புல்லாங்குழல் ஊதி சிவனை மயக்கியவர் – நாயன்மார்கள் கதை


வீணை என்றதும் நினைவுக்கு வருவது சரஸ்வதி தேவி, வேல் என்றால் முருகன், சூலம் என்றால் சிவன், பராசக்தி… இந்த வரிசையில் புல்லாங்குழல் என்றதும் நினைவுக்கு வருவது கிருஷ்ணர்தான். கிருஷ்ணரின் புல்லாங்குழல் இசைக்கு மயங்காத உயிரினம் ஏதுமில்லை. மாடு மேய்க்கும்போது கிருஷ்ணர் குழலூதினால் ஆடு,  மாடுகள், சிறுவர்கள் உட்பட புல் பூண்டுகூட அசையாமல் நிற்குமாம்.  அதேமாதிரிதான் ராவணனின் வீணை இசையும். ராவணனின் இசைக்கு அனைத்து உயிரினமும் மயங்கி நிற்குமாம். ராவணனின் வீணை இசைக்கு மயங்கியே அவன் கேட்ட வரத்தினை தந்தார் சிவப்பெருமான்.

அதேமாதிரி ஒருவரின் குழலிசைக்கு மயங்கி, எப்போழுதும் அவரின் இசையை கேட்டு மகிழ அவரை தம்மோடவே கைலாயத்துக்கு அழைத்து சென்றார். உடலை வருத்தி பக்தி செய்யாமல், சிவத்தொண்டு செய்யாமல் வெறும் இசையாலே நாயன்மார்கள் வரிசையில் இடம்பெற்ற ஆயனாரின் கதைய தெரிஞ்சுக்கலாம் வாங்க…

சோழ நாட்டில் உள்ள ஊர் திருமங்கலம். அந்த ஊரில் ஆயர்குலத்தில் ஆயனார் அவதரித்தார். தினமும் ஈசனை வணங்கி திருநீறு இட்டு, தன்னுடைய குலத்தொழிலான ஆவினங்களை மேய்க்க செல்வார். இறைவனின் பூசைக்கு பஞ்ச கவ்யத்தை வழக்கும் ஆவினங்களை பசு, காளை, கன்று என வகை வகையாக பிரித்து மேய விட்டுவிட்டு புல்லாங்குழல் வாசிப்பார். அவர்தம் இசையில் ஓம் நமச்சிவாய எனும் திருநாமம் கமலும்.

ஆயர் குலத்தோர் இயல்பிலே புல்லாங்குழல் வாசிப்பதில் வல்லவராய் இருப்பர். இவர்கள் இசை பசுக்காத்தலுக்குத் துணை செய்யும். இவ்விசையை கேட்டு குறிப்பிட்ட எல்லையை ஆவினங்கள் கடக்காது,. எல்லை கடந்த ஆவினக்கள் புல்லாங்குழல் இசைக்கேட்டு ஓடிவரும். அதுமட்டுமல்லாது மேய்ப்பவர்களுக்கும் சிறந்த பொழுதுபோக்காகவும் அமையும்.

ஒருநாள் திருநீறு அணிந்துக்கொண்டு ஆவினங்களுடன் முல்லை நிலத்திற்கு செல்கிறார். அப்பொழுது கார்காலம். முல்லை மலர் பூத்து நறுமணம் வீசுகின்றது. அங்கு பூத்துக் குலுங்கும் கொன்றை மலர்களை எல்லாம் பார்த்து அதனுள்ளே சிவப்பெருமானை காணுகின்றார். பக்தி பரவசமாகி புல்லாங்குழல் வாசிக்க துவங்குகிறார். ஐந்தெழுத்து மந்திரமான ’நமச்சிவாய’த்தை குழலோசையில் தருகின்றார்.

சுற்றுவட்டாரமெங்கும் குழலோசை எதிரொலிக்கின்றது. குழல்ஓசையைக் கேட்டு பசுக்கள் அருகில் வந்து நிற்கின்றன. இளங்கன்றுகள் தாய்மடியில் பால் குடிப்பதை நிறுத்திவிட்டு அப்படியே நிற்கின்றன. அங்கே காணப்பட்ட எருதுகளும் மான் போன்ற விலங்குகளும் அப்படியே அசையாமல் நிற்கின்றன. ஆடுகின்ற மயில்கள் அப்படியே ஆடாமல் நிற்கின்றன. காற்றும், மலர்களும் கூட அசையாமல் நிற்கின்றன. நமச்சிவாய நமச்சிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரம் மண்ணிலும் விண்ணிலும் ஒலிக்கின்றது. தேவர்கள்கூட அங்கே வந்துவிட்டனர்.

இசைக்கு மயங்கி ஈரேழுலகமும் வந்தப்பின்னும் தில்லை நடராசப்பெருமான் வராமல் இருப்பாரா?! அப்பனும் அம்மையும் ரிசப வாகனத்தில் காட்சியளiக்கின்றனர். உன் குழல் இசையை கேட்டு மயங்கினேன். என்றும் இந்த இசையின் சுகத்தை எனக்குத் தரவேண்டும். ஆகையால் எம்மோடு வா! என அழைக்க ஆயனாரும் இறைவனடி சேர்ந்தார்.

ஆயனார் திருவிளையாடல் நடந்த திருமங்கலம் என்ற திருத்தலம் லால்குடி ரயில் நிலையத்திலிருந்து பூவாலுர் வழியே வடமேற்கில் சுமார் 4கிமீ தொலைவில் உள்ளது. சிவப்பெருமானை வணங்கி பரசுராமன் பரசு என்ற ஆயுதத்தை பெற்றார். இங்கு கோயிலினுள் உட்சுற்றில் வடமேற்கே ஆனாயர் சிவப்பேறு எய்திய இடமுண்டு. அங்கே நாயனாருக்கு தனிக்கோயில் உண்டு. நாயனார் கொன்றை மரத்தின் நீழலிலே நின்று புல்லாங்குழல் வாசிக்கும் பாவனையில் மிக அழகான சிற்பமும் உண்டு.

ஆயனாரின் குருபூஜை கார்த்திகை மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் சகல சிவன் கோவிகளிலும் கொண்டாடப்படும்.

நாயன்மார்களின் கதை தொடரும்…

Published by
Staff

Recent Posts