20,000 சம்பள பாக்கி.. நைசாக நழுவிய தயாரிப்பாளரை வசமாக சிக்க வைத்த நடிகர் எம். ஆர். ராதா

தமிழ் சினிமாவின் மீது அதீத தொடர்புடன் இருக்கும் ரசிகர்கள் பலரும் தற்போது அதனை சுற்றி நடந்து வரும் விஷயங்களை பற்றியும், முன்பு நடந்த சினிமா வரலாற்று விஷயங்களை பற்றியும் நன்கு தெரிந்து வைத்து கொண்டிருப்பார்கள். இதில் சில விஷயங்கள் கேட்பதற்கு சாதாரணமான ஒன்றாக தெரிந்தாலும் இன்னும் பல விஷயங்கள், சற்று வியப்பை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.

அந்த வகையில், தன்னை ஏமாற்ற நினைத்த தயாரிப்பாளர் ஒருவருக்கு தக்க பதிலடியை பழம்பெரும் நடிகர் எம். ஆர். ராதா கொடுத்ததை பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம். தனது நடிப்பை எந்த அளவுக்கு சிறப்பாக வெளிப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு தனது திறனை வெளிப்படுத்துபவர் தான் எம். ஆர். ராதா.

கே சங்கர் இயக்கத்தில், எம். ஆர். ராதா நடித்து வந்த கைராசி படத்தின் படப்பிடிப்பில் அவர் நடித்த காட்சி இயக்குனருக்கு பிடிக்காமல் போனது. இதனால், அதனை மீண்டும் நடித்து கொடுத்ததுடன் அந்த நாள் செலவுக்கான பணத்தை தயாரிப்பாளரிடம் கொடுத்தார் எம். ஆர். ராதா. தனது நடிப்பு சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த அளவுக்கு தனது கடின உழைப்பை போட்டாலும், இன்னொரு பக்கம் தான் நடித்த படத்திற்காக சம்பள விஷயத்தில் தயாரிப்பாளர் பாக்கி வைக்காத அளவுக்கு கறாராக இருப்பாராம் எம். ஆர். ராதா.

அப்படி ஒரு படத்தில் நடித்த போது அதன் தயாரிப்பாளர் 20,000 ரூபாய் சம்பள பாக்கியை எம். ஆர். ராதாவிற்கு கொடுக்காமல் இருந்துள்ளார். அப்படி இருக்கையில், அதன் படப்பிடிப்பிற்காக அனைவரும் தயாராக இருக்க, ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ராதா வரவில்லை என தெரிகிறது. இதனால், தயாரிப்பு நிர்வாகி நேராக எம். ஆர். ராதா வீட்டிற்கு போய் படப்பிடிப்பிற்கு அவர் வராத காரணம் பற்றி கேட்டுள்ளார்.

அப்போது உடல்நிலை சரியில்லை என மேக்கப் மேன் மூலம் நிர்வாகியிடம் எம். ஆர். ராதா சொல்ல, இது பற்றிய விஷயமும் நேராக தயாரிப்பாளர் காதுக்கு சென்றுள்ளது. இதனால், பணம் கொடுக்காததன் பெயரில் தான் எம். ஆர். ராதா நடிக்க மறுக்கிறார் என்றும் தயாரிப்பாளருக்கு புரிந்துள்ளது. உடனடியாக மீதமிருந்த சம்பளத்தை கொடுப்பதற்காக எம். ஆர். ராதா வீட்டிற்கும் அவர் வந்து சேர்ந்துள்ளார்.

அப்போது, உடலில் ஒரு கட்டு போட்டு விட்டு, தளர்ந்து போய் வந்த எம். ஆர். ராதாவின் வேடத்தை பார்த்து மேக்கப் மேனே மிரண்டு போனார் என்று தான் சொல்ல வேண்டும். அம்மா, அப்பா என கத்திக் கொண்டே எம். ஆர். ராதா வந்துள்ளார். மேலும், என்னால் படப்பிடிப்பு நின்று விடக் கூடாது என்பதற்காக நான் தயாராகி வந்ததாகவும், தயாரிப்பாளரிடம் அவர் கூறி உள்ளார்.

ஆனால், படப்பிடிப்பை தள்ளி வைக்கலாம் என தயாரிப்பாளர் கூற, உடல்நிலை சரியில்லை என்றாலும் நடித்து தருகிறேன் என கூறியபடி சம்பள பாக்கியையும் அவர் வாங்கிக் கொண்டார். அது மட்டுமில்லாமல், அதன் படப்பிடிப்புக்காக காரில் சென்ற போது சம்பளம் வாங்குவதற்காக படத்திலும், நிஜ வாழ்க்கையிலும் நடிக்க வேண்டியுள்ளது என மேக்கப் மேனிடம் கூறினாராம் எம். ஆர். ராதா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...