தமிழ் சினிமாவின் அந்தகால விக்கிபீடியா.. இவரை வெச்சே படத்தை ஹிட் செய்ய எம்ஜிஆர் போட்ட பிளான்..

இன்றைய காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவின் புதிய புதிய அப்டேட்கள் பற்றி பேச ட்ராக்கர்கள் என்ற பெயரில் எக்ஸ் தளத்தில் ஒரு உலகமே உள்ளது. அப்படி இருக்கையில், இதுவரை தமிழ் சினிமாவில் நடந்த பல விஷயங்கள் பற்றி அறிந்து கொள்ள பலரும் விக்கிபீடியாவையும் ஒரு பக்கம் ரசிகர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் சமூக வலைத்தளம், இணையதளம் வருவதற்கு முன்னர் வாழும் விக்கிபீடியா என்ற பெயர் எடுத்தவர் தான் பிலிம் நியூஸ் ஆனந்தன். அவரிடம் கிடைக்காத தகவல்களே இருக்காது என்ற அளவுக்கு பல அரிய புகைப்படங்களையும், தகவல்களையும் சேமித்து வைத்திருந்தார் ஆனந்தன்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் செய்தியாளராக அவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஏராளமான தமிழ் சினிமா குறித்த விவரங்களை சேமித்து வைத்திருந்தார். அதை அவர் விரும்பி உணர்வுபூர்வமாக செய்தார் என்பது தான் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். வேறு யாரிடமும் இல்லாத அரிய புகைப்படங்களை கூட ஆனந்தன் தொகுத்து வைத்திருந்தார். தமிழ் சினிமா குறித்த எந்த புகைப்படம் வேண்டும் என்றாலும் அவர் உடனே அது குறித்த புகைப்படங்களை எடுத்து கொடுக்கும் அளவுக்கு ஒரு மினி நூலகமாகவே வாழ்ந்தவர் தான் ஆனந்தன். அவருடைய சேவையை பாராட்டி தான் அவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. அது மட்டுமின்றி கலாபீடம், கலைச்செல்வம் ஆகிய விருதுகளும் வழங்கப்பட்டது.

கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழ் சினிமா குறித்து பிலிம் நியூஸ் ஆனந்தன் சேர்த்து வைத்திருந்த விவரங்கள், புத்தகங்கள், புகைப்படங்களை சேகரிப்பதற்காக அரசு 10 லட்சம் ரூபாய் வழங்கியது. அதுமட்டுமின்றி அவர் எழுதிய ’சாதனை படைத்த தமிழ் திரைப்பட வரலாறு’ என்னும் நூலை வெளியிடுவதற்கும் அரசு நிதி உதவி செய்திருந்தது.

film news anandan

பிலிம் நியூஸ் ஆனந்தன் சென்னையை சேர்ந்தவர். அவர் பள்ளி நாட்களிலேயே கதை, வசனம் எழுதி நடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அதிலும் குறிப்பாக புகைப்படத்தை சேகரிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். அவரே சொந்தமாக ஒரு கேமரா வாங்கி சில அபூர்வமான புகைப்படங்களை அவரே எடுக்க ஆரம்பித்தார். மேலும் ஒளிப்பதிவு கலையையும் அவர் கற்றுக் கொண்டார்.

ஸ்டில் கேமரா மூலம் வித்தியாசமான கோணங்களில் புகைப்படம் எடுப்பது, அபூர்வமான புகைப்படங்களை சேமித்து வைப்பது, அவரது வாழ்நாள் பணியாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். அவர் தான் எடுத்த புகைப்படங்களை முதலில் அவரது நண்பர் நடத்தி வந்த பிலிம் நியூஸ் என்ற பத்திரிக்கையில் தான் வெளியிட்டார். அதனால் தான் அவருக்கு பிலிம் நியூஸ் ஆனந்தன் என்ற பெயரே வந்தது.

அதன் பிறகு சில சினிமா பத்திரிகைகளில் பத்திரிகையாளராக மாறினார். எம்ஜிஆர் நடித்த நாடோடி மன்னன் படத்திற்காக ஸ்டில்கள் எடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஸ்டில்களை ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களிடம் கொடுத்தால் தான் மிகச் சிறப்பான முறையில் அனைத்து பத்திரிகைகளிலும் சென்று சேரும் என்பதை சரியாக யூகித்த எம்ஜிஆர் அவரிடம் ஒப்படைத்தார். அடுத்த நாளே அவர் எதிர்பார்த்தது போல் அனைத்து பத்திரிகைகளும் அந்த புகைப்படங்கள் ஜொலித்தது.

தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரைப்பட உலகின் தகவல் களஞ்சியம் என்று அவர் அழைக்கப்படுகிறார். பிலிம் நியூஸ் ஆனந்தன் கடந்த 2016 ஆம் ஆண்டு காலமானார்.  அவரது மறைவுக்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதா நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருந்தார்.

பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களுக்கு சிவகாமி என்ற மனைவியும் டைமன்ட் பாபு, ரவி ஆகிய மகன்களும் கீதா ,விஜயா ஆகிய மகள்களும் உள்ளனர். இவர்களில் டைமன்ட் பாபு தற்போது சினிமா செய்தி தொடர்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.