துப்பாக்கி படத்துக்கு டிக்கெட் கிடைக்கலைன்னு புலம்பிய எஸ்கே… 10 வருஷத்துல ஏ.ஆர். முருகதாஸ் பட ஹீரோ..!

வாழ்க்கை ஒரு வட்டம் என திருமலை படத்தில் தளபதி விஜய் சொல்லும் வசனம் சிவகார்த்திகேயனுக்கும் அப்படியே பொருந்திப் போயிருக்கிறது. அஜித்குமாரின் ஏகன் படத்தில் அடையாளம் தெரியாத கதாபாத்திரத்தில் நடித்த சிவகார்த்திகேயன் நடிகர் அஜித்துக்கு அடுத்து சினிமாவில் வசூல் நாயகனாக மாறியுள்ளார்.

நடிகர் விஜயின் துப்பாக்கி படத்துக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என புலம்பிய சிவகார்த்திகேயன் தற்போது அந்தப் படத்தை இயக்கிய ஏ ஆர் முருகதாஸ் படத்தில் அடுத்து ஹீரோவாக நடிக்க உள்ளார்.

எல்லாமே பெரிய ஹீரோ படங்கள்:

தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, ஏழாம் அறிவு, கத்தி, சர்க்கார், ஸ்பைடர், தர்பார் உள்ளிட்ட பல படங்களை முன்னணி நடிகர்களை வைத்து இயக்கிய ஏ ஆர் முருகதாஸ் ஒரு கட்டத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி அடுத்த படத்தை தொடங்க முடியாத நிலையில் கோலிவுட்டிலிருந்து காணாமல் போய்விட்டார்.

ஏ ஆர் முருகதாஸ் கதை தான் சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு, ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்த சிவகார்த்திகேயன் பல ஆண்டுகள் கழித்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இறுதியாக நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி:

விஜய் டிவியில் விஜய், ஏ ஆர் முருகதாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் விஜய் விருதுகளை வாங்கிக் கொண்டிருக்கும்போது அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நீயா நானா கோபிநாத் உடன் ஆங்கரிங் செய்து வந்தவர் சிவகார்த்திகேயன்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தொடங்கிய பயணம் கோலிவுட்டில் அடுத்த வசூல் மன்னனாக மாவீரனாக மாறியுள்ளார் சிவகார்த்திகேயன். கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ந்து கடின உழைப்பை போட்டதன் விளைவு தான் இவருக்கு முன்னதாக நடிக்க வந்த பல நடிகர்களை தூக்கி சாப்பிட்டு விஜய் அஜித்துக்கு அடுத்த இடத்தை பாக்ஸ் ஆபீஸில் பிடித்துள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்:

பிரம்மாண்டமான கதைகளை படங்களாக இயக்கி வந்த ஏ ஆர் முருகதாஸ் ஸ்பைடர் மற்றும் தர்பார் படங்களின் தோல்வி காரணமாக சில ஆண்டுகள் அமைதியாக இருந்தார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் படத்தை இயக்கும் வாய்ப்பு ஏ ஆர் முருகதாசுக்கு கிடைத்த நிலையில், தரமான சம்பவத்தை செய்து மீண்டும் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுக்க அனைத்து முயற்சிகளையும் ஏ ஆர் முருகதாஸ் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான மாவீரன் திரைப்படம் வெறும் நகைச்சுவை திரைப்படமாக அல்லாமல் சமூக கருத்துக் கொண்ட திரைப்படமாக இருந்த நிலையில், ரசிகர்களை அந்த படம் வெகுவாக கவர்ந்தது.

கருத்துள்ள படமாக அமையும்:

முன்னதாக மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன், பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ உள்ளிட்ட படங்களிலும் ஹெவியான சமூக அக்கறை கருத்துக்கள் நிறைந்திருக்கும்.

ரமணா, கத்தி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ ஆர் முருகதாஸிடம் சொல்லவே தேவையில்லை எப்போதுமே தனது படங்களில் சோசியல் மெசேஜ் நிறைந்திருக்கும். ஷங்கர் பாணியில் ஒரு பிரம்மாண்ட படத்தை சிவகார்த்திகேயனுக்கு ஏ ஆர் முருகதாஸ் நிச்சயமாக கொடுப்பார் என தெரிகிறது. தனது 23-வது படமாக ஏ ஆர் முருகதாஸ் படம் இருக்கும் என இன்று ட்விட்டரில் அறிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews