ஒரே படத்துல அஞ்சு பாட்டு.. அஞ்சுக்கும் வேற வேற இசையமைப்பாளர்கள்.. ஆனாலும் திரும்பி பாக்க வெச்ச அந்த ஒரு கனெக்ஷன்..

தமிழ் சினிமாவின் சிறந்த இளம் நடிகராக ஒரு சமயத்தில் வலம் வந்து தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருபவர் ஷ்யாம். நடிகர் விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில், எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான குஷி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றி இருப்பார் ஷ்யாம்.

இதனைத் தொடர்ந்து, 12 பி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் நாயகனாக அறிமுகமானார். ஜீவா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் ஷ்யாமுடன் ஜோதிகா, சிம்ரன், சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே பட்டித் தொட்டியெங்கும் ஹிட்டடித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, பாலா, லேசா லேசா, இயற்கை, உள்ளம் கேட்குமே, தில்லாலங்கடி உட்பட ஏராளமான திரைப்படங்களில் ஷ்யாம் நடித்துள்ளார். அதிலும் அவர் நடித்த இயற்கை திரைப்படம், அவரது நடிப்பு பயணத்திலேயே முக்கியமான படைப்பாக பார்க்கப்படுகிறது. மறைந்த இயக்குனர் ஜனநாதன் இயக்கி இருந்த இந்த திரைப்படம் காதலை வேறொரு பரிமாணத்தில் காட்டி இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். இன்று வரை இயற்கை படத்தை ரசிகர்கள் கொண்டாடவும் காரணம் அது தான்.

ஏராளமான முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து பணிபுரிந்து வந்த ஷ்யாம், தற்போது முக்கியமான திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இந்த ஆண்டின் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்திருந்த வாரிசு திரைப்படத்தில் விஜய்யின் சகோதரர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஷ்யாம். இவரது நடிப்பிற்கு அதிக பாராட்டுக்களும் கிடைத்திருந்தது.

அடுத்ததாக பவன் கல்யாண் நடித்து வரும் OG என்ற திரைப்படத்திலும் ஷ்யாம் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஷ்யாம் நடிப்பில் வெளியான ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே திரைப்படத்தில் ஐந்து பாடல்களுக்கும் வெவ்வேறு இசையமைப்பாளர்கள் பணிபுரிந்த தகவல் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

ஷ்யாம் நடிப்பில் இரண்டாவதாக வெளியான இந்த படத்தை பிரபல இயக்குனர் வசந்த் இயக்கி இருந்தார். மேலும், ஷ்யாமுக்கு ஜோடியாக ஸ்னேகா நடித்திருந்தார். இந்த பாடலில் வரும் ஐந்து பாடல்களுமே அந்த சமயத்தில் தமிழ் ரசிர்கர்கள் அனைவரும் முணுமுணுத்த பாடல்களாகும்.

‘யாமினி யாமினி’ என்ற பாடலை அரவிந்த் – சங்கர் ஆகியோர் இசையமைத்திருந்தனர். இதே போல ‘தொட்டு தொட்டு’ என்ற பாடலை ரமேஷ் விநாயகமும், ‘காதல் வந்துச்சோ’ என்ற பாடலை ராகவ் – ராஜா ஆகியோரும், ‘இனி நானும் நானில்லை’ என்ற பாடலை பிரபல பாடகர் ஸ்ரீனிவாசும், ‘பொய் சொல்லலாம்’ என்ற பாடலை முருகுகனும் இசையமைத்திருந்தனர்.

இப்படி ஒரே பாடலின் பாடல்களுக்கு இத்தனை இசையமைப்பாளர்களை பயன்படுத்தி இருந்த விஷயம், அந்த காலத்திலேயே வியப்பாக பார்க்கப்பட்டதுடன் அனைத்து பாடலும் ஒரே இசையமைப்பாளர் இசையமைத்த உணர்வை கொடுத்ததும் இந்த முயற்சியின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...