ஹாலிவுட்டில் மாஸ் என்ட்ரி கொடுத்த ஸ்ருதிஹாசன்.. விருதுகளை தட்டி தூக்கி அசத்தல்!

சினிமா பின்புலம் கொண்ட ஸ்ருதிஹாசன், நடிக்க வருவதற்கு முன்பு இசை மீதிருந்த ஆர்வத்தால் கலிபோர்னியாவில் இசைக் கல்லூரியில் பயின்றார். 2009ல் வெளியான அவரது தந்தை கமல்ஹாசனின் படமான உன்னை போல் ஒருவனில் இசையமைக்கும் வாய்ப்பினை பெற்றார். அதன்பின்னர் தான் 7ம் அறிவு படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானர் ஸ்ருதிஹாசன்.

அதைத் தொடர்ந்து தனுஷூடன் 3 படத்தில் நடித்தார். அப்படத்தில் ஸ்ருதிஹாசனுக்கும் தனுஷூக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி இளைஞர்களை ஈர்த்தது. தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழில் தொடர்ந்து நடித்து வந்த ஸ்ருதிஹாசன் 2021ம் ஆண்டு விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்தார். தமிழைக் காட்டிலும் தெலுங்கில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் பாலகிருஷ்ணனுடன் வீர சிம்மா ரெட்டி மற்றும் சிரஞ்சீவி, ரவி தேஜாவுடன் வால்டர் வீரய்யாவில் நடித்திருந்தார். இரு படங்களுமே தெலுங்கில் சக்கைபோடு போட்டது.

மேலும் தற்போது தெலுங்கில் பிரபாஸூடன் சலார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் டிசம்பரில் திரைக்கு வருகிறது. இதற்கிடையில்  ஸ்ருதிஹாசன் ஹாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். ‘தி ஐ’ எனும் இப்படத்தை டாப்னே ஷ்மோன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஸ்ருதிக்கு ஜோடியாக ‘தி லாஸ்ட் கிங்டம்’பட புகழ் நடிகர் மார்க் ரவுலி நடித்துள்ளார்.

1980-களில் நடைபெறுவதாக வரும் இக்கதையில், இளம் விதவையாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். கணவர் இறந்த அதே   தீவில் அவருடைய அஸ்தியை கரைக்க செல்கிறார். அப்போது அங்கு நடக்கும் சம்பவங்கள் கணவரின் இறப்பிற்கான காரணத்தை தெரியப்படுத்துகிறது. தனது கணவரை திரும்ப கொண்டு வர முடியும் என எண்ணி தீய சக்திகளால் ஈர்க்கப்படுகிறார். அதன் பின் அவர் சந்தித்த விஷயங்கள் என்ன என்பதே கதை.

shruthi 1

சமீபத்தில் இத்திரைபடம்  சர்வதேச கிரேக்க திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. சிறந்த இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளருக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. லண்டனில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதினை பெற்றுள்ளது.

’தி ஐ’ படத்தின் போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஸ்ருதிஹாசன். இத்திரைப்படம் தனது திரைப்பயணத்தில் மிகவும் ஸ்பெஷல் என குறிப்பிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews