சிம்மம் – ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022!

எல்லோரையும் நிர்வாகம் செய்யும் சிம்ம ராசி அன்பர்களே!

உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி மூலமாக நீங்கள் உங்களுடைய முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய அவசியத்தை உணரவைக்கிறது. ஆமாம், உங்களுடைய சிம்ம ராசிக்கு மூன்றாம் இடத்திற்கு கேது பகவான் வருகிறார். உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு ராகு பகவான் வருகிறார். ஒருவருடைய பிறந்த ஜாதகத்தில் திரிகோணங்களில் ராகு கேது இருந்தால் அது பித்ரு தோஷம் என்று அர்த்தம். அதேபோன்று கோச்சார சமயத்திலும் சர்ப்ப கிரகங்கள் திரி கோணங்களுக்கு வருவது முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய தர்ப்பணத்தை நினைவூட்டுகிறது என்றுதான் அர்த்தம்.

ராகு கேது பெயர்ச்சி ஆன ஒரு மாதத்திற்கு பிறகு உங்களுடைய ராசிக்கு எட்டாம் இடத்திற்கு குருபகவான் பெயர்ச்சியாகிறார். உங்களுக்கு குரு பகவான் 5-ஆம் பார்வையாக இருப்பதாலும் எட்டாம் இடத்திற்கு சென்றாலும் அது ஆட்சி பெற்ற குருவாக இருப்பதால் உங்களுக்கு குரு பகவான் மூலமாக நன்மைகள் மட்டுமே உண்டாகும்.

“கலியுகம் செல்லச்செல்ல இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணமும் தற்கொலை செய்த முன்னோர்களுக்கு தில ஹோமம் அல்லது நவகலசயாகம் செய்யும் பழக்கத்தை மனிதர்கள் கைவிட்டு விடுவார்கள். அதனால் அவர்கள் பல்வேறு விதமான பற்றாக்குறையால் அவதிப்படுவார்கள்” என்று சித்தர்களுடைய ஜோதிட கிரகங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை தினமும் ஒவ்வொருவரும் வீட்டில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கொண்டு இருந்தார்கள்.சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து கொண்டிருந்தார்கள். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆண்டுக்கு 3 முறை மட்டுமே தர்ப்பணம் செய்யும் பழக்கம் நம்மிடையே பரவலாக துவங்கியது. அதே சமயம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் கர்மவினை தொகுப்பு மிகவும் அதிகமாகவும் கடினமாகவும் இருந்துகொண்டிருக்கிறது. நமக்கு அடுத்து வரக்கூடிய தலைமுறைகளுக்கு இன்னும் அடர்த்தி மிகுந்த கர்மவினை தொகுப்பு இருக்கும். அந்த கர்ம வினையால் ஏற்படும் துயரங்கள் நம்மை நெருங்காமல் இருப்பதற்கு தினமும் தர்ப்பணம் செய்யும் பழக்கத்தை நாம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டும். கற்றுக்கொண்ட பிறகு தினமும் வீட்டில் இறந்த முன்னோர்களுக்கு முறைப்படி தர்ப்பணம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் வயதான தாத்தா, பாட்டி மற்றும் அப்பா, அம்மா போன்ற மூத்தவர்கள் இயற்கையான முறையில் இறந்து இருந்தால் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமை வருடாந்திர திதி மற்றும் தர்ப்பணம் ஆகும். அதேசமயம் ஒரு குடும்பத்தில் ஒருவர் அல்லது பலர் வெவ்வேறு காலகட்டங்களில் தற்கொலை அல்லது செயற்கையான முறையில் இறந்து இருந்தால் அவர்களுக்கு மறுபிறவி கிடையாது. பசியோடும் தாகத்தோடும் பல ஆண்டுகளாக ஆவியாக அலையக் கூடிய சூழ்நிலை உண்டாகும். அவ்வாறு செயற்கையான முறையில் இறந்தவர்கள் மறு பிறவி எடுப்பதற்கு பூமியில் வாழ்ந்து கொண்டு இருக்கும் அவருடைய வம்சாவளியை சேர்ந்தவர்கள் தில ஹோமம் அல்லது நவகலசயாகம் செய்யவேண்டும். அப்படி செய்த பிறகு தான் செயற்கையான முறையில் இறந்து பிரேத ஆத்மாவாக அறிந்து கொண்டு இருக்கும் முன்னோர்கள் மீண்டும் மறுபிறவி எடுப்பார்கள். அவ்வாறு செய்யாமல் இருப்பதால்தான் தமிழ்நாட்டில் பெரும்பாலான குடும்பங்கள் கடன் தொல்லை, நோய் பிரச்சனை, நிம்மதியற்ற வாழ்க்கை, துரோகங்கள் என்று பல்வேறு விதங்களில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சிம்ம ராசிக்காரர்கள் இந்த ஒன்றரை ஆண்டுகள் முழுவதும் மாதம் ஒரு முறை தம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். அதே சமயம் உங்களுடைய பரம்பரையில் யாராவது செயற்கையான முறையில் இறந்து உள்ளார்களா என்பதை விசாரித்து கண்டுபிடியுங்கள். அப்படி யாராவது இருந்திருந்தால் அவர்களுக்கு மூன்று கடல்கள் அல்லது மூன்று நதிகள் சந்திக்கும் இடத்தில் ஒரு முறை திலா ஹோமம் செய்ய வேண்டும் அல்லது நவகலசயாகம் செய்யவேண்டும். அப்படி செய்த ஒரு மண்டலத்திற்கு பிறகு உங்களுடைய பல வருட பிரச்சனை தீர்ந்து விடும்.

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இந்த ஒன்றரை ஆண்டுகள் முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் வரக்கூடிய ராகுகால நேரத்தில் அருகிலுள்ள பழமையான அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

உங்களுடைய ராசிக்கு ஒன்பதாம் இடமான லாப ஸ்தானத்திற்கு ராகு பகவான் அமர்ந்திருக்கிறார். எனவே உங்களுக்கு கிடைக்க வேண்டிய சௌபாக்கியங்கள் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு நீங்கள் ராகுபகவானின் அதிதேவதையாக இருக்கும் துர்க்கை அல்லது வராகி அல்லது காளி அல்லது மாரி அல்லது ஏதாவது ஒரு பெண் தெய்வத்தை வழிபாடு செய்வது அவசியமாகும்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 4.30 முதல் 6 மணி வரை உங்கள் ஊரில் உள்ள உக்கிர பெண் தெய்வம் சன்னதியில் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

பின்வரும் சம்கார பைரவர் மந்திரத்தை ஒரு மணி நேரம் வரை ஜெபித்து வர வேண்டும். ராகு கிரகத்தின் பிராண தேவதை சம்ஹார பைரவர் ஆவார். சம்கார பைரவர் காயத்ரி மந்திரத்தை ஜெபம் செய்து வருவதன் மூலமாக ஒரே சமயத்தில் சம்ஹார பைரவர் மற்றும் ராகு பகவான் மற்றும் உக்கிரமான பெண் தெய்வத்தின் அருளாசி கிடைக்கும். இதன் மூலமாக இந்த ஒன்றரை ஆண்டுகளில் வேலை, தொழில், கல்வி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, வருமானம் போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும்.

ஓம் மங்களேசாய வித்மஹே
சண்டிகா ப்ரியாய தீமஹி
தன்னோ சம்ஹார பைரவ ப்ரசோதயாத்
ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே மஹாதேவி ச தீமஹி
தன்னோ சண்டி ப்ரசோதயாத்

ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
+91 9629439499

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.