மின்வாரியம் டெபாசிட் கட்டணம் வசூல் செய்வது ஏன்? எப்படி கணக்கிடப்படுகிறது?

இந்த மாதம் மின் கட்டண பில்லை பார்த்தவர்கள் குழப்பமடைந்து இருப்பார்கள் என்பதும் கிட்டத்தட்ட அனைவருக்குமே அதிக தொகை வந்திருக்கும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த அதிக தொகை எதனால் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மின்வாரியம் டெபாசிட் என்று ஒரு தொகையை வசூல் செய்யும். மே அல்லது ஜூன் மாத மின் பில்லுடன் அந்த தொகை இணைக்கப்படும் என்பதால் ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒருமுறை அதிக மின் கட்டணம் வருவது போன்று இருக்கும்

இந்த டெபாசிட் தொகை எதற்காக வசூலிக்கப்படுகிறது என்றால் மின்கட்டணம் நாம் கட்டவில்லை என்றால் பாதுகாப்பிற்காக மின்வாரியம் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்று கொள்கிறது.

ஏற்கனவே மின்சார இணைப்பு பெறும் போது ஒரு டெபாசிட் தொகை வசூல் செய்யப்பட்டிருக்கும். அதற்கு பின்னர் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டெபாசிட் தொகை வசூலிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த தொகை எப்படி கணக்கிடப்படுகிறது என்றால் ஒரு ஆண்டில் மின்சார பில் சராசரியை கணக்கில் கொண்டு வசூலிக்கப்படும். உதாரணமாக ஒரு மாதத்திற்கு 1500 ரூபாய் மின்கட்டணம் வருகிறது என்றால் ஒரு வருடத்திற்கு 18000 ரூபாய் வரும். அதை 12ஆல் வகுத்தால் 1500 வரும், இந்த 1500 ரூபாயை மூன்றால் பெருக்கி அதாவது 4500 ரூபாய் டெபாசிட் தொகை வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டணத்தை தான் ACCD என்று கூறுவார்கள். அதாவது ACCD என்றால் Additional Current Consumption Deposit என்று கூறப்படும்.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஏற்கனவே ஒரு சிலரிடம் இந்த டெபாசிட் கட்டணம் பெற்றுள்ள நிலையில் நுகர்வோர்களிடம் இருந்து வந்த எதிர்ப்பு காரணமாக டெபாசிட் கட்டணம் பெறப்போவது இல்லை என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

ஒருவேளை ஏற்கனவே நுகர்வோரிடமிருந்து இந்த டெபாசிட் தொகை பெறப்பட்டிருந்தால் அது அடுத்த மாத பில்லில் கழித்துக் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Bala S

Recent Posts