இந்தப் பாட்டெல்லாம் இப்படித்தான் உருவாச்சா? கவிஞர் கண்ணதாசன் குறித்த சில விசித்திர உண்மைகள்

வாழ்க்கைத் தத்துவங்களை பாடல்களில் எழுதி உரைக்க வைத்த கவிஞர் கண்ணதாசன் தனக்கு ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளை மனதில் வைத்து பல பாடல்களை இயற்ற அவையும் கிளாசிக் ஹிட் லிஸ்டில் சேர்ந்தது. அவ்வாறு உருவான பாடல்கள் எது எந்த சூழ்நிலையில் இயற்றப்பட்டது தெரியுமா?

அந்த சிவகாமி மகனிடம் பாடல்

கவிஞர் கண்ணதாசனும், முன்னாள் முதல்வர் காமராஜரும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். சில பிரச்சனைகளால் இருவரும் பிரிந்துள்ளனர். ஆனால் மீண்டும் நட்டைப் புதுப்பிக்க ஆசைப்பட்ட கண்ணதாசனுக்கு அது ஏமாற்றமாக அமைந்தது. அதற்காக எழுதப்பட்ட பாடல்தான் அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி பாடல். காமராஜரின் தாய் பெயர் சிவகாமி அம்மாள் என்பதால் அதை நினைவில் வைத்து பாடல் இயற்றினார் கண்ணதாசன்

அவனுக்கென்ன தூங்கிவிட்டான் அகப்பட்டவன் நான் அல்லவா.

பொதுவாக, இசை அமைப்பாளர்கள் முதலில் இசையமைப்பார்கள், பின்னர் பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதுவார்கள், ஆனால் பெரிய இடத்து பெண் திரைப்படப் பாடல் இசையமைப்பிற்கு மெல்லிசை மன்னன் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் தூங்கியதால் தாமதமாக வந்துள்ளார். எனவே இயக்குனர் கண்ணதாசனை முதலில் பாடல் வரிகளை எழுதச் சொல்லியிருக்கிறார், எனவே கண்ணதாசன் இந்தப் பாடலை இப்படி எழுதியதாக வரலாறு.

டி.எம்.எஸ்-ம், கண்ணதாசனும் புகழின் உச்சியில் இருக்க இருவருக்கும் பாடலா, பாடியதா என்ற போட்டி ஏற்பட கவிஞர் திருவிளையாடல் படத்திற்காக டி.எம்.எஸ் பாடிய இந்தப் பாடலை எழுதுகிறார். பாட்டும் நானே பாவமும் நானே பாடும் உன்னை நான் பாடவைத்தேனே.

இந்தப் பாடல் சிங்கப்பூர் மலர் கண்காட்சியில் படமாக்கப்படும், எனவே மே மாதத்திற்கு முன்பே இந்தப் பாடல் எங்களுக்குத் தேவை என்று இயக்குனர் கவிஞர் கண்ணதாசனிடம் கேட்க்க. கவிஞர் இந்தப் பாடலை இப்படி எழுதினார்.

அன்பு நடமாடும் கலைக் கூடமே

ஆசை மழை மேகமே

கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே

கன்னித் தமிழ் மன்றமே

இந்தப் பாடலின் ஒவ்வொரு வாக்கிய முடிவும் மே ஒலியுடன் முடிவது தனிச்சிறப்பு.

கவிஞர் கண்ணதாசனுக்கு தனது நண்பரின் வெளிநாட்டு கார்மீது ஆசை வர அதை வாங்க கண்ணதாசன் தனது நண்பருக்குச் சிறிது முன்பணத்தை கொடுக்கிறார். கவிஞர் அதிக பணம் கடன் வாங்கியதை அறிந்ததும் அவரது நண்பர் அந்தக் காரைக் கொடுக்கத் தயாராக இல்லை. ஏமாற்றத்துடன் திரும்பி வந்து பணக்கார குடும்பம் படத்துக்கு இந்தப் பாடலை எழுதினார்.

பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக

நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக

இப்படி ஒவ்வொரு பாடலிலும் தனித்துவத்தை ஏற்படுத்தி அதற்குப் பின்னால் ஒருசில வரலாறுகளையும் வைத்திருந்தார் கவிஞர் கண்ணதாசன்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews