கவலை மறந்து சிரிக்க வேண்டுமா.. நாகேஷின் இந்த 7 திரைப்படங்கள் போதும்!

ஒரு திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக சாதனை படைக்க அந்த படத்தில் நடித்த ஹீரோவுக்கு எவ்வளவு பங்கு உள்ளதோ அதே அளவு அந்த படத்தில் நடித்த காமெடி நடிகர்களுக்கும் பங்கு உள்ளது. ஆக்சன் படங்களிலும் குடும்ப ரசிகர்களை ஈர்ப்பது அந்த படத்தில் இருக்கும் காமெடி காட்சிகள் மட்டுமே. காமெடிக்காக திரையில் பல நாட்கள் ஓடிய முன்னணி ஹீரோக்களின் படங்களும் தமிழ் சினிமாவில் உள்ளது. அந்த அளவிற்கு ஒரு படத்தின் விறுவிறுப்பை குறைக்காமல் தேவைப்படும் இடங்களில் மக்களை மனதார சிரிக்க வைக்கும் காமெடி காட்சிகளுக்கு கோடி கணக்கான ரசிகர்கள் இன்றும் உள்ளனர்.

அந்த வகையில் எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்து நகைச்சுவை என்றாலே நம் நினைவுக்கு வருவது நாகேஷ் அவர்கள்தான். அவரது நகைச்சுவைகள் அனைத்தும் சிரிக்க கூடியதாக மட்டும் அல்லாமல் சில நேரங்களில் சிந்திக்க கூடியதாகவும் அமைந்திருக்கும். அப்படிப்பட்ட நாகேஷின் தரமான நகைச்சுவை படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முதலில் பார்க்கும் திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இந்த படத்தில் எப்படியாவது ஒரு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்று போராடும் இளைஞனாக நாகேஷ் படத்தில் நடித்திருந்தாலும் இவர் வரும் காட்சிகள் அத்தனையுமே சிரிப்புதான். அதிலும் அவருடைய அப்பா கேரக்டரில் நடித்த பாலையாவுடன் வரும் காட்சி ஒன்று இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிகை சச்சு உடன் மலர் என்ற முகம் ஒன்று மலரட்டும் பாடலுக்கு நாகேஷ் ஆடி இருப்பது பயங்கர வரவேற்பு பெற்றது.

இரண்டாவது திரைப்படம் திருவிளையாடல். நாகேஷ் என்றாலே தமிழ் சினிமா இருக்கும் வரை திருவிளையாடல் படத்தின் பெயரில் நம் நினைவில் இருப்பார். இரண்டு மகா கலைஞர்களுக்கு நடுவே நடந்த நடிப்புப் போட்டி என்று கூட இந்தப் படத்தை சொல்லலாம். சிவாஜி கணேசன் முன்பே அப்படி ஒரு நடிப்பை நடித்திருப்பார் நாகேஷ். படம் முழுக்க நம்மை விட நாகேஷ் அவர்கள் தான் அதிகம் ஸ்கோர் செய்வார் என்று தெரிந்தும் அந்த காட்சியை வெட்டாமல் சிவாஜி வைக்க சொன்னதாக கூட செய்திகள் உண்டு.

மூன்றாவது திரைப்படம் எதிர்நீச்சல். இயக்குனர் இமயம் பாலச்சந்தரின் மாடிப்படி மாதவனையும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. 5 குடும்பங்கள் குடியிருக்கும் ஒரு வீட்டில் மாடிப்படிக்கு கீழே இருக்கும் சின்ன இடத்தில் வசித்துக் கொண்டு அவர்கள் சொல்லும் வேலையை செய்து பிழைப்பை ஓட்டிக் கொண்டே கல்லூரி படிக்கும் மாணவனாக நாகேஷ் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பில் அசத்தி இருப்பார்.

நான்காவதாக பார்க்கும் திரைப்படம் தில்லானா மோகனாம்பாள். நாகேஷ் அவர்கள் காமெடி மட்டும் இல்லை வில்லத்தனத்தையும் கையில் கொடுத்தால் அத்தனை பேரையும் கதற விட்டு விடுவார் என்பதை நிரூபித்த படம் தான் தில்லானா மோகனாம்பாள். இந்த படத்தில் சவடால் வைத்தியராக நகைச்சுவை கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பெயர் பெற்றார்.

ஒரே நேரத்தில் ஆஸ்கர் பரிந்துரைக்காகவும், தேசிய விருதுக்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சிவாஜி படங்கள்!

ஐந்தாவது படம் அதே கண்கள். அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய திரில்லர் படமாக வெளியானது தான் அதே கண்கள். இந்த படத்தில் ரவிச்சந்திரன் நண்பனாக நகரில் வாடகை வீடு கிடைப்பதற்காக பெண் கெட்டபில் நடித்திருப்பார். வீட்டின் ஓனர் நாகேஷ் உண்மையான பெண் என நினைத்துக் கொண்டு அடிக்கும் லூட்டி வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும்.

ஆறாவது திரைப்படம் பட்டணத்தில் பூதம். அந்த காலகட்டத்தில் வெளியான ஃபேன்டஸி படம் தான் பட்டணத்தில் பூதம். அந்த படத்தில் நாகேஷ் காமெடி என்று கூட சொல்லிவிட முடியாது இரண்டாவது கதாநாயகனாக ஜெய்சங்கருடன் இணைந்து நடித்திருப்பார்.பூதத்துடன் படம் முழுக்க நாகேஷ் அவர்கள் அடிக்கும் லூட்டி மற்றும் அவரது காமெடி காட்சிகள் படம் முழுக்க ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும்.

ஏழாவதாக நாம் பார்க்கும் திரைப்படம் சர்வர் சுந்தரம். நாகேஷ் முழுக்க முழுக்க கதாநாயகனாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் சர்வர் சுந்தரம். ஒரு நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்து ஓட்டலில் வேலை செய்யும் நாகேஷுக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பெரிய நடிகனாக மாறிய பின் அவர் வாழ்க்கையில் நடக்க மாற்றங்கள் தான் இந்த படத்தின் கதை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews