சிவாஜி கணேசனுடன் ரஜினி, கமல் நடித்த படங்கள் இத்தனையா?

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்  தமிழ் சினிமாவின் ஒரு அகராதி என்பதால் அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என சின்ன நடிகர்கள் முதல் பெரிய நடிகர்கள் வரை ஆசைப்பட்டார்கள். அதில் பலருடைய ஆசை நிறைவேறியது.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் மாஸ் ஸ்டார்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவருக்குமே அந்த ஆசை இருந்துள்ளது. இருவரும் சில படங்களில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்துள்ளனர்.

ரஜினியும் சிரஞ்சீவியும் இணைந்து நடித்துள்ளார்களா? எத்தனை படங்கள் தெரியுமா?

குறிப்பாக கமல்ஹாசனுக்கு சிறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக இருக்கும்போதே சிவாஜி கணேசனுடன் நடிக்கும் ஆசை நிறைவேறியது. பார்த்தால் பசி தீரும் என்ற திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் குழந்தை நட்சத்திரமாக கமல்ஹாசன் நடித்திருந்தார். அதிலும் அவர் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். 1962ஆம் ஆண்டு இந்த படம் வந்த நிலையில் சுமார் 60 வருடங்களுக்கு முன்பே சிவாஜி கணேசன் உடன் கமல்ஹாசன் நடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து 1976ஆம் ஆண்டு வெளியான சத்யம் என்ற திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் கமல்ஹாசன் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். அதன் பிறகு 1977ஆம் ஆண்டு நாம் பிறந்த மண் என்ற படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர்.

ஆனால் சிவாஜி கணேசனுக்கு ஒரு அருமையான கேரக்டர் கொடுத்து அவரை கமல்ஹாசன் கௌரவப்படுத்தியது தேவர் மகன் படத்தில்தான் என்று கூறலாம். கமல்ஹாசனின் அப்பாவாக இந்த படத்தில் அவர் நடித்திருப்பார். இதுவே இருவரும் இணைந்து நடித்த கடைசி படமாகும். 1992ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

மொத்தமே 12 படங்கள் தான்.. தமிழ் திரையுலகின் உதிராப்பூ ‘உதிரிப்பூக்கள்’ மகேந்திரன்..!

அதேபோல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடன் ரஜினிகாந்தும் சில படங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா நடித்த ஜஸ்டிஸ் கோபிநாத் என்ற திரைப்படத்தில்தான் ரஜினிகாந்த் முதல் முதலாக சிவாஜியுடன் இணைந்து நடித்தார். இந்த படத்தில் ரஜினிக்கு நல்ல பெயர் கிடைத்தது.

இதனை அடுத்து நான் வாழ வைப்பேன் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய ஆனால் அதே நேரத்தில் கதைக்கு முக்கியத்துவமான கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். சிவாஜி கணேசன் ஒரு கொலை குற்றவாளியாக தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் ரஜினிகாந்த்தான் உண்மையான கொலையாளியை கண்டுபிடித்து சிவாஜி கணேசனை கொலைப்பழியில் இருந்து விடுவிப்பார். மேலும் அவருக்காக தனது உயிரை தியாகம் செய்யும் கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். இந்த படத்தில் அவரது ஸ்டைல் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தை கே.ஆர்.விஜயா தயாரித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.

அதன் பிறகு 1985ஆம் ஆண்டு படிக்காதவன் என்ற திரைப்படத்தில் சிவாஜி கணேசனின் சகோதரராக ரஜினிகாந்த் நடித்திருந்தார். சிறுவயதிலேயே அண்ணன் தம்பி இருவரும் பிரியும் சூழல் ஏற்படும். சில ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சந்திக்கும் சூழல் ஏற்படும். ஆனால் சிவாஜிக்கு தனது தம்பி தான் ரஜினிகாந்த் என்று தெரியாத நிலையில் ரஜினிகாந்த்துக்கு ஒரு வழக்கில் உதவி செய்வார். பிறகு பிறிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். இதுதான் இந்த படத்தின் கதை ஆகும். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதனை அடுத்து விடுதலை என்ற திரைப்படத்தில் சிவாஜி, ரஜினி ஆகிய இருவரும் ஒன்றாக நடித்தனர். மிகவும் பிரமாண்டமான உருவான இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் கூட நடந்தது. சிவாஜி கணேசன் ஒரு போலீஸ் அதிகாரியாகவும்  ரஜினிகாந்தை பின் தொடர்ந்து அவரை பிடிக்கும் ஒரு கேரக்டரிலும் நடித்திருந்தார். இந்த படமும் நல்ல வரவேற்பு பெற்றது.

அதன் பிறகு இருவரும் இணைந்து நடித்த படம் படையப்பா. 1999ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ரஜினிக்கு அப்பாவாக சிவாஜி நடித்திருப்பார். இந்த படத்தில் சிவாஜி கணேசன்தான் தனது அப்பா கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் விரும்பி இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரிடம் கேட்டுக் கொண்டதாகவும் அவரும் அதை ஒப்புக்கொண்டு சிவாஜியை நடிக்க வைத்ததாகவும் கூறப்படுவது உண்டு. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் சிவாஜியுடன் ரஜினிகாந்த் நடித்த கடைசி திரைப்படம் இதுதான்.

அஜித் – சிவாஜி நடிக்க இருந்த படம்.. துரோகம் செய்ய விரும்பாததால் இயக்க மறுத்த இயக்குனர்..!

சிவாஜியுடன் ரஜினி, கமல் ஆகிய இருவருமே நடித்த கடைசி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் கேரக்டர் இறந்துவிடும் வகையில் அமைந்தது ஒரு எதிர்பாராத ஒற்றுமை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Bala S

Recent Posts