விஜய் வீட்டுல என் படத்தோட ஷூட்டிங் நடந்தப்போ.. தளபதி பத்தி சூப்பர்ஸ்டார் சொன்ன குட்டி ஸ்டோரி!

தமிழ் திரையுலகில் கடந்த பல ஆண்டுகளாகவே இரு நடிகர்கள் மத்தியில் தொடர்ந்து போட்டி இருந்து வருகிறது என சொல்லலாம். எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித், விக்ரம் – சூர்யா என தொடங்கி இன்றைய காலகட்டத்தில் சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி என இரண்டு நடிகர்களுக்கு மத்தியில் அவர்களின் திரைப்படங்கள் அறிவிப்பு வரும் போதும், ரிலீசின் போதும் மாறி மாறி ரசிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.

திரையுலகில் அந்த நடிகர்கள் அனைவருமே நண்பராக இருந்த போதிலும் அவர்களின் ரசிகர்களே போட்டி என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொண்டு மாறி மாறி தங்களின் கிண்டல்களையும், விமர்சனங்களையும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து சண்டை போட்டும் வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில மாதங்களாக ரஜினி மற்றும் விஜய் இடையே மறைமுகமாக மோதல் இருப்பதாக பல்வேறு கருத்துக்கள் பரவி வரவே இரண்டு பேரின் ரசிகர்களும் கடுமையாக சமூக வலைத்தளங்களில் மோதிக் கொண்டனர்.

இதற்கு காரணமாக அமைந்தது நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் விழா மேடையில் காக்கா, கழுகு கதை ஒன்றை பேச போய் விஜய்யை குறிப்பிட்டு தான் அவர் அப்படி மறைமுகமாக கூறுகிறார் என ஒரு ஊகம் பரவியது. இதற்கடுத்து நடந்த லியோ படத்தின் சக்சஸ் மீட்டிலும் நடிகர் விஜய், ரஜினியின் கருத்திற்கு மறைமுகமாக ஒரு வார்த்தையை தெரிவித்ததாக இரண்டு பேர் ரசிகர்களும் அவர்களாகவே ஒன்றை நினைத்துக் கொண்டு கருத்துக்களை கோபமாக பரிமாறிக் கொண்டனர்.

இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான கருத்து ஒன்றை நடிகர் ரஜினிகாந்த் தற்போது தெரிவித்துள்ளார். ஜெயிலர் படத்தில் நடித்த ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக லால் சலாம் திரைப்படம், பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை ரஜினியின் மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ளார். விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் வெளியான பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனிடையே இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்த நடிகர் ரஜினிகாந்த், “தன்னுடைய கருத்தை விஜய்யுடன் ஒப்பிட்டு சமூகவலைத்தளங்களில் பகிர்ந்த சம்பவம் எனக்கு வேதனையை அளித்தது. விஜய்க்கு போட்டி விஜய் தான் என்றும் எனக்கு போட்டி நான் தான் என்றும் பலமுறை நாங்கள் கூறிவிட்டோம். விஜய் என்னுடைய கண் முன்னால் வளர்ந்த பையன். தர்மத்தின் தலைவன் படப்பிடிப்பு சமயத்தில் விஜய்யின் வீட்டில் தான் படப்பிடிப்பு நடந்தது.

அப்போது 13 வயதாக இருந்த அவரிடம் நன்றாக படிப்பில் கவனம் செலுத்திவிட்டு பின்னர் நடிக்கலாம் என நான் அறிவுரை கூறினேன். இதன் பின்னர் தனது கடின உழைப்பால் நடிகனாகி உயர்ந்து இன்று மிகப்பெரிய உயரத்தையும் விஜய் தொட்டுள்ளார். எனக்கு விஜய் தான் போட்டி என நான் சொன்னால் எனக்கு மரியாதை இல்லாமல் போய்விடும். எனக்கு ரஜினி தான் போட்டி என்று விஜய் சொன்னால் அவருக்கு மரியாதை போய்விடும்” என ரஜினி தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவதாக தகவல்கள் பரவிவரும் நிலையில், அதற்கு தன்னுடைய வாழ்த்துகளையும் ரஜினி இந்த மேடையில் தெரிவித்துள்ளதுடன் இது போன்ற மோதல்களை ரசிகர்கள் தவிர்க்கவும் அறிவுறுத்தி உள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...