அண்ணனாக ஆச்சி மனோரமாவிற்கு சிவாஜி செய்த வாழ்நாள் கடன்.. உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் சிந்திய மனோரமா

நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், ஆச்சி மனோரமாவும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் உருவான காமெடிகள் பல ஹிட் படங்களாக அமைந்துள்ளன. குறிப்பாக தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜிக்கும், மனோரமாவுக்குமான நடிப்புக்கு இணையாக இன்றும் எந்தக் காமெடியும் வரவில்லை. திரைத்துறையில் வெற்றிக் கொடி நாட்டிய மனோரமாவிற்கு தனது சொந்த வாழ்க்கை என்னவோ சற்று கசப்பானதாகவே போனது. மணம் முடித்த சில காலங்களிலேயே அவரது கணவர் பிரிந்து சென்று விட்டார்.

தனது தாய் மேல் மிகுந்த அன்பும், பற்றும் கொண்ட மனோரமா தனது தாயார் இறப்பின் போது நடிகர் திலகம் சிவாஜி செய்த செயலை எண்ணி பூரிப்படைந்தார். மனோரமாவின் தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தார். அவருக்கு சிகிச்சையளித்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். அவர் சிவாஜியின் குடும்ப டாக்டர். ஒரு நாள் காலையில் அம்மா இறந்து போக, அதை டாக்டரிடம் தெரிவித்தபோது அவர் வந்து பரிசோதித்து , அம்மாவின் மரணத்தை உறுதி செய்தார். பின், நேராக சிவாஜி வீட்டுக்கு சென்றவர், அங்கு விபரம் கூறியிருக்கிறார்.

அடுத்த சில மணித்துளிகளில், சிவாஜி, கமலாம்மாள், பிரபு மூவரும் வந்து விட்டனர். அழுது கொண்டிருந்த அவரை ஆறுதல் படுத்திய சிவாஜி , “அம்மாவ எப்ப அடக்கம் பண்றதா இருக்கே… சொந்தக்காரங்களுக்கெல்லாம் தகவல் சொல்லிட்டியா?” என்றெல்லாம் விபரம் கேட்டவர்,பின்னர் “இங்க பாரும்மா.. நீ எதுக்கும் கவலைப்படாதே. எப்போ எடுக்கிறதுனு மட்டும் சொல்லு. மத்ததை நான் பார்த்துக்கிறேன்..” னு சொல்லிட்டுப் போய் ஒரு வெண்பட்டுப் புடவையும், துளசி மாலையும் வாங்கிட்டு வந்திருக்கிறார்.

பின் “அம்மாவுக்கு ஒரு மகனாக , நான் தான் காரியம் எல்லாம் பண்ணப் போகிறேன்!’ என்று கூறிவிட்டுப் போனவர் மறுநாள் காலை எட்டு மணிக்கெல்லாம் வந்து தலைப்பாகை கட்டி மனோரமாவின் அம்மாவைக் குளிப்பாட்டி பட்டுப்புடவை போத்தி அம்மாவுக்கு ஒரு மகனாகவும், மனோரமாவிற்கு சகோதரன் முறையிலும் நின்று அனைத்து காரியங்களையும் செய்துள்ளார்.

மேலும் இறுதி காரியங்கள் எல்லாம் முடிந்த பின், துக்க வீட்டிற்கு வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு தயார் செய்து அனுப்பி வைத்தார். அவருடன் உடன் பிறந்த சகோதரன் கூட இப்படி செய்திருக்க மாட்டாரோ என்று நினைக்கும் அளவிற்கு ஒரு மாபெரும் நடிகர், மகத்தான மனிதர் மனோரமாவின் தாயாருக்கு செய்த மரியாதையைக் கண்ட போது உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் வடித்தார் மனோராமா.

Published by
John

Recent Posts