நீங்க தான் இந்தியால சிறந்த நடிகரா.. பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி.. எந்த நடிகரும் சொல்லாத பதிலை சொல்லி அசர வைத்த நடிகர் திலகம்

தமிழ் சினிமாவை நிச்சயமாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு முன், சிவாஜி கணேசனுக்கு பின் என பிரித்து விடலாம். இதற்கு காரணம் ஒரு நடிகரின் பரிமாணம் எப்படி இருக்க வேண்டும் என்பது சிவாஜி செய்த அற்புதத்தில் முற்றிலுமாக மாறி போனது. அவர் அறிமுகமான பராசக்தி திரைப்படத்தில் வரும் நீதிமன்ற காட்சி ஒன்று போதும், ஒரு தேர்ந்த நடிகன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு. வெறுமென வசனத்தை மட்டும் பேசி முடிக்காமல், அதனை தனது ஸ்டைலில் நிறைய நடிப்புத் திறன்களோடு பேசி மிரள வைத்திருப்பார் சிவாஜி கணேசன்.

இதனைத் தொடர்ந்து, தனது நடிப்பு பரிமாணத்தில் எக்கச்சக்க திரைப்படங்களில் நடித்து வந்த சிவாஜி கணேசன், ஒரு கட்டத்திற்கு பின் கமர்ஷியல் கலந்த திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருந்தார். அப்படிப்பட்ட திரைப்படங்களில் கூட, சிவாஜியின் நடிப்பும் முக பாவனைகளும் ஒவ்வொரு காட்சிகளிலும் தெரியும் படி இருக்கும். இதே போல, திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் நாகேஷுடன் சிவாஜி கணேசன் போட்டி போட்டு பேசும் காட்சி, இன்று வரை எவர்க்ரீனாக இருக்கும் ஒரு அம்சமாகும். இன்றைய காலத்து இளைஞர்கள் கூட இப்படி சிவாஜி நடித்து பட்டையைக் கிளப்பிய பல்வேறு படைப்புக்களை பற்றி புகழ்ந்து பேசி வருகின்றனர்.

வயதான பிறகு, முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோருடன் நிறைய திரைப்படங்களில் சிவாஜி கணேசன் நடித்து வந்தார். இதில், தேவர் மகன், படிக்காதவன், படையப்பா உள்ளிட்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் சிறந்த படங்கள் பட்டியலில் நிச்சயம் இடம்பெறுபவை ஆகும். இதில், ரஜினிகாந்துடன் சிவாஜி கணேசன் இணைந்து நடித்த படையப்பா திரைப்படம், சிவாஜி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவின் உச்சம் தொட்ட நடிகராக விளங்கிய சிவாஜி கணேசன், தனது 72 வது வயதில், 2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சிவாஜி கணேசனிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு அவர் சொன்ன பதில், பலரையும் கவர்ந்து வருகிறது. பிரபல நடிகர் மற்றும் பத்திரிக்கையாளர் செந்தில் குமரன், சிவாஜி கணேசனை ஒரு முறை பேட்டி எடுத்த போது அவர் கேட்ட கேள்வி பற்றியும், அதற்கு சிவாஜி சொன்ன பதில் பற்றியும் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செந்தில்குமரன் பேசும் போது, “உங்களை இந்திய சினிமாவில் சிறந்த நடிகர் என சொல்கிறார்களே. அது பற்றி நீங்கள் என்ன நினைக்குறீர்கள் ஐயா’ என கேட்டேன். இதற்கு பதில் சொன்ன சிவாஜி கணேசன், ‘என்ன செய்வது. என்னை விட சிறந்த நடிகர் உங்களிடம் இல்லை. அதனால் அப்படி சொல்கிறீர்கள். அப்படி ஒருவர் இருந்தால் என்னை சொல்வீர்களா’ என கேட்டார்.

சிவாஜி கணேசன் இடத்தில் வேறு யார் இருந்தாலும் இப்படி தங்களை தரம் தாழ்த்தி பேசி இருக்க மாட்டார்கள். தாங்கள் சிறந்த நடிகன் என்றோ அல்லது அப்படி ஒன்றும் இல்லை என்றோ கூறி இருப்பார்கள். ஆனால், பெரிய உயரத்தில் இருந்த சிவாஜி கணேசன், இப்படி பேசியது ஆச்சரியமாக இருந்தது” என செந்தில்குமரன் தெரிவித்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.