அடேங்கப்பா… சந்தானம் படத்திற்கு இவ்வளவு மவுசா… இரண்டு ஓடிடியில் வெளியான திரைப்படம்…

நடிகர் சந்தானம், சின்னத்திரையில் விஜய் டிவியில் 2004 ஆம் ஆண்டு லொள்ளு சபா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடித்ததன் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அதன் வாயிலாக வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்து பல வெற்றிப் படங்களில் காமெடியனாக நடித்தார்.

இந்த நிலையில், தமிழ் திரையுலகில் காமெடியனாக கலக்கி வந்த சந்தானம், ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்க்கான கதைகளை தேர்வு செய்ய ஆரம்பித்தார். அதன்படி ஹேண்ட்மேட் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற படத்தை தயாரித்து அதில் நடித்தும் இருந்தார். இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இதையடுத்து ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘இனிமே இப்படித்தான்’ போன்ற படங்களில் நடித்தார். அப்போது பல எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தார் நடிகர் சந்தானம்.

அதற்குப் பிறகு ஒரு நடிகனாக அவருக்கு திருப்புமுனை ஏற்படுத்திய திரைப்படம் ‘தில்லுக்கு துட்டு’. இரண்டு பாகங்களாக வந்த இப்படத்தில் காமெடிக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. பார்வையாளர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தது. வணிக ரீதியாக வசூலையும் வாரிக் கொடுத்தது. இந்த திரைப்படத்திற்கு பிறகு மக்கள் நடிகர் சந்தனத்தை ஹீரோவாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தனர்.

கொரோனா காலக்கட்டத்திற்குப் பிறகு இவர் நடித்த படங்கள் சரிவர தோள்கொடுக்காத நிலையில், கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த டிடி ரிட்டர்ன்ஸ் மாபெரும் வெற்றிப் பெற்று சந்தானத்தை பார்முக்கு கொண்டுவந்தது. பேய் படம் என்றால் திகிலூட்டும், பயமுறுத்தும் என்ற காலங்கள் போய் அந்த பேய்களுடன் காமெடி செய்து கலாய்த்து பேய் படங்களின் ட்ரெண்டை மாற்றிவிட்டார் நடிகர் சந்தானம்.

டிடி ரிட்டர்ன்ஸ் வெற்றிக்குப் பிறகு சந்தானம் நடித்த அடுத்த திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்கில் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது. கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு இளைஞன் மக்களின் மூடநம்பிக்கையை பயன்படுத்தி சம்பாதிக்கும் கதையை நடிகர் சந்தானத்துக்கு உரிய நகைச்சுவையுடன் கூறியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் யோகி.

தற்போது இப்படத்தை இரண்டு ஓடிடி தளங்கள் வாங்கி வெளியிட்டுள்ளன. அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஆகிய ஓடிடி தளங்களில் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் ரிலீஸாகி உள்ளது. ஓடிடியில் இப்படத்தைப் பார்க்க ஆவலோடு காத்திருந்த ரசிகர்கள் இந்த செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...