ஒரே வானம் ஒரே பூமி.. அமெரிக்காவை சுற்றி வந்த முதல் தமிழ் படம்…!!

முதல்முறையாக ஒரு தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்தது என்றால் அதுதான் ஜெய்சங்கர், கேஆர் விஜயா, சீமா நடித்த ஒரே வானம் ஒரே பூமி. இந்த படம் கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இயக்குனர் ஐவி சசி இயக்கத்தில் எம்எஸ் விஸ்வநாதன் இசையில் உருவான இந்த படத்தில் ஜெய்சங்கர், கேஆர் விஜயா, சீமா, விகே ராமசாமி, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் அமெரிக்காவில் படமாக்கப்பட்ட போது பத்மினி அங்கே தனது கணவருடன் வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் அவரையும் இயக்குனர் சசி சந்தித்து சில காட்சிகளில் நடிக்க வைத்தார்.
அமெரிக்காவில் முதல் முதலாக எடுக்கப்பட்ட படம் என்ற டைட்டில் உடன் வெளியான இந்த படத்தில அமெரிக்காவுக்கு செல்லும் காதலர்களுக்கு அங்குள்ள ஒரு டாக்டரால் நடக்கும் பிரச்சனையும் அந்த பிரச்சினையிலிருந்து அந்த காதலர்கள் எப்படி மீண்டு வந்தார்கள் என்பதுதான் கதை.

ஜெய்சங்கர் இந்த படத்தில் அதிரடி ஆக்சன் ஹீரோவாக வழக்கம்போல் நடித்திருந்தார். அந்த காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள காட்சிகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்த படம் அமெரிக்காவின் ஒவ்வொரு தெருவிலும் புகுந்து எடுக்கப்பட்டிருந்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்திருந்தது.

குறிப்பாக அமெரிக்காவில் உள்ள கென்னடி விமான நிலையத்தில் படமாக்கப்பட்ட காட்சிகளை பார்த்து ஆகா என்று சொல்லாதவர்களே இருக்க முடியாது. வளைந்து வளைந்து செல்லும் ரயில்கள், தலைகீழாக சுற்றும் கார்கள், ஒரே எந்திரமயமாக இருக்கும் அமெரிக்காவை முழுக்க முழுக்க அலசி பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தினார்கள்.

அமெரிக்காவில் ஜெய்சங்கர் மற்றும் சீமா நடித்த காட்சிகள் தான் ஏராளமாக படமாக்கப்பட்டது என்பதும் இருவருமே அமெரிக்க தெருக்களில் ஆடி பாடும் பாடல்கள் மிகுந்த வரவேற்பு பெற்றது. எம் எஸ் விஸ்வநாதன் இசையில் இந்த படத்தில் ஐந்து பாடல்களில் இடம் பெற்றிருந்தன. சொர்க்கத்திலே நாம் என்ற பாடல், ஒரே வானம் ஒரே பூமி என்ற பாடல் நல்ல வரவேற்பு பெற்றது.

மேலும் இந்த படத்தில் நயாகரா நீர்வீழ்ச்சியையும் மிக அருமையாக படமாக்கி இருப்பார்கள். நீர்வீழ்ச்சி அருகே ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது. அதிரடி ஆக்சன், காமெடி, ரொமான்ஸ் என அனைத்து அம்சங்களையும் பொருந்திய வகையில் கதையம்சத்தை ஐவி சசி எடுத்திருந்தார்.

இந்த படத்தின் கதை மற்றும் நடிப்பு பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் அமெரிக்க காட்சிகளை பார்ப்பதற்காகவே பலர் இந்த படத்தை பார்த்தார்கள். இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது அமெரிக்காவிலே சுற்றிப் பார்த்து விட்டு வந்தது போல் இருந்தது என்று பலர் விமர்சனம் செய்தார்கள்.

ஊடகங்களும் கதை மற்றும் நடிப்பை பெரிதாக பாராட்டாமல் அமெரிக்காவை சிறப்பாக படம் ஆக்கிய ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு என்பவரை மிகச் சிறப்பாக பாராட்டினர். மொத்தத்தில் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அமெரிக்காவில் சென்று படம் எடுத்து சாதனை செய்த ஒரே வானம் ஒரே பூமி திரைப்படம் வசூல் அளவிலும் வெற்றி படமாக அமைந்தது.

இதன் பிறகு பல தமிழ் திரைப்படங்கள் அமெரிக்காவில் படமாக்கப்பட்டது. விடுதலை, வேட்டையாடு விளையாடு உட்பட ஏராளமான படங்கள் அமெரிக்காவில் படமாக்கப்பட்டது.

Published by
Bala S

Recent Posts