வெறும் மாயை என உணர்த்துவதே ஐயப்ப பூஜையின் சிறப்பம்சம் ஆகும்.

ஐயப்ப பூஜை செய்பவர்கள் அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து குளித்து ஐயப்ப பூஜை செய்ய வேண்டும். நீல நிற , கறுப்பு நிற அல்லது காவி நிற ஆடைகள் அணிய வேண்டும். வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், இல்லறம் கூடாது. கழுத்தில் ஐயப்ப மாலை அணிய வேண்டும்.  கீழேதான் படுத்துறங்க வேண்டும் , சைவ உணவுகளையே சாப்பிட வேண்டும், புரோட்டா போன்ற உணவுகளை கூட தொடவே கூடாது. மாலையிலும் அது போல் குளித்து அருகில் உள்ள கோவிலிலோ அல்லது வீட்டிலோ ஐயப்பன் படத்தின் முன்னால் உட்கார்ந்து அவரை போற்றி பாட வேண்டும் . முக்கியமாக மனதுக்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து விசயங்களில் இருந்தும் விலக வேண்டும். புகையிலை, சிகரெட், பான்மசாலா போன்ற எந்த விசயங்களும் கண்டிப்பாக கூடாது.

இந்த நியம நிஷ்டைகளை கடைபிடித்தால்தான் ஐயப்ப விரதம் நிறைவு பெறும் . இந்த நியம நிஷ்டைகளை தற்போது கடைபிடிப்பவர்கள் வெகு குறைவு. இந்த நியம நிஷ்டைகளை கடைபிடித்தால்தான் ஐயப்ப விரதத்தின் பலன்கள் நம்மை சேரும். சும்மா வீம்புக்காகவும் பெருமைக்காகவும் விரதம் இருந்து கொண்டு சிலர் சிகரெட் புகைப்பதை எல்லாம் பார்க்க நேரிடுகிறது. அப்படி செய்வதால் நீங்களே தீங்கை தேடிக்கொள்கிறீர்கள் என அர்த்தம்.முறையான விரதம் இருந்து ஐயப்பனின் அருள் பெறுங்கள்.

Published by
Abiram A

Recent Posts