எம்ஜிஆரின் நெருங்கிய நண்பன்.. சிவாஜிக்கே நடிப்பு கற்றுக்கொடுத்த ஆசான்.. தமிழ் சினிமா கொண்டாட தவறிய கலைஞன் கே.டி. சந்தானம்..

 

தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் சிலர் பன்முக திறமை கொண்டு விளங்குவார்கள். ஒரு பக்கம் நடிகராக இருக்கும் சிலர் இயக்குனர், பாடலாசிரியர் என பல திறமைகளை கொண்டும் தமிழ் சினிமாவில் தங்களின் தாக்கத்தை உண்டு பண்ணி இருப்பார்கள். அந்த வகையில், மிகவும் முக்கியமானவர் தான் பழம்பெரும் நடிகர் கே. டி. சந்தானம்.

கே.டி. சந்தானம் மதுரையில் நாடக சபாவில் ஆசிரியராக பணிபுரிந்தார். அவர் பல நடிகர்களுக்கு நாடகங்கள் நடிக்க கற்றுக் கொடுத்துள்ளார். இவரிடம் படித்த மாணவர்களில் ஒருவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். பின்னாளில் ’பாசமலர்’ திரைப்படத்தில் சிவாஜியுடன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். அதேபோல் ’ரகசிய போலீஸ் 100’ திரைப்படத்தில் எம்ஜிஆருடன் இணைந்தும், அவருக்கு அப்பாவாக ஆசை முகம் என்ற திரைப்படத்திலும் சந்தானம் நடித்திருந்தார்.

கடந்த 1960-களில் உடுமலை நாராயண கவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார், மருதகாசி உள்ளிட்ட பிரபலமான பாடலாசிரியர்கள் இருந்த நிலையில் அவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான பாடல்களையும் எழுதியவர் தான் கேடி சந்தானம். ’அம்பிகாபதி’ திரைப்படத்தில் அவர் எழுதிய பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

1948 ஆம் ஆண்டு ஞானசவுந்தரி என்ற திரைப்படத்தில் பாடல் எழுத தொடங்கியவர் வேதாள உலகம், பாரிஜாதம், மோகனசுந்தரம், சின்னத்துரை உள்ளிட்ட 50கள் மற்றும் 60களில் ஏராளமான படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். ராஜராஜ சோழன் என்ற திரைப்படத்தில் பாடல்கள் எழுதியது மட்டுமின்றி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார்.

காரைக்கால் அம்மையார், சங்கே முழங்கு, திருமலை தென்குமரி, வை ராஜா வை, அக்கா தங்கை, ரகசிய போலீஸ் 115 போன்ற படங்களில் அவர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் அசத்தக் கூடிய இவர், சரோஜா தேவியின் தந்தையாக கலங்கரை விளக்கம் என்ற படத்தில் நடித்திருப்பார்.

மேலும் சின்னதுரை என்ற திரைப்படத்தில் அவர் திரைக்கதை வசனமும் எழுதி இருப்பார். கடந்த 1950 ஆம் ஆண்டு வெளியான விஜயகுமாரி என்ற படத்தில் இவரது பாடலுக்கு வைஜெயந்திமாலா நடனம் ஆடியிருப்பார் என்பதும் ’லாலு லாலு’ என்ற அந்த பாடல் மிகப்பெரிய அளவில் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜிக்கு குருவாகவும் எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான நண்பராகவும் இருந்த கேடி சந்தானம்  தமிழ் திரையுலகில் அதிகம் அறியப்படாத ஒரு நட்சத்திரமாக இருந்தார் என்பது துரதிர்ஷ்டமே.

Published by
Bala S

Recent Posts