இந்த மூணு விஷயத்தையும் ஒரே ஐபிஎல் மேட்ச்ல செய்த முதல் ஆளு சுனில் நரைனா?.. எந்த வீரருக்கும் கிடைக்காத பாக்கியம்..

யாரும் நினைத்து பார்க்க முடியாத ஒரு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியே பெற முடியாது என்று நினைத்த போட்டியில் அதனை சாதித்து காட்டியிருந்தார் ராஜஸ்தான் அணியின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர். தொடக்க வீரராக களமிறங்கி கடைசி வந்த வரை நின்றிருந்த அவர், தன்னால் என்ன முடியுமோ அதனை சிறப்பாக செய்து அணியை வெற்றி பெறவும் வைத்திருந்தார்.

பட்லரின் சாதனை காரணமாக முதல் இன்னிங்ஸில் சுனில் நரைன் சதம் அந்த அளவுக்கு பிரகாசம் இல்லாமல் போய்விட்டது. ஆனால் அதே வேளையில் ஜோஸ் பட்லர் சதம் அடித்து என்னென்ன சாதனைகளை செய்தாரோ அதற்கு நிகராக பல்வேறு சாதனைகளை ஐபிஎல் தொடரில் சொந்தமாக்கி உள்ளார் சுனில் நரைன். பந்து வீச்சாளரான இவர் கொல்கத்தா அணியில் இணைந்த பின்னர் தொடக்க வீரராகவும் களமிறங்கி வந்தார்.

அப்படி இருக்கையில் கம்பீரும் கொல்கத்தா அணியில் இருந்து விலகி வேறு அணியின் ஆலோசராக சென்றதும் நரைன் தொடக்க வீரராக களம் இறங்கவில்லை. இதனிடையே இந்த ஆண்டு மீண்டும் கம்பீர் கொல்கத்தா அணியில் இணைந்துள்ளதால் அவரது திட்டத்தின் படி சுனில் நரைன் தொடக்க வீரராக களம் இறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அப்படி இருக்கையில் தான், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்தியிருந்தார் நரைன். ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து டி 20 போட்டிகளிலும் இதுவரைக்கும் 500 க்கும் மேற்பட்ட போட்டிகளில் ஆடியுள்ள சுனில் நரைனின் முதல் சதமாகவும் இது பதிவாகி இருந்தது.

மேலும் பந்து வீச்சாளராக விக்கெட்டுகளையும் எடுத்துள்ள சுனில் நரைன், சில முக்கியமான சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார். ஐபிஎல் தொடரில் ஷேன் வாட்சன் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு அடுத்தபடியாக ஹாட்ரிக் விக்கெட் மற்றும் சதம் அடித்த மூன்றாவது வீரர் என்ற அந்தஸ்தையும் பெற்றிருந்த சுனில் நரைன், ஒரே போட்டியில் சதம் மற்றும் விக்கெட்டை எடுத்த வீரர் என்ற பெருமையையும் கிறிஸ் கெயில் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோருக்கு பிறகு பெற்றிருந்தார்.

இது தவிர இந்த போட்டியில் சுனில் நரைன் படைத்த முக்கியமான ஒரு சாதனையை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்திருந்த நரைன், விக்கெட்டை எடுத்ததுடன் ஒரு கேட்சையும் பிடித்திருந்தார். இப்படி ஒரே போட்டியில் சதம், கேட்ச் மற்றும் விக்கெட் எடுத்த வீரர்கள் ஐபிஎல் தொடரில் யாருமே இல்லை என்ற நிலையில், இந்த மூன்றையும் ஒரே போட்டியில் செய்து புது சரித்திரத்தையும் ஐபிஎல் தொடரில் தொடங்கி வைத்துள்ளார் சுனில் நரைன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...