திடீர் அவமானங்களையும் திடீர் அதிர்ஷ்டங்களையும் வாரி வழங்கும் ராகு பகவான்!

உலகில் பிறந்த மனிதர்களுக்கு மட்டும் பிறந்த ஜாதகம் உண்டு என்று நாம் நினைக்கிறோம் அது தவறு. குதிரைகள், யானைகள், மரம் ,செடி, கொடி என்று ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஜனன ஜாதகம் உண்டு.

சுமார் 1000 ஆண்டுக்கு முன்புவரை மன்னர்கள் காலத்தில் குதிரையின் பிறந்த நேரத்தை வைத்து அதற்கு என்று தனியாக ஜாதகம் கணிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. அந்த ஜாதகத்தை வைத்து அந்த குதிரையை படையில் சேர்ப்பார்கள்.

காலத்தை நான்கு பெரும் பிரிவுகளாக நம்முடைய முன்னோர்களாகிய பைரவ சித்தர்கள் பிரித்துள்ளார்கள். அதுதான் கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகம் ஆகும். நாம் கடைசியுகமான கலியுகத்தின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். கலியுகத்தின் கால அளவு 4,32,000 ஆண்டுகள் ஆகும். இப்பொழுது (பொது ஆண்டு 2022) 5124 ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

முதல் யுகமான கிருதயுகத்திலும் இரண்டாம் யுகமான திரேதாயுகத்திலும் பூமியில் வாழும் மனிதர்களை கட்டுப்படுத்தும் கிரகங்கள் ஐந்து மட்டுமே. மூன்றாம் யுகமான துவாபரயுகத்தில் மனிதர்களை கட்டுப்படுத்தும் கிரங்கள் ஏழாக அதிகரித்தது.

நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் ( நான்காம் யுகம்) ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் தீர்மானிப்பது 9 நவகிரகங்கள் ஆகும். இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு இது 12 கிரகங்களாக அதிகரிக்கப் போகின்றன என்பதை தீர்க்கதரிசனமாக காக புஜண்டர் போன்ற சித்தர்களும் தெரிவித்துள்ளார்கள்.

கலி என்றால் துன்பம் என்று பெயர். கலியுகம் என்றால் துன்பம் என்று அர்த்தம். எனவே கலியுகத்தில் வாழ்ந்து வரும் பெரும்பாலான ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் தினசரி வாழ்க்கை சோகமாக அல்லது ஏக்கமாக அல்லது துயரமாகவே இருக்கும். ஓரளவு பக்தியுடன் இருந்தால் மட்டுமே இந்த சோகம் மற்றும் துயரங்களில் இருந்து விடுபட்டு நிம்மதியான தினசரி வாழ்க்கை வாழலாம்.

பொது ஆண்டு 1995 முதல் நாம் வாழ்ந்து வரும் பூமியில் படிப்படியாக ராகு பகவான் ஆதிக்கம் உருவாக துவங்கி இருக்கிறது. ஒவ்வொரு 18 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் இதன் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்லும்.

இன்று உலக மக்கள் அனைவரையும் அவரவர் வாழும் இடத்திலிருந்தே தொடர்பு கொள்ள உதவும் முக்கிய கருவியின் கணிப்பொறி ஆகும். அதன் நினைவுத்திறன் ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் ஒரு முறையும், இரண்டு மடங்காக அதிகரிக்கிறது. அதேசமயம் அதன் விலை பாதியாக குறைந்து கொண்டே செல்கிறது.

இதன் மூலமாக கணிப்பொறி, கணிப்பொறிகளை இணைக்கும் இணையம், ஸ்மார்ட் போன்கள், செயற்கை கோள்கள், இணையத்தில் பங்குபெறும் ஒவ்வொரு அமைப்புகள், மனிதர்கள், நிறுவனங்கள், மார்க்கெட்டிங் அமைப்புகள், கருப்பு இணையம் என்று சொல்லக்கூடிய ரகசிய இணையதள பக்கங்கள், ஆன்லைன் விளையாட்டுகள், இணையம் வழியாக இயங்கி கொண்டு இருக்கும் சூதாட்ட விளையாட்டுகள், இணைய லாட்டரிகள் போன்ற அனைத்தும் ராகுவின் கட்டுப்பாட்டில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

