பங்குனி உத்திரம் வரலாறு, முக்கியத்துவம், குலதெய்வ வழிபாடு மற்றும் சிறப்பம்சங்கள்…

பங்குனி உத்திரம் இந்துக்களுக்கு மிக முக்கியமான நாளாகும். ராமர்-சீதை, முருகன்-தெய்வானை, திருவரங்கநாதர்-ஸ்ரீ ஆண்டாள் ஆகிய தெய்வங்களின் திருமணங்கள் பங்குனி உத்திரத்தன்று நடந்தவைகள் ஆகும். அதனால் இந்த தினம் திருமண விரதம் என்றும் போற்றப்படுகிறது. திருமணம் ஆகாத இளைஞர்கள் மற்றும் கன்னிகள் இந்த நாளன்று சிவபெருமானையும், முருகப்பெருமானையும் திருமண கோலத்தில் வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். சுமங்கலிகள் இந்த நாளில் புது தாலிக் கயிற்றை மாற்றி பெருக்கிகொள்வது வழக்கம்.

பங்குனி உத்திரம் முருகனுக்கு முக்கியமான தினமாக கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதங்களில் 12 ஆம் மாதமாக வருவது பங்குனி. நட்சத்திரங்களில் 12 ஆம் நட்சத்திரமாக வருவது உத்திரம். ஆதலால் ஆறு முகமும் பன்னிரண்டு கைகளும் கொண்ட முருகனுக்கு உரிய தினமாக திகழ்கிறது. மேலும் அசுரன் தாரகாசுரனை போரில் வென்று இந்த தினத்தில் முருகன் தெய்வானையை கரம் பிடித்ததால் எல்லா முருகப்பெருமான் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இந்த பங்குனி உத்திர தினத்தன்று குலதெய்வங்களை வழிபடுவது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்த குடுபங்களுக்கு ஒரு குலதெய்வம் இருக்கும். தென் தமிழகத்தில் ஒவ்வொரு ஊர் எல்லையிலும் அய்யனார் வடிவில் குலதெய்வங்கள் இருப்பார்கள். வருடம் ஒரு முறை ஒவ்வொரு குடும்பத்தாரும் அவரவர் குலதெய்வங்களை பங்குனி உத்திரத்தன்று நேரில் சென்று வழிபட்டு வருவர். பிழைப்புக்காக வெளியூர் சென்றிருந்தாலும் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் தங்களது சொந்த ஊரின் எல்லையில் இருக்கும் குலதெய்வத்தைக் காண ஓடோடி வந்துவிடுவர்.

ஒவ்வொரு குடும்பத்திற்கு உரிய குலதெய்வங்கள் அந்தந்த குடும்பத்திற்கு காவலாக இருக்கும் எனவும், எந்த ஒரு காரியத்தை தொடங்கும் முன்னர், குலதெய்வத்தை வழிபட்டு தொடங்குவது இரட்டிப்பு நன்மையை தரும் என்பது நம்பிக்கை. ஒரு குடும்பம் வம்சம் வம்சமாக தழைக்க குலதெய்வத்தின் அருள் வேண்டும். பெண்களுக்கு பிறந்த வீட்டு குலதெய்வம் மற்றும் புகுந்த வீட்டு குலதெய்வம் என்று இரண்டு உண்டு. பெண்கள் குலதெய்வத்தை வழிபட்டு வந்தால் வீட்டில் ஐஸ்வர்யம் உண்டாகும்.

தமிழகத்தின் தென்கோடியில் அமைந்துள்ள திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் பங்குனி உத்திர திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடக்கும். அந்த பகுதிகளில் குலதெய்வ கோவில்களை சாஸ்தா கோவில்கள் என்றும் கூறுவர். சொந்த பந்தங்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்து சந்தோஷமாக வழிபடுவர். நம் வாழ்க்கையின் முக்கியமான வழிபாடு குலதெய்வ வழிபாடு. அதை கடைபிடிப்பதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews