முதல் மேடையிலேயே பல்பு வாங்கிய லியோனி.. பட்டிமன்ற நடுவராக உருவெடுத்த சுவாரஸ்ய பின்னனி

சினிமாக்களில் காமெடிக் காட்சிகள் கொடிகட்டிப் பறந்த காலகட்டங்களில் மேடைபேச்சுகளை ரசிக்க ஒரு தனி கூட்டம் உருவானது. கோவில் விழாக்களிலும், சமுதாய விழாக்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக பட்டிமன்றம் புகழ் பெறத் தொடங்கியது. டிவியில் சீரியல்கள், வழக்கமான காமெடிகளையே பார்த்து சலித்துப் போன மக்களுக்கு பட்டிமன்ற நிகழ்ச்சிகள் ஒரு புது அனுபவத்தைக் கொடுத்தது. ஏதேனும் ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு ஒருவரை நடுவராக அமர வைத்து இரு அணிகள் அதிலுள்ள சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்து பின்னர் நடுவரின் தீர்ப்பில் முற்றுப் பெறும்.

தமிழகத்தில் எத்தனையோ புகழ்பெற்ற பட்டிமன்றப் பேச்சாளர்கள் இருக்கின்றனர். சாலமன் பாப்பையா, ராஜா, பாரதி பாஸ்கர், இளசை சுந்தரம், பர்வீன் சுல்தானா, மோகன சுந்தரம், சுகி சிவம், ஞானசம்பந்தன் போன்ற பலர் இத்துறையில் புகழ்பெற்றவர்களாக விளங்குகின்றனர். ஆனால் இவர்களில் அத்தனை பேரிலும் தனித்துவமாகக் காணப்படுபவர் தான் திண்டுக்கல் ஐ.லியோனி. நக்கல், நையாண்டி, கேலி,கிண்டல் என மேடை கவுண்டமணியாக காமெடியாகப் பேசி பட்டிமன்றங்களில் வெளுத்து வாங்குபவர். ஆனால் இவரின் முதல் பட்டிமன்றப் பேச்சு தோல்வியில் முடிந்துள்ளது என்றால் நம்ப முடிகிறதா?

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.லியோனி அங்குள்ள புனித லூர்து அன்னை மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்திருக்கிறார். ஒருமுறை இவர் பணியாற்றி பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த விழாவில் பட்டிமன்றமும் இடம்பெற்றிருந்தது. இந்தப் பட்டிமன்றத்திற்குத் தலைமை தாங்க வந்திருந்தவர்தான் பேராசிரியர் சாலமன் பாப்பையா.

பட்டிமன்றப் மேடைகளின் முன்னோடியான சாலமன் பாப்பையா அன்றைய தினம் தேர்ந்தெடுத்திருந்த தலைப்பு இயேசு செய்தது சமயப் புரட்சியா? அல்லது சமுதாயப் புரட்சியா?. இந்தத் தலைப்பில் உரையாற்ற இரு அணிகளும் தயாராக இருந்த நிலையில் சமுதாயப் புரட்சி என்ற அணியில் புலவர் இராமசாமி வர இயலாமல் போனது. எனவே மூன்றாவது பேச்சாளராக பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த லியோனியைக் கேட்க அவரும் சம்மதித்து அவசர அவசரமாக குறிப்புகள் எடுத்துக் கொண்டு மேடையில் பேச ஆரம்பித்திருக்கிறார்.

வடிவேலுவின் எவர்கிரீன் பாய் காமெடி.. பாய் சுருண்ட சீக்ரெட் இதான்..
முதல் பட்டிமன்ற மேடை என்பதால் இயல்பாகவே அனைவருக்கும் ஏற்படும் பயமும், கூச்ச சுபாவமும் அவரையும் தொற்றியிருக்கிறது. ஒருவழியாக “கேளுங்கள் தரப்படும்..தட்டுங்கள் திறக்கப்படும்..” என்றெல்லாம் பாட்டுப் பாடி தன்னுடைய பேச்சை நிறைவு செய்திருக்கிறார். நடுவராக இருந்த சாலமன் பாப்பையா இவரின் பேச்சை பாராட்டினார். அதன்பிறகு பட்டிமன்றம் நிறைவு பெற்றபின் அனைவரும் உணவருந்தச் செல்லும் போது சாலமன் பாப்பையா லியோனிக்கு பட்டிமன்றங்களில் எப்படிப் பேச வேண்டும் என கற்றுக் கொடுத்திருக்கிறார்.

மேலும் பார்வையாளர்களை கவர்வது, எதிரணிக்கு எப்படி பேசுவது என்றெல்லாம் குறிப்புகளைக் கொடுக்க அதன்பின் முழுநேர பட்டிமன்றப் பேச்சாளராக மாறி இன்று இவர் பயணம் செய்யாத நாடுகளே இல்லை என்னும் அளவிற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லியோனி தனது பட்டிமன்றத்தை நடத்தியிருக்கிறார்.

இவரின் பலமே நகைச்சுவைதான். நகைச்சுவையாக நம் வீட்டில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளைப் பட்டிமன்றங்களில் படம் பிடித்துக் காட்டுவதில் வல்லவர் லியோனி என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...