வேகம் காட்டும் வெங்கட் பிரபு!.. விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் ரிலீஸ் எப்போ தெரியுமா?

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாக்‌ஷி சவுத்ரி, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படம் உருவாகி வருகிறது. குடும்ப படமாக இருக்கும் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமா அல்லது ஹெயிஸ்ட் படமா? என்கிற கேள்வியுடன் ஹாலிவுட் தரத்தில் உருவாகி வருகிறது.

தி கோட் ரிலீஸ் தேதி: 

லியோ படத்தின் பிசினஸ் 600 கோடியை கடந்த நிலையில், இந்த படத்துக்கு நடிகர் விஜய் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. 800 முதல் 1000 கோடி பிசினஸை டார்கெட் செய்து தளபதி விஜய்யின் கோட் படம் உருவாகி வருகிறது. அதற்கேற்ப ரிலீஸ் தேதியையும் சரியாக அமைத்தால் தான் வசூல் வேட்டை நடத்த முடியும் என்பதில் நடிகர் விஜய்யும் தயாரிப்பு தரப்பும் கவனமாக இருப்பதாக கூறுகின்றனர்.

இயக்குநர் வெங்கட் பிரபு ஒரு பக்கம் வேக வேகமாக சொன்ன தேதிக்குள் ஷூட்டிங்கை முடித்து விட வேண்டும் என்பதில் முழு மூச்சாக செயல்பட்டு வருகிறார். வரும் மார்ச் மாத இறுதிக்குள் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பக்ரீத் விடுமுறையில் ரிலீஸ்:

ஆனால், படம் உடனடியாக வராது என்றும் ஜூன் மாதம் தான் ரிலீஸ் ஆகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பக்ரீத் பண்டிகையில் வரும் தொடர் விடுமுறையை டார்கெட் செய்து விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை ரிலீஸ் செய்யப் போவதாகவும் ஜூன் மாதம் 13ம் தேதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள 68வது படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

தி கோட் படத்தை முடித்து விட்டு அடுத்து நடிகர் விஜய் புதிய படத்தில் கமிட் ஆவாரா அல்லது தேர்தல் வேலைகளுக்காக சில ஆண்டுகள் ஓய்வெடுத்து விட்டு முழு நேர அரசியலில் களம் காணப் போகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் ஜெமினி மேன் படத்தின் காப்பி என்றும் டி.பி. கூப்பர் கதையை தழுவி உருவாகி வரும் படம் என்றும் ஏகப்பட்ட கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், வெங்கட் பிரபு எந்த ஹாலிவுட் படத்தை பார்த்து இன்ஸ்பயர் ஆகி இப்படியொரு படத்தை உருவாக்கி வருகிறார் என்பது விரைவில் தெரிந்து விடும் என்கின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews