படம் சரியா போகல.. சினிமாவை விட்டு விலக முடிவெடுத்த சுந்தர்.சி.. இரண்டு நாள் கழிச்சு நடந்த அற்புதம்..

தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திரைப்படங்கள் எடுப்பதில் சிறந்த இயக்குனராக இருப்பவர் சுந்தர்.சி. ஜெயராம், கவுண்டமணி, குஷ்பு ஆகியோர் இணைந்து நடித்திருந்த முறை மாமன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவின் அறிமுகமானார். இந்த படத்தில் ஜெயராம் – கவுண்டமணி இணைந்து செய்யும் காமெடி காட்சிகள் அதிக வரவேற்பை பெற்றிருந்தது.

தொடர்ந்து கார்த்திக்கை வைத்து உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தை இயக்கி இருந்த சுந்தர்.சி, மேட்டுக்குடி, உனக்காக எல்லாம் உனக்காக உட்பட மொத்தம் 6 திரைப்படங்கள் அவரை வைத்து இயக்கி உள்ளார். இது தவிர, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அருணாச்சலம் படத்தை இயக்கி இருந்த சுந்தர். சி, உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து அன்பே சிவம் என்ற படத்தையும் உருவாக்கி இருந்தார். அதே போல, அஜித்தை வைத்து உன்னைத்தேடி என்ற படத்தை இயக்கி இருந்த சுந்தர். சி, சத்யராஜ், சரத்குமார், பிரசாந்த், சிம்பு, ஆர்யா, ஜீவா என பல நடிகர்களையும் இயக்கி உள்ளார்.

கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், சூரி என காமெடி நடிகர்களை வைத்து சுந்தர். சி உருவாக்கி இருந்த கதாபாத்திரங்கள் இன்றளவிலும் புகழ் பெற்றும் விளங்கி வருகிறது. திரைப்படங்கள் இயக்குவது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் நடிகராகவும் நிறைய படங்களில் அவதாரம் எடுத்திருந்தார் சுந்தர். சி.

தலைநகரம் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான சுந்தர். சி, இதன் பின்னர் வீராப்பு, தீ, முரட்டுக்காளை, அரண்மனை, இருட்டு உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதில் அரண்மனை படத்தில் அடுத்தடுத்த பாகங்களை இயக்கி வரும் சுந்தர். சி, முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாரர் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படங்களின் அடுத்த பாகமான ‘அரண்மனை 4’, 2024 ஆம் ஆண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Actor Sundar C

இந்த நிலையில், உள்ளத்தை அள்ளித்தா படம் வெளியான பின்பு திரைப்படத் துறையை விட்டு போக சுந்தர்.சி முடிவு எடுத்தது பற்றிய தகவல் கிடைத்துள்ளது. உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம், சுந்தர். சி இயக்கத்தில் உருவான 3 வது திரைப்படமாகும். இந்த திரைப்படம் வெளியான நாளில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இரண்டாவது நாளில் திரை அரங்கம் சென்று பார்த்த சுந்தர். சி-க்கு அதிர்ச்சி காத்திருந்தது. 2, 3 வரிசை மட்டுமே நிரம்பி இருக்க இந்த படம் அவ்ளோ தான் என சுந்தர். சி முடிவு எடுத்து விட்டதாக தெரிகிறது.

இனிமேல் ஊர் பக்கம் போய்விட வேண்டியது தான் என்றும் படத்தின் ஒளிப்பதிவாளர் UK செந்தில் குமாரிடம் சுந்தர். சி ஜாலியாக கூறி உள்ளார். ஆனால், படம் பார்த்த பலர் படத்தை பற்றி சொல்லி சொல்லி கிடைத்த ப்ரமோஷன் மூலம் 4,5 தினங்களுக்கு பிறகு ஹவுஸ்புல் காட்சிகள் ஓட ஆரம்பித்ததாக தகவல்கள் கூறுகின்றது. இதன் பின்னர், அடுத்தடுத்து வெற்றி படங்களை இயக்கிய சுந்தர். சி-க்கு ரஜினி மற்றும் கமல் ஆகியோரை இயக்கும் வாய்ப்பும் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews