பூர்வஜென்ம பலன்- திருப்பாவை பாடலும், விளக்கமும்- 10



பாடல்:

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
பேற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும்
தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திற ஏல் ஓர் எம்பாவாய்

பொருள்

முற்பிறவியில் எப்பெருமான் நாரயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக்கின்ற பெண்ணே! உன் இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமனம் வீசும் துளசியை தலையில் அணிந்த நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது. சோம்பல் திலகமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும் இல்லாமல் கதவைத் திறந்து வெளியே வா.

விளக்கம்..

நல்ல வாழ்வு அமையப்பெற்றால் நல்ல உறக்கம் வரும். அப்படி நல்ல வாழ்க்கை அமைய இறைவனை வேண்டி விரதமிருந்து பாவக்காரியங்களில் ஈடுபடாம இருக்கனும். அப்படி முற்பிறவியில் நோன்பிருந்து, இந்த பிறவியில் சுகவாழ்வு வாழும் பெண்ணே! அடுத்த பிறவியிலும் இதேப்போல் சுகவாழ்வு வாழ பரந்தாமனை வணங்கினால் அப்பேறு கிடைக்கும். கும்பகர்ணன்தான் தூக்கத்துக்கு அரசன். அவனையும் மிஞ்சிவிடுவாய் போல! சீக்கிரம் எழுந்துவா பெண்ணே! என தோழி கிண்டல் செய்வதாயும், அறிவுரை கூறுவதுபோலவும் அமைந்த பாடல் இது..

திருப்பாவை பாடலும், விளக்கமும் தொடரும்….

Read more at: https://tamil.oneindia.com/art-culture/essays/2011/26-sri-andal-s-thiruppavai-aid0174.html

Published by
Staff

Recent Posts