அழகுக் குறிப்புகள்

உங்களுக்கு முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிகிறதா.. கவலை வேண்டாம் எண்ணெய் சருமம் உடையவர்களுக்கு எளிய வீட்டு குறிப்புகள்!

ஒரு சிலருக்கு எப்பொழுதும் முகத்தில் எண்ணெய் வழிந்தபடியே இருக்கும். என்ன தான் சரும பராமரிப்பு மேக்கப் என முயற்சித்தாலும் எண்ணெய் வழிவதை கட்டுப்படுத்த முடியாது. எண்ணெய் சருமம் உடையவர்களுக்கு எளிதில் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாது என்பது நன்மையே ஆனால் முகத்தில் எண்ணெய் சத்து அதிகமாகும் பொழுது முகப்பரு போன்ற பிரச்சனைகள் உண்டாகும். எனவே முகத்தில் அதிகமாய் வழியும் எண்ணெய்யை கட்டுப்படுத்த சில எளிய வழிமுறைகளை வீட்டிலேயே செய்யலாம்.

முகத்தில் வழியும் எண்ணெயை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்:

1. முகத்தை கழுவுதல்:

முகத்தை கழுவ வேண்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதானே என்று நினைக்கலாம் ஆனால் ஒரு சிலர் வீட்டில் இருக்கு தானே இருக்கிறோம் என்று அலட்சியமாய் விட்டுவிடுவர். தினமும் குறைந்தது இரண்டு வேளை முகத்தை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். கிளிசரின் உள்ள சோப்பினை பயன்படுத்துதல் நல்லது.

2. துடைக்கும் காகிதத்தை பயன்படுத்துதல்: 

மெல்லிய சிறிய அளவிலான துடைக்கும் காகிதங்களை எப்பொழுதும் கையில் வைத்திருங்கள். தேவைப்படும் பொழுது உங்கள் முகத்தில் ஒற்றி எடுப்பதன் மூலம் தேவையற்ற அதிகம் உள்ள எண்ணெயினை நீக்க முடியும். இது சருமம் பிசுபிசுப்பாக தோற்றம் அளிக்க விடாமல் பாதுகாக்கும்.

3. தேன்:

இயற்கை நமக்கு அளித்த மிகச் சிறந்த மருந்து தேன். ஆன்டி பாக்டீரியலாவும் ஆன்டி செப்டிக்காகவும் பயன்பட கூடியது. தேன் சருமத்தை மாய்சரைஸ் செய்யுமே தவிர எண்ணெய் பசையுடன் வைக்காது.

தேனினை முகத்தில் மசாஜ் செய்து 10 நிமிடம் கழித்து கழுவினால் எண்ணெய் வழிதலை ஓரளவு குறைக்கலாம்.

4. ஓட்ஸ்:

ஓட்ஸ் சருமத்தை மென்மையாக்கி முகத்தில் உள்ள எண்ணெய்யை உறிஞ்சி விடுகிறது. ஓட்ஸ் முகத்தை எக்ஸ்போலியட் செய்வதிலும் சிறந்தது. ஓட்ஸினை தயிர், தேன், மசித்த பழங்கள் இவற்றுடன் சேர்த்தும் முகத்திற்கு பயன்படுத்தலாம்.

5. பப்பாளி பழம்:

பப்பாளி சருமத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு பழமாகும். பப்பாளியுடன் எலுமிச்சை சேர்த்து முகத்திற்கு நல்ல மசாஜ் கொடுத்து 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் எண்ணெய் பசை நீங்கும்.

6. முட்டை வெள்ளை கரு:

ஒரு முட்டையின் வெள்ளை கருவோடு எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். இருபது நிமிடங்களுக்குப் பிறகு முகத்தினை கழுவினால் முகத்தில் எண்ணெய் பசை குறையும். முட்டை வெள்ளை கரு மற்றும் எலுமிச்சை பழம் இரண்டுமே முகத்தில் உள்ள துளைகளை இறுக்கமடைய செய்யக்கூடியது. எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரிக் அமிலம் எண்ணெய் பசையை உறிஞ்சக்கூடியது.

7. இயற்கையாய் கிடைக்கும் ஒப்பனை களிமண்:

சரும பராமரிப்புக்கு என்றே பலவகை இயற்கை களிமண்கள் உள்ளன. ரசாயனங்கள் இல்லாத இந்த இயற்கை களிமண்கள் சருமத்திற்கு பல நன்மைகளை தரக்கூடியது. இந்தக் களிமண்ணினை தண்ணீரிலோ அல்லது ரோஸ் வாட்டரிலோ கலந்து முகத்தில் தடவி காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் இந்த களிமண் எண்ணெய் பசையை உறிஞ்சி இருப்பதை காணலாம்.

8. பாதாம்:

பாதாம் முகத்திற்கு சிறந்த எக்ஸ்போலியேட்டாக மட்டும் செயல்படுவதில்லை. இது முகத்தில் உள்ள தேவையற்ற எண்ணெய் பசையை நீக்கி மாசுக்களை அகற்றுகிறது.

மூன்று ஸ்பூன் பாதாம் பவுடருடன் தேனினை கலந்து முகத்தில் ஸ்கிரப் செய்ய எண்ணெய் பசை நீங்கும்.

9. தக்காளி: 

ஒரு ஸ்பூன் சர்க்கரையுடன் ஒரு தக்காளியின் சதைப்பகுதியை சேர்த்து முகத்தில் வட்ட வடிவில் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.

ஐந்து நிமிடங்கள் இந்த மாஸ்கினை முகத்தில் அப்படியே விட்டுவிட்டு முகத்தை கழுவினால் எண்ணெய் நீங்கி இருப்பதை கண்கூடாக பார்க்கலாம்.

10. கற்றாழை:

கற்றாழை எண்ணெய் பசையை குறைத்திட உதவி புரியும் மிக முக்கிய பொருளாகும். கற்றாழை உங்களுக்கு ஏற்றுக் கொள்ளும் என்றால் இரவில் கற்றாழையை முகத்தில் போட்டு உறங்கி விடவும் காலையில் முகத்தினை கழுவினால் வேறுபாட்டை நன்கு உணரலாம். சளித்தொல்லை இருப்பவர்களும், தோல் அதிக உணர் திறன் கொண்டவர்களும் இம்முறை பயன்படுத்த வேண்டாம்.

எந்த பேக் போட்டாலும் முகத்தை கழுவிய பின்னர் அழுத்தி துடைக்காமல் ஒற்றி எடுங்கள்.

Published by
Sowmiya

Recent Posts