பல வருசமா ரோஹித் தக்க வைத்த பெருமை.. இரண்டே போட்டியில் சல்லி சல்லியா நொறுக்கிய ஹர்திக் பாண்டியா..

நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி ஏறக்குறைய பிளே ஆப் வாய்ப்பை இழந்து விட்டது என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட 0.006 சதவீத வாய்ப்பு தான் அவர்களுக்கு இருக்கும் நிலையில் இந்த முறை ஒரு அணியாக அவர்களின் ஆட்டம் அதிக விமர்சனத்தையும் சந்தித்துள்ளது.

ஹர்திக் பாண்டியா தலைமையில் முதல்முறையாக மும்பை அணி இந்த சீசனில் ஆட, அவர்கள் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் பலம் வாய்ந்து விளங்கியபோதிலும் அவர்களால் பல அணிகளை வீழ்த்த முடியாமல் திணறிப் போனது. இதுவரை நடந்து முடிந்துள்ள 11 போட்டிகளில் மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, அடுத்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் கூட எதிரணிகள் போட்டிகளின் முடிவு அவர்களுக்கு சாதகமாக இருந்தால் மட்டும்தான் பிளே ஆப் முன்னேற முடியும்.

அப்படி நடப்பதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என்பதால் நிச்சயம் மும்பை அணி பிளே ஆப் இழந்து விட்டது என தைரியமாக கூறிவிடலாம். கடந்த சீசனில் ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசியில் சில போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று நான்காவது அணியாக ப்பிலே ஆப்பிற்கு முன்னேறி இருந்தது.

அதேபோல இந்த முறையும் அவர்கள் தொடர் வெற்றிகளைக் குறித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவார்கள் என நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருந்து வந்த நிலையில், அப்படி எதுவும் நடக்காமல் மோசமாக தோல்வி அடைந்தது பெரிய அளவில் கேள்விகளை எழுப்பி உள்ளது.

கொல்கத்தா அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த போட்டிகளில் கூட மும்பை அணி வெற்றிபெறும் கையில் இருந்த வாய்ப்பை தவற விட்டு 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. சூர்யகுமார் தவிர எந்த வீரர்களுமே ரன் அடிக்காததால் அவர்கள் தோல்வி அடையும் நிலை உருவானது.

அப்படி ஒரு சூழலில் தான் இந்த சீசனில் இரண்டு முறை ஒரு முக்கியமான, அதே வேளையில் மோசமான தோல்வியையும் மும்பை அணி பெற்றுள்ளது. ஏறக்குறைய ஆறு வருடங்களுக்குப் பிறகு மும்பை அணி டெல்லி மைதானத்தில் முதல் தோல்வியை சந்தித்திருந்தது. அதே போல வான்கடே மைதானத்தில் மும்பையை அசைத்துப் பார்க்க முடியாமல் தான் கடந்த 12 ஆண்டுகளாக ஒரு வெற்றி கூட பெறாமல் கொல்கத்தா அணி தவித்து வந்தது.

ஆனால் இந்த முறை அதே வான்கடேவில் மும்பை அணியை 12 ஆண்டுகளுக்கு பிறகு வீழ்த்தி சாதனை புரிந்துள்ளது கொல்கத்தா அணி. இப்படி பல்லாண்டுகளாக தக்கவைத்த பெருமையை இரண்டே போட்டிகளில் இந்த சீசனில் மும்பை அணி இழந்துள்ளது ரசிகர்களை இன்னும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது.

Published by
Ajith V

Recent Posts