40 ஆண்டுகளுக்கு முன் வெளியான கே. பாக்கியராஜ் படத்தின் ரீமேக்… கைக்கோர்த்த சசிகுமார்…

இயக்குனரும் நடிகருமான கே.பாக்கியராஜ் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘முந்தானை முடிச்சு’. நடிகை ஊர்வசி அறிமுகம் ஆன திரைப்படம் இதுதான். 30 லட்சம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் மாபெரும் வெற்றி பெற்று 4 கோடி வசூலித்தது. 25 வாரங்களுக்கு மேலாக திரையிடப்பட்டு வெள்ளிவிழா படமானது. இந்த படத்தின் மூலம் கே. பாக்கியராஜ் அவர்கள் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை பெற்றார்.

ஏ.வி. எம் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட இப்படம் தென்னிந்தியா முழுவதும் அதிக நாட்கள் திரையிடப்பட்டு வரலாறு காணாத வரவேற்பை பெற்றது. இப்படம் தெலுங்கில் ‘மூடு முல்லு’ (1983), கன்னடத்தில் ‘ஹல்லி மேஷ்ட்ரு’ (1992) மற்றும் இந்தியில் ‘மாஸ்டர்ஜி’ (1985) என மறுஆக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வாயிலாக கே. பாக்கியராஜ் அவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். குறிப்பாக பெண் பார்வையாளர்கள் இவரை கொண்டாடினர்.

புதுமுகமாக அறிமுகம் ஆன ஊர்வசிக்கு முதல் படமே வெற்றிப் படமானது. நடிப்பில் அனுபவம் இல்லாத நிலையிலும் கூட இப்படத்தில் வரும் ‘பரிமளம்’ கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். அந்த அளவுக்கு இவரை நடிக்க வைத்தது கே. பாக்கியராஜ் அவர்கள் தான் என்று ஊர்வசி பல நேரங்களில் கூறியிருக்கிறார்.

இத்தனை சாதனைகளை புரிந்த இத்திரைப்படம் இயக்குனர் மற்றும் நடிகரான சசிகுமார் நடிப்பில் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடந்து வருகிறது. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை கே. பாக்கியராஜ் அவர்களே செய்யவிருப்பது தனிச்சிறப்பு. இயக்குனர் ஆர். கே. வெங்கட் இப்படத்தை இயக்கவுள்ளார்.

இதை பற்றி சசிகுமார் கூறுகையில், சிறு வயதிலிருந்தே கே. பாக்கியராஜ் அவர்களின் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான். அதில் என் ஆல் டைம் பேவரைட் முந்தானை முடிச்சு திரைப்படம் தான். இந்த கால இளைஞர்கள் இப்படத்தை பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதனால் எனக்கு ரீமேக் செய்யும் ஆசை வந்தது. இது முந்தானை முடிச்சின் -2 அல்ல ரீமேக் தான். இந்த கால ரசிகர்களுக்கு ஏற்றார் போல் சில மாற்றங்கள் இருக்கும். படத்தின் தலைப்பை கூட மாற்றாமல் ‘முந்தானை முடிச்சு’ என்றுதான் வைக்க உள்ளோம் என்றார். கே. பாக்கியராஜ் அவர்களுடன் பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய பலவருட கனவு. இப்போது அவரது கதை, திரைக்கதை, வசனத்தில் நடிப்பது எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது என்று கூறினார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...