1995 ஆம் ஆண்டிற்கு பிறகு தான் ஒழுங்கீனம் பரவ ஆரம்பித்தது. மிகக் குறைந்த காலத்தில் மிக அதிகமான மக்களுக்கு கடுமையான பாதிப்பை தருதல், திடீர் அவமானம், திடீர் புகழ், அதிரடி அரசியல், பொருந்தாத உறவு, முறையற்ற உறவு, சட்ட விரோதமான செயல்கள், திடீரென்று மிகப்பெரிய செல்வந்தர் ஆகுதல், திடீரென்று பல ஆயிரம் கோடி சொத்துக்களை இழந்து விடுதல், கண்காணித்தல் மற்றும் யாரையும் நம்பாத குணம், எதிர்காலத்தைப் பற்றிய பயம், விரக்தி, வெறுப்பு, தனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற சுய இரக்கம், தனித்து வாழும் ஆண்கள் மற்றும் பெண்கள், தினசரி ஒவ்வொருவிதமான அவமானங்களை அனுபவிக்கும் விதமான வாழ்க்கை, ஸ்பெகுலேசன் என்று சொல்லக்கூடிய கொடுக்கல் – வாங்கல்,கமிஷன் கிடைக்கக் கூடிய தொழில்கள், தொலைதூரப் பயணங்கள் மற்றும் தொலைதூரப் பயணம் சார்ந்த தொழில்கள், இன்றைய பக்க விளைவு தரும் மேல்நாட்டு மருத்துவம் மற்றும் மருந்துகள், தீவிரவாதம், மிக அதிகமான அளவு உணர்ச்சிவசப்படும் இயல்பு, போதை மருந்துகள், மனதை அல்லது உடலை கட்டுப்படுத்தும் பக்க விளைவு கொண்ட மருந்துகளை அடிக்கடி கையாளுதல், அடிக்கடி துரோகத்தை செய்தல் அல்லது சந்தித்தல், மாந்திரீகம் மூலமாக யாராவது ஒருவருக்கு வசிய அடிமையாக சில வருடங்கள் வரை வாழும் இழிநிலை, அதிரடி அரசியல் மூலமாக மிக பெரிய அரசியல் விழிப்புணர்வு உண்டாக்குதல், மிகப் பெரிய தொழில் வீழ்ச்சி அல்லது எழுச்சி இவை அனைத்தும் ராகு பகவானின் குணங்கள் ஆகும்.

கலியுகம் செல்லச்செல்ல ராகுவின் ஆதிக்கம் பூமியில் அதிகரித்துக்கொண்டே செல்லும். ராகு பகவானுக்கு மிகவும் பிடித்த கிரகம் சுக்கிரன் ஆகும். சுக்கிரன் என்பது பூலோக ஜாதகப்படி இளம் பெண்களுக்கு உரிய காரகத்துவ கிரகமாகும்.

எனவே, சுக்கிரனுடைய தன்மையான சினிமா, டிவி, சிறு மற்றும் குறு வீடியோக்கள், நேரில் மற்றும் இணையத்தில் பரவும் வதந்திகள் போன்றவை மூலமாக சுக்கிர கிரகத்தின் ஆதிபத்தியம் பூமியில் மிகவும் வேகமாக பரவிக் கொண்டே இருக்கிறது.

சுக்கிரனுடைய ஆதிபத்தியம் பரவ பரவ பரவ இராகுவின் பிடி ஒவ்வொரு மனிதரையும் இறுக்கி பிடிக்க கூடிய சூழல் உண்டாகிவிடும். இப்படிப்பட்ட சூழ்நிலையை நாம் இப்பொழுது (1995 முதல்) அனுபவிக்க ஆரம்பித்து உள்ளோம்.

திடீர் அவமானம் அல்லது அதிரடி அரசியல் மூலமாக ஒரே நாளில் உலகப் புகழ் பெறுவதும் இந்த ராகுவின் காரகத்துவத்தால் மட்டுமே.

ராகு பகவானின் ஆதிக்கம் பூமியில் அதிகரிக்க அதிகரிக்க உபதேசம் செய்யக்கூடிய குருபகவானின் காரகத்துவங்கள் படிப்படியாக குறைந்து கொண்டே வரும் என்று பைரவர் சித்தர்கள் தெரிவிக்கிறார்கள்.

திடீரென்று உண்டாகும் புகழ் அல்லது மிகப் பெரிய செல்வம் செல்வ வளம் போன்றவைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நம்மில் பலருக்கு இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் திடீரென்று உண்டாகும் அவமானத்தை தாங்கும் மன உறுதி நம்மில் பலருக்கு இல்லை.

