அந்த சீன்ல நடிப்பு சரியில்ல.. புது தயாரிப்பாளர் சொன்ன குறை.. சிரித்த முகத்துடன் சிவாஜி சொன்ன வார்த்தை..

நடிகர் திலகம் என இந்தியாவில் உள்ள சினிமா ரசிகர்களால் புகழப்படுபவர் தான் நடிகர் சிவாஜி கணேசன். இவரது நடிப்பு திறமை எந்த அளவுக்கு உள்ளது என்பதை நாம் சொல்லி யாரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. அந்த அளவுக்கு தான் அறிமுகமான முதல் படமான பராசக்தியிலேயே தனி ஒரு நடிப்பு பரிமாணத்தை உண்டாக்கி இப்படியும் நடிக்கலாம் என ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்தவர் தான் சிவாஜி கணேசன்.

அவர் வசனம் பேசி ஒரு காட்சியில் நடித்தால் அவருடைய கண், காது, மூக்கு என அனைத்துமே அவருடன் சேர்ந்து நடிப்பதால் தன்னிகரற்ற ஒரு கலைஞனாகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தார். எம்ஜிஆர், சிவாஜி என இரு துருவங்கள் அந்த காலத்தில் போட்டி போட்டுக் கொண்டு பல படங்கள் நடித்து வந்தனர். இதில் எம்ஜிஆர் அரசியல் பக்கம் போக, சிவாஜியோ கமல்ஹாசன், ரஜினி உள்ளிட்ட அடுத்த தலைமுறை நடிகர்களுடனும் இணைந்து பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து 90 களின் இறுதியில் கூட விஜய் உள்ளிட்ட இளம் நடிகர்களுடன் சேர்ந்தும் பல சிறந்த கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தார் சிவாஜி கணேசன். அவர் நடிப்பில் புது பரிமாணம் காட்டிய பல்வேறு படைப்புகளை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். இதனிடையே கடந்த 1984 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வாழ்க்கை என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்தில் அவருடன் அம்பிகா, ஜெய்சங்கர், பாண்டியன், நம்பியார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

மேலும் பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சித்ரா லட்சுமணன் இந்த படத்தை தயாரிக்க, சிவி ராஜேந்திரன் படத்தை இயக்கியிருந்தார். முன்னதாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பித்த சமயத்தில் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனை சந்தித்த சிவாஜி கணேசன், படத்தில் தன்னுடைய நடிப்பு எப்படி இருக்கிறது என்றும் அனைத்து காட்சிகளும் ஓகே தானா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பல ஆண்டுகள் அனுபவம் இருந்த போதிலும் சிவாஜிகணேசன் இப்படி கேட்டது சித்ரா லட்சுமணனை மனம் நெகிழ வைத்திருந்தது. சற்று தயக்கத்துடன் ஒரு காட்சியில் சிவாஜி நடிப்பு குறைவாக இருந்ததாக சித்ரா லட்சுமணன் சுட்டிக்காட்டினார். சித்ரா லட்சுமணன் தயாரிப்பில் உருவான இரண்டாவது திரைப்படம் தான் வாழ்க்கை. ஆனால் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 242 வது திரைப்படம்.

அப்படி இருந்தும் புது தயாரிப்பாளர் சிறிய குறை இருப்பதாக சொன்னதால், அந்த ஒரே காட்சியில் நடிக்க சம்மதம் தெரிவித்தார் சிவாஜி. இது பற்றி பேசி இருந்த சித்ரா லக்ஷ்மணன், மற்ற எந்த நடிகராக இருந்தாலும் மீண்டும் சிலமுறை படத்தை பார்த்துவிட்டு காட்சி சரியில்லை என்றால் நடித்து தருகிறேன் என்று தான் சொல்லி இருப்பார்கள்.

ஆனால் நடிகர் சிவாஜி எந்தவித தயக்கமும் இல்லாமல் செட் போட்டு தயாராகுங்கள், நான் வந்து நடித்து தருகிறேன் என்றும் கூறியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் சிவாஜி எந்த அளவுக்கு சினிமாவை நேசித்தார் என்பதையும் இந்த சம்பவம் எடுத்துரைக்கிறது.

Published by
Ajith V

Recent Posts