வில்லன் நடிகர்களுக்கெல்லாம் வில்லாதி வில்லனான பி.எஸ்.வீரப்பா.. சிரிப்பிலேயே மிரட்டும் நடிப்பு!

‘‘அடைந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி’’ என்ற ஒற்றை வசனம் மூலம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நினைவில் இருப்பவர்தான் பி.எஸ். வீரப்பா. தமிழ் சினிமாவில் வில்லன்களுக்கெல்லாம் முன்னோடி வில்லனாகத் திகழ்ந்தவர். மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த ஆரம்ப கால படங்களில் நம்பியாருக்கும் முன்னதாக வில்லன் வேடங்களில் நடித்தவர் பி.எஸ்.வீரப்பா.

‘ஹா…ஹா… ஹா..’ என்ற அதிரடி சிரிப்பிலேயே கலங்கடித்தவர். எம்.ஜி.ஆர். நடித்த ‘சக்கரவர்த்தி திருமகள்’ படத்தில்தான் முதன்முதலாக இந்த இடிச்சிரிப்பை பி.எஸ்.வீரப்பா வெளிப்படுத்தினார். அதற்கு கிடைத்த பலத்த வரவேற்பால், பின்னர், அதுவே அவரது தனி முத்திரை ஆனது.

1939-ம் ஆண்டு வெளியான ‘மணிமேகலை’ என்ற படத்தில் வீரப்பா அறிமுகமானார். 1946-ம் ஆண்டு ஜூபிடர் பிக்சர்ஸின் ‘ஸ்ரீமுருகன்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித்திருந்தார். அந்தப் படத்தில் வீரப்பாவும் நடித்துள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட நட்பு இறுதி வரை நீடித்தது.

எம்.ஜி.ஆரின் கடைசி படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ உட்பட பல படங்களில் வீரப்பா நடித்துள்ளார். மேலும் எம்.ஜி.ஆர். நடித்த ‘நாம்’ படத்தை ஜூபிடர் பிக்சர்ஸுடன் சேர்ந்து மேகலா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. படத்துக்கு திரைக்கதை, வசனம் கருணாநிதி. படத்தில் வரும் வில்லன் பாத்திரத்துக்கு வீரப்பாவை எம்.ஜி.ஆர். சிபாரிசு செய்தார்.

வழிந்த இரத்தத்திலும் ததும்பிய காதல் ரசம்.. கவியரசர்ன்னா சும்மாவா..!

பி.எஸ். வீரப்பாவின் தமிழ் உச்சரிப்பும் ஏற்ற இறக்கத்துடன் அவர் பேசும் பாங்கும் மக்களைக் கவர்ந்தன. எம்.ஜி.ஆர். நடித்து 1957-ம் ஆண்டு வெளியாகி அமோக வெற்றி பெற்ற ‘மகாதேவி’ படத்தில் ‘‘அடைந்தால் மகாதேவி; இல்லையேல் மரணதேவி’’ என்ற வீரப்பாவின் வசனம் இன்றளவும் பிரபலம்.

வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் கண்ணும் கண்ணும் கலந்து பாடலில் வைஜெயந்திமாலா மற்றும் பத்மினி இருவரும் ஒருவருக்கு ஒருவர் சவால் விட்டு நடனமாடும் ஒரு நடன காட்சியில், பி.எஸ். வீரப்பா, “சபாஷ்… சரியான போட்டி…” என்று கூறும்போதுதான் அந்தப் பாடலே சூடுபிடிக்கும்.

அந்தப் படத்தில் வீரப்பாவின் பெயர் கருணாகரன். சந்தர்ப்பவசத்தால், வீரப்பாவின் விருப்பத்துக்கு மாறாக, இளவரசியாக வரும் நடிகை எம்.என்.ராஜத்தை அவருக்கு கட்டாயமாக திருமணம் செய்து வைத்து விடுவார்கள். திருமணம் முடிந்து வீரப்பாவை ‘‘அத்தான்…’’ என்று எம்.என்.ராஜம் அழைப்பார். ஆத்திரத்தை அடக்கியபடி வேதனை கலந்த சிரிப்போடு வேண்டா வெறுப்பாக, ‘‘அப்படிச் சொல்… சத்தான இந்த வார்த்தையிலே கருணாகரன் செத்தான்’’ என்று வீரப்பா கூறும்போது தியேட்டரில் எழும் சிரிப்பலை அடங்க சில நிமிடங்கள் பிடிக்கும்.

படங்களில் வாள் வீச்சில் எம்.ஜி.ஆருக்கு ஈடு கொடுத்து வீரப்பா சண்டையிடுவார். எம்.ஜி.ஆரிடம் உள்ள ஒரு விசேஷ குணம், எந்த பாத்திரத்தில் எந்தக் காட்சியில் நடித்தாலும் சரி சுற்றிலும் நடப்பவற்றில் ஒரு கண் வைத்திருப்பார்.

‘ஜெனோவா’ படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆருக்கும் வீரப்பாவுக்கும் ஆக்ரோஷமான வாள் சண்டை. இந்தக் காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும்போது, பள்ளத்தில் உருண்டுவிழ இருந்த வீரப்பாவை எம்.ஜி.ஆர். பிடித்து இழுத்து சரியான நேரத்தில் காப்பாற்றியதால் அவர் உயிர் பிழைத்தார். இதை வீரப்பா பலமுறை நன்றியோடு கூறியுள்ளார்.

Published by
John

Recent Posts