ராகு பகவான்

ஒவ்வொரு ராசியிலும் ராகு பகவான் பதினெட்டு மாதங்கள் பயணம் செய்வார். 21.3.2022 முதல் 18 மாதங்களுக்கு மேஷ ராசியில் ராகு பகவான் பயணம் செய்ய இருக்கின்றார்.

ஒருவருக்கு ஜென்மச்சனி எந்த அளவுக்கு துயரங்கள் தருகிறாரோ அதேபோல ஜென்ம ராகுவும் திடீர் அவமானம் திடீர் புகழ் அல்லது அரசியல் வெற்றி அல்லது லாட்டரி வெற்றியைத் தருகிறார்.

21.3.2022 முதல் 18 மாதங்களுக்கு மேஷ ராசியை கடக்கும் கால கட்டத்தில் மேஷ ராசி அன்பர்களுக்கு சூட்சுமமான சக்திகளின் ஆதிக்கம்/ஊடுருவுதல் உண்டாக வாய்ப்புகள் உண்டு.

ராகு பகவானால் உண்டாகும் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிப்பதற்கு ஒரு சுலப வழியை பைரவ சித்தர்கள் உபதேசமாக தெரிவித்துள்ளார்கள்.

உங்கள் ஊர் அல்லது தெருவில் அமைந்துள்ள உக்கிரமான பெண் தெய்வம் கோயிலுக்கு தினமும் சென்று 30 நிமிடங்கள் வரை பிரார்த்தனை செய்து விட்டு வருவது நல்லது.

உங்கள் தெருவில் அல்லது உங்கள் வீட்டுக்கு அருகில் பாம்பு புற்றுடன் கூடிய அம்மன் கோயில் இருந்தால் அங்கே சென்று அடிக்கடி அந்தப் புற்றுக்கு பாலும் முட்டையும் தானம் செய்து வருவது நன்று.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.30 முதல் மாலை 6 மணி வரை உள்ள நேரத்தில் பூமியில் உள்ள எல்லா உக்கிர பெண் தெய்வங்கள் உடைய சன்னதிக்கு ராகுபகவான் சூட்சுமமாக வருகை தருவது வழக்கம்.

நீங்கள் பின்வரும் அம்மன் கோயில்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 4.30 முதல் 6 மணிக்குள் ஏதாவது 30 நிமிடங்கள் வரை அமர்ந்து பிரார்த்தனை செய்து வருவது நன்று .

அந்த சமயம் போன் பேசாமலும் யாரிடமும் நேரில் பேசாமலும் அன்னையை எண்ணி பிரார்த்தனை செய்வதன் மூலமாக அங்கே அரூபமாக வரும் ராகு பகவான் உங்களுடைய பிரார்த்தனையை அன்னையிடம் சமர்ப்பித்து அவர் ஏற்றுக் கொள்வார். இதன்மூலமாக திடீர் அவமானம் அல்லது திடீர் துரோகம் வராமல் உங்களால் நிம்மதியாக வாழ முடியும்.

உங்கள் தெரு அல்லது ஊரில் ராஜராஜேஸ்வரி, துர்க்கை, ஜெய துர்க்கை, ராக்காச்சி, கன்னிகா பரமேஸ்வரி, செல்லியம்மன், அங்காள பரமேஸ்வரி, மகா வராகி, பத்திரகாளி, ருத்ர காளி, சொர்ண காளி, பட்டத்தரசி அம்மன், பெரிய மாரியம்மன் போன்ற உக்கிரமான பெண் தெய்வங்களில் ஏதாவது ஒரு பெண் தெய்வம் கோயில் இருந்தால் தினமும் சென்று அன்னையிடம் மன்றாடி வேண்டிக் கேட்டுக் கொள்ளுங்கள்.

ராகு திசை நடப்பில் உள்ளவர்களுக்கும் இதே பரிகாரம் பொருந்தும். ஜென்ம ராகு நடப்பில் உள்ளவர்கள் 21.3. 2022 வரை ரிஷப ராசிக்காரர்களுக்கும் 21.3.2022 முதல் அடுத்த 18 மாதங்களுக்கு மேஷ ராசிக்காரர்களுக்கும் இந்த பரிகாரங்கள் பொருந்தும்.

ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
9629439499

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.