கேமராமனை கத்தியை காட்டி பயமுறுத்திய டி. ஆர்.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த திகில் சம்பவம்

தமிழ் சினிமாவில் பலரும் ஒவ்வொரு துறையில் தான் அதிக திறமையோடு விளங்குவார்கள். உதாரணத்திற்கு நடிகராக இருக்கும் சிலர், தொடர்ந்து அதில் மட்டுமே கவனம் செலுத்தி மிக முக்கியமான இடத்தை பிடிக்கவும் செய்வார்கள். இன்னொரு பக்கம், இயக்கம், நடிப்பு, பாடல், இசை என பல துறைகளில் நம்பர் 1 ஆகவும் விளங்குவார்கள். அந்த வகையில் மிக முக்கியமான ஒரு கலைஞர் தான் டி. ராஜேந்தர்.

இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், பாடகர், ஒளிப்பதிவாளர் என சினிமாவின் பல துறைகளில் ஆதிக்கம் செலுத்தியவர் டி. ஆர். இவர் இயக்கும் திரைப்படங்களில் அவரே அனைத்து பணிகளையும் செய்து நம்மை அசரவைக்கக் கூடிய படைப்புகளை தரக்கூடியவர். இவர் எழுதிய முதல் திரைப்படமான ‘ஒரு தலை ராகம்’ வெளியான சமயத்தில் மிக முக்கியமான திரைப்படமாக மாறியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, டிஆர் இயக்கிய திரைப்படங்களான ரயில் பயணங்களில், கிளிஞ்சல்கள், உயிருள்ளவரை உஷா, தங்கைக்கோர் கீதம் உள்ளிட்ட பல திரைப்படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகி உள்ளது. காதல், தங்கை செண்டிமெண்ட், எமோஷனல் உள்ளிட்ட விஷயங்களை மிக சரியான அளவில் கலந்து அதனை ரசிகர்களிடம் நேர்த்தியாக கொண்டு சேர்ப்பதில் டி. ஆர் கில்லாடி.

அதே போல, அடுக்கடுக்காக ரைமிங் வசனங்களை மிக சிறப்பாக பேசும் திறமையுடைய டி. ராஜேந்தரை போலவே பலரும் பேச முற்படுவார்கள். நம் வட்டாரத்தில் கூட சிலர் டி. ஆரை போல பேச முற்பட்டிருப்பார்கள் என்றே தெரிகிறது. தமிழ் சினிமாவில் பல சிறந்த படைப்புகளுக்கு சொந்தக்காரரான டி.ஆர், கடைசியாக வீராசாமி என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். இயக்கத்தில் கவனம் செலுத்தவில்லை என்றாலும் திரைப்படங்களில் நடித்தும், பாடல்கள் பாடியும் வருகிறார் டி. ராஜேந்தர்.

இந்த நிலையில், ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் ஒன்றை குறித்து நடிகர் சந்தானம் சில கருத்துக்களை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். “டி ஆர் சார் எப்போதும் ஒரு ரிதமுடன் தான் இருப்பார். அப்படி ஒரு ஷாட்டில் கத்தியை அவர் வேகமாக வீசுவதற்கேற்ப கேமராவும் வேகமாக வர வேண்டும் என நினைத்தார். ஆனால், அந்த படத்தில் ஒரு வயதான கேமரா மேன். டி. ராஜேந்தர் கத்தியை வேகமாக வீசிய பின்னர் தான் கேமரா வந்தது.

இதனால், சற்று அதிருப்தி அடைந்த டி. ஆர், வேகமாக கேமராவை நகர்த்தும்படி சொல்லியும் கேமராமேன் வேகமாக வரவில்லை. இதனால் சற்று டென்ஷனான டி. ஆர், ஒரு கையில் அட்டக்கத்தியும் இன்னொரு கையில் நிஜ கத்தியையும் எடுத்து ரெண்டு பக்கமும் வேகமாக வீச, தன் மீது பட்டுவிடும் என்ற பயத்தில் வேகமாக கேமராவை ஒளிப்பதிவாளர் கொண்டு வர, அந்த ஷாட்டும் சரியாக வந்தது” என சந்தானம் தெரிவித்துள்ளார்.

Published by
Ajith V

Recent Posts