தலைவர் 170 படத்தின் டைட்டில் இதுதானா?.. அண்ணாத்த படத்திற்கு பிறகு மீண்டும் ’அ’ எழுத்திலா?..

ஜெய் பீம் இயக்குனர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், அமிதாபச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் தலைவர் 170.

கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் எளிமையான முறையில் பூஜை போட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு, கேரளா, தமிழ்நாடு, மும்பை மற்றும் ஆந்திராவில் சில பகுதிகள் என பல்வேறு மாநிலங்களில் படமாக்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக முடித்து விட அயராது உழைத்து வருகிறார் ஞானவேல் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

தலைவர் 170 பட டைட்டில்:

இந்த ஆண்டு ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம் 600 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது. படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோருக்கு காசோலை மற்றும் சொகுசு காரை பரிசாக கலாநிதி மாறன் வழங்கினார்.

இந்நிலையில் அடுத்ததாக, லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள லால் சலாம் படத்தில் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ள ரஜினிகாந்த் வரும் பொங்கல் பண்டிகைக்கு அந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். மேலும், தலைவர் 170 படத்தில் படு பிசியாக நடித்து வருகிறார். மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 171 ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என லோகேஷ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஜினி பிறந்தநாள் ட்ரீட்:

இந்நிலையில், தலைவர் 170 படத்தின் டைட்டில் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகும் என்கிற தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், அண்ணாமலை, அருணாச்சலம், அண்ணாத்த போன்ற படங்களின் வரிசையில் அ வரிசையில் தொடங்கும் படமாக தலைவர் 170 இருக்கும் என கூறுகின்றனர். அதிகபட்சமாக ஆண்டவன் டைட்டில் வைக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறுகின்றனர். கூடிய விரைவில் படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர் 170 படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் லால் சலாம், தலைவர் 170 படங்கள் பாக்ஸ் ஆபிஸை திணற விட காத்திருக்கின்றன. 2025ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171வது படமும் இதுவரை தமிழ் சினிமா செய்யாத வசூல் சாதனையை அந்த படம் படